படுகொலைகளை கண்டித்து யாழிலிருந்து கொழும்புக்கு நடைபயணம்

walkபுங்குடுதீவு மாணவி வித்தியா மற்றும் கொட்டஹதெனிய சிறுமி சேயா ஆகியோரின் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க கோரி, இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று நடைபயணம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இருந்து இன்றுகாலை 7.30 அளவில் இந்த நடைபயணம் ஆரம்பமாகியது. மேலும் 12ம் திகதி வரை இது தொடரவுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண ஊழியர்கள் ஒன்றிணைந்து இந்த நடை பயணத்தினை ஏற்பாடு செய்துள்ளனர். இன்று ஆரம்பமாகிய இந்த நடைபயணம் கிளிநொச்சில் நிறைவடைந்து, நாளை கிளிநொச்சியில் இருந்து வவுனியா வரையும் சென்று நாளை மறுதினம் வவுனியாவில் இருந்து அநுராதபுரம் சென்று அங்கிருந்து கொழும்பை நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், நடைபயணம் கொழும்பை சென்றடைந்ததும், ஜனாதிபதிக்கு இரு கொலைகள் குறித்தும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு மரணதண்டனை விதிக்கக் கோரிய மகஜர் ஒன்றினையும் கையளிக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண முகாமையாளர் செ.குணபாலசிங்கம் தெரிவித்தார். இந்த நடைபயணத்தில் படுகொலையான மாணவி வித்தியாவின் தாயாரும் கலந்துகொண்டுள்ளார்.

இலங்கையில் முதலீடு செய்யுமாறு ஜப்பான் வர்த்தகர்களுக்கு அழைப்பு-

japan metஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இருதரப்பு பேச்சுவார்த்தைகள் சிலவற்றில் கலந்துகொள்ளவுள்ளார். பிரதமர் ரணில் விக்மரசிங்கவின் ஜப்பான் விஜயத்தின் இரண்டாம் நாளில் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் பாமியோ கிஷிடாவை சந்தித்தார். இலங்கைக்கு உதவி புரிய தயாராக இருப்பதாக வெளவிவகார அமைச்சர் இதன்போது தெரிவித்தார். அதன் பின்னர் பிரதமர் டோக்கியோ நகரில் இடம்பெற்ற இடம்பெற்ற ஜப்பான் – இலங்கை வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டார். புதிய அரசாங்கத்தின் கீழ் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு வலுப்படுத்துவரும் இலங்கைகு தேவையான பொருளாதார உதவிகளை வழங்குவதற்கு தயார் எனவும், ஜப்பான் – இலங்கை வர்த்தக மாநாட்டின் தலைவர் ததயுக்கி ஷிசிக்கி தெரிவித்தார். இலங்கையின் அடையாளத்தினை உறுதிப்படுத்தும் வகையில் அரசியலமைப்புக்கு ஏற்றவகையில் அரசியல் பொருளாதாரத்தினை மறுசீரமைப்பதற்கு புதிய அரசு தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மாநாட்டில் தெரிவித்தார். இலங்கையில் முதலீடு செய்யுமாறு ஜப்பான் வர்த்தகர்களுக்கு பிரதமர் ரணில் அழைப்பு விடுத்துள்ளார்.

எந்தவொரு நாடும் இலங்கைக்கு எதிராக இல்லை – ஜனாதிபதி-

 r54666உலகின் எந்தவொரு நாடும் தற்போது இலங்கைக்கு எதிரான கொள்கையை கொண்டிருக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எனவே, அபிவிருத்திக்கான சிறந்த யுகம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். புதிய அரசாங்கம் வறுமையை ஒழிப்பதற்கு முன்னுரிமை வழங்கி செயற்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார். உணவு உற்பத்திக்கான தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி இரணைமடு – வட்டக்கச்சியில் இன்று முற்பகல் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் வட மாகாண முதலமைச்சரும் கலந்து கொண்டார். இதன்போது உரையாற்றிய வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், வடக்கு கிழக்கு மக்கள் சுதந்திரத்துடனும், மதிப்புடனும் வாழ வேண்டிய தேவையை நிறைவேற்ற வேண்டும் என கோரினார். இதனையடுத்து, உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நோக்கில் ஜனாதிபதியும், விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்கவும் வயலில் இறங்கி நாற்று நடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதேவேளை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இதுவரை காலமும் இராணுவத்தின் கட்டுபாட்டில் இருந்த 576 ஏக்கர் பரப்பளவு கொண்ட மக்களின் காணிகள் இன்று ஜனாதிபதியினால் உரியவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இரணைமடுவில் இடம்பெற்ற உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம் 2016-2018இன் ஆரம்ப நிகழ்வின்போதே, மக்களுக்கு காணிகளும் வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டம் பரவிபாஞ்சான் உள்ளிட்ட சில பிரதேசங்களில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 437 ஏக்கர் நிலமும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 137 ஏக்கர் நிலமும் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

6வது நாளாக தொடரும் பட்டதாரிகளின் உண்ணாவிரதம்-

porattamஅம்பாறை மாவட்ட வேலையற்ற தமிழ் பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்கப்படாததை கண்டித்து கடந்த புதன்கிழமை தொடக்கம் திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாணசபைக்கு முன்னாள் அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் மழை, வெயிலுக்கு மத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 100ற்கும் மேற்பட்ட தமிழ் பட்டதாரிகள் இப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாhரிகள் சங்கத்தின் செயலாளர் பா. தாட்சாயன் கருத்து தெரிவிக்கையில், 6வது நாளகாக இன்று தொடரும் இப் போராட்டத்தில் இதுவரை பலர் மயக்கமடைந்து திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று தற்பொழுதும் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப் போராட்டத்துக்கு முதல் 2 தடவைகள் இங்கே நாங்கள் போராட்டம் நடத்தியும் கிழக்கு மாகாண முதலமைச்சர் கூறிய வாக்குறுதியை எங்களுக்கு நிறைவேற்றவில்லை. இந்த நிலையில்; முதலமைச்சர் எங்களை சந்தித்து கதைத்தார் அவரிடம் நாங்கள் கூறிய விடயம் எழுத்து மூலமான உறுதிமொழி தந்தால் மாத்திரமே எமது உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுவோம். அதுவும் கால வரையரை குறிப்பிட வேண்டும். பாகுபாடு இல்லாமல் அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்கப்பட வேண்டும் என அவரிடம் நாம் குறிப்பிட்ட போது அவர் அதற்கு சாதகமான பதில் தரவில்லை. இந்த நிலையில் நாங்கள் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றோம். மட்டக்களப்பு, திருகோணமலையில் புறக்கணிக்கப்பட்ட தமிழ் பட்டதாரிகளும், இப் போராட்டத்தில் இணையுமாறும் இனத்தின் அடிப்படையில் நாம் புறக்கணிக்கப்படுவதால் பெற்றோர்களும் இப் போராட்டத்தில் எங்களுடன் இணையுமாறு செயலாளர் கோரிக்கை விடுத்தார்.

ஐ.நா.வின் பிரதிநிதிகள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திப்பு-

eastஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப்பிரதிநிதியின் குழுவினருக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சருக்குமிடையிலான சந்திப்பு இன்று காலை 10.00 மணிக்கு கிழக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீர் நசீர் அகமட், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி, அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார மற்றும் திணைக்களங்களின் செயலாளர்கள் இதில் சந்திப்பில் பங்கேற்றனர். கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பில் குறித்த சந்திப்பில் ஐக்கிய நாடுகள் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி உட்பட இருபது வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கிழக்கு மாகாண சபையில் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் மற்றும் சம்பூர் மக்களின் வாழ்வாதார விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. இதில் உலக வங்கி, உலக உணவுத்திட்டம், யுனிசெப் போன்ற வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். விசேடமாக கிழக்கு மாகாணத்தில் வாழ்வாதார திட்டங்கள் மேற்கொள்வது, சம்பூர் மக்களின் மீள்குடியேற்றத் திட்டங்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும். வேலையில்லாமல் இருக்கின்ற இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தல், அத்தோடு வெளிநாடு செல்லும் பணிப் பெண்களின் விகிதத்தை குறைத்தல் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சரினால் எடுத்துக் கூறப்பட்டது அதற்கு ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதியினர் கொண்ட குழுவினர் தாங்களும் அதற்கான வேலைத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்தனர்.

உலக குடியிருப்பு தினம் இன்று-

kudiyirupuஉலக குடியிருப்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில் நாட்டிலுள்ள சுமார் 12 லட்சம் குடும்பங்களுக்கு வீடு தேவை என தேசிய வீடமைப்பு அதிகார அதிகார சபை தெரிவித்துள்ளது. இதனைக் கருத்திற் கொண்டு ஒவ்வொரு வருடமும் சுமார் 50 லட்சம் வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கவுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் லக்விஜய சாகர பலன்சூரிய தெரிவித்தார். 1986ஆம் ஆண்டு தொடக்கம் ஒக்டோர் மாதம் வருகின்ற முதலாவது திங்கட்கிழமையை உலக குடியிருப்பு தினமாக ஐக்கிய நாடுகள் அமைப்பு பிரகடனப்படுத்தியுள்ளது. குடியிருப்பு தினத்தை முன்னிட்டு மாளிகாவத்தை வீடமைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு குடியிருப்பு தின நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. சுதந்திர பூமியில் அனைவரும் என்ற தொனிப்பொருளில் இம்முறை குடியிருப்பு தினம் கொண்டாடப்படுவதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் லக்விஜய சாகர பல்சூரிய குறிப்பிட்டார். இதேவேளை, குடியிருப்பு தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரில் வீட்டுரிமை கிடைக்கப்பெற்ற சுமார் ஆயிரம் குடும்பங்களுக்கு உறுதிப்பத்திரம் வழங்கப்படும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிரதகீத் எக்னெலிகொட தொடர்பில் கிரித்தலே முகாமில் விசாரணை-

prageeth ekneligodaஊடகவியலாளர் பிரதகீத் எக்னெலிகொட காணாமற்போனமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கிரித்தலே இராணுவ முகாமிற்கு கொண்டுசெல்லப்பட்டு மேலதிக விசாரணை நடத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த 28ஆம் திகதி நீதிமன்றத்திடம் பெறப்பட்ட உத்தரவிற்கு அமைய இம்மாதம் 3 ஆம் திகதிக்கும் 13 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் சந்தேகநபர்கள் கிரித்தலே இராணுவ முகாமிற்கு கொண்டுசெல்லப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரகீத் எக்னெலிகொட காணாமற்போனமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இதுவரை 11 சந்தேகநபர்களை கைது செய்து தடுத்து வைக்கும் உத்தரவின் பேரில் விசாரணை நடத்திவருகின்ளன.

சேயாவை நானே கொன்றேன்: கொண்டையாவின் சகோதரர் வாக்குமூலம்-

kondaiya brosஐந்து வயது சிறுமியான சேயா சந்தவமியை தானே கொலை செய்ததாக கொண்டையா என்றழைக்கப்படும் துனேஷ் பியசாந்தவின் மூத்த சகோதரர் ஒத்துக்கொண்டார் என்று குற்றப்புலனாய்வு பிரிவினர் அறிவித்துள்ளனர். சேயா சந்தவமியின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கொண்டையா என்றழைக்கப்படும் துனேஷ் பியசாந்த மற்றும் அவரது அண்ணா ஆகிய இருவரும் மினுவாங்கொட நீதவான் நீதிமன்றத்தில் சற்றுமுன்னர் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போதே, கொண்டையா, நீதவானிடம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் என்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் அறிவித்துள்ளனர். மினுவாங்கொட நீதவான் நீதிமன்றத்தின் பாதுகாப்பு வழமையை விடவும் அதிகரிக்கப்பட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.