Header image alt text

human right.....இலங்கை தொடர்பான உத்தேச வரைவுத் தீர்மானம் தொடர்பாக தமிழ் அரசியற் கட்சிகள், சமூக அமைப்புக்கள் மற்றும்  தொழிற் சங்கங்கள் விடுக்கும் கூட்டறிக்கை .

29 செப்டம்பர் 2015 .

‘இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் மனித உரிமைகளையும் மேம்படுத்தல்’ எனும் தலைப்பில் செப்ரெம்பர் 30ம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கும் உத்தேச பிரேரணை தொர்பாக இந்த கூட்டு அறிக்கையை வெளியிடுகிறோம். Read more

அமெரிக்க யோசனைக்கு ஆதரவளிப்பது காட்டிக்கொடுக்கும் செயல்-தினேஷ்-

dineshஜெனீவா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா முன்வைத்த யோசனைக்கு இலங்கை உடந்தையாக செயற்படுவது காட்டிக்கொடுக்கும் செயல் என மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன குற்றஞ்சாட்டியுள்ளார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கை வரலாற்றில் இவ்வாறான காட்டிக்கொடுப்புகளை இதற்கு முன்னர் தாம் காணவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, குறித்த செய்தியாளர் சந்திப்பில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச, கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். போர்க் காலத்தில் மனிதவுரிமைகள் மீறப்பட்டிருந்தால் அதற்கு உள்நாட்டு நீதி கட்டமைப்பின் அடிப்படையிலேயே தீர்வை காண முடியும் என விமல் வீரவன்ச இதன்போது தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி தேர்தல்கள் திட்டமிட்டபடி நடைபெறும்-பிரதமர்-

ranilஎதிர்வரும் மார்ச் மாதமளவில் உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார். இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர், உள்ளுராட்சிமன்றத் தேர்தல்கள் கட்டாயமாக மார்ச் மாதமளவில் நடத்தப்படும். உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை பிற்போடுவதற்கு எந்வொரு காரணமும் இல்லை. நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் கைகோர்த்துள்ளன. பிரதான கட்சிகள் கைகோர்த்துள்ளதால் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை ஒத்திவைப்பதாக கருத முடியாது. உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுக்கு மத்தியில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளது. இத் தேர்தலில் தேசிய அரசாங்கத்தில் கைக்கோர்த்துள்ள கட்சிகள் இரண்டும் தனித்தனியே போட்டியிடும் என அவர் மேலும் கூறினார். பிரதமரின் கருத்துக்கு இரண்டு பிரதான கட்சிகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.

வெளிநாட்டு நீதிபதிகள், இலங்கையின் சட்டத்தின்கீழ் செயற்படவேண்டும்-

ranil (5)இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்யும் நீதிமன்றத்தில், வெளிநாட்டு நீதிபதிகளோ நிபுணர்களோ பங்கேற்பார்களாயின், அவர்கள் இலங்கை சட்டத்தின் பிரகாரமே செயற்படவேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு பங்கேற்கும் நீதிபதிகள் மற்றும் நிபுணர்களுக்கு, இலங்கை நாடாளுமன்றத்தின் மூலமாகவே அனுமதி வழங்கப்படும் என்றும் இது, இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரமே மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு ஹைட்பார்க்கிலுள்ள சீரமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தைநேற்று பொதுமக்களிடம் கையளித்து, அங்கு அமைக்கப்பட்ட இரண்டு மாடி கட்டடத்தை திறந்து வைத்து, உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால பரக் ஒபாமா சந்திப்பு-

maithri obamaஅமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவை, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் 70ம் அமர்வுகளில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் உலகத்தலைவர்களுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமையகத்தில் நேற்று விருந்துபசாரமொன்று வழங்கப்பட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இந்த விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்துபசாரத்திற்கு இடைநடுவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பரக் ஒபாமாவை சந்தித்து கைலாகு செய்து சொற்ப நேரம் பேசியுள்ளார்.

வவுனியா வர்த்தக நிலையத்தில் கொள்ளை-

robbery (4)வவுனியா சூசைப்பிள்ளையார் கோவில் வீதியில் அமைந்துள்ள செல்வம் மோட்டோர்ஸ் வர்த்தக நிலையத்தில் நேற்று இரவு கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்றுகாலை 08.00 மணிக்கு வர்த்தக நிலையத்தை திறப்பதற்கு வந்தபோது எனது கடையின் 08 பூட்டுக்களும் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இது தொடர்பாக பொலிஸிற்கு தகவலை வழங்கியதை அடுத்து அவர்களின் உதவியுடன் 700,000 ரூபா பணம் கொள்ளையிடப்பட்டதை அறியக் கூடியதாக இருந்தது வர்த்தக நிலைய உரிமையாளர் கிருபாகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா குற்றப்புலனாய்வு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஊடகவியலாளர் பிரகீத் வழக்கு, மனுவை விசாரிக்க அனுமதி-

prageeth ekneligodaஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில், காவலில் வைக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்கள் நால்வரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. எக்னலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில், லுதினர் கர்ணல் சிறிவர்த்தன, கோப்ரல் அனுர ஜெயலால் உள்ளிட்ட நான்கு இராணுவ வீரர்கள் இரகசியப் பொலிஸாரால் நியாயமான காரணம் இன்றி காவலில் வைக்கப்பட்டுள்ளதாக, மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனால் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விடயங்களை ஆராய்ந்த மேன் முறையீட்டு நீதிமன்றம் மனுவை விசாரிக்க அனுமதி வழங்கியது. அத்துடன் எதிர்வரும் 9ம் திகதி இது குறித்து தகவல் அளிக்குமாறு இரகசியப் பொலிஸாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வலுவான சர்வதேச பங்கை உறுதி செய்யும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்-

rtrஇலங்கையின் உள்நாட்டு போரில் நிகழ்த்தப்பட்ட ஈவிரக்கமற்ற துஷ்பிரயோகங்களுக்கு நீதி வழங்குவதற்கான பொறிமுறையில், சர்வதேசத்தின் வலுவான பங்கை உறுதி செய்யும் தீர்மானமொன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை நிறைவேற்ற வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது. இலங்கை அரசாங்கம் செயற்படவேண்டிய தருணம் வந்துவிட்டதை தற்போது சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் புலப்படுத்துகின்றது என, மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனீவாவுக்கான பணிப்பாளர் ஜோன் பிசர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச பங்களிப்புடனான நீதிபொறிமுறையை தீர்மானம் அங்கீகரித்துள்ளதன் மூலம் நீதி வழங்குவதற்கு சர்வதேச பங்களிப்பு அவசியம் என்ற முக்கியமான விடயத்தை அது ஏற்றுக்கொண்டுள்ளது. இலங்கையின் புதிய அரசாங்கம் இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதுடன், இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முக்கியமான வாக்குறுதிகளை வழங்கி வருகின்றது. Read more

தமிழ் கூட்டமைப்பின் வரவேற்பு ஏகமனதாக விடுக்கப்படவில்லை-
பங்காளிக் கட்சிகள் அதிருப்தி-

maஇலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், மனிதாபிமான சட்டங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமெரிக்க அனுசரணையிலான பிரேரணைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பளித்ததாக வெளிவந்த அறிவிப்பு ஏகமனதாக எடுக்கப்பட்டதல்ல என கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தெரிவித்துள்ளன. அது ஒருமித்த கருத்தொன்று அல்ல எனக் குறிப்பிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ ஆகியன தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன.

சர்வதேச விசாரணை ஒன்றை நாம் கோரிவந்த நிலையில் ஆகக் குறைந்தது ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு நிகரானதாகக் கூட அமெரிக்கப் பிரேரணை அமையவில்லை என்பது கவலையளிக்கின்றது. இவ்வாறான நிலையில் அப்பிரேரணையை எவ்வாறு வரவேற்க முடியும் என்றும் அந்தக் கட்சிகள் கேள்வியெழுப்பியுள்ளன.

அமெரிக்கப் பிரேரணை மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அறிவிப்பு தொடர்பாக ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், புளொட் அமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைமைக்குழு உறுப்பினரும், வட மாகாணசபை உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர். அவர்களது கருத்துக்கள் வருமாறு, Read more

ஓரிருவர் எடுக்கும் முடிவுகளுக்கு எல்லோருமே கட்டுப்பட வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்-வடக்கு முதல்வர்-

vigneswaranஎன்னை பலரும் எதிர்ப்பு அரசியல்வாதியென வர்ணிப்பது நான் அறிவேன். நான் அரசியல்வாதியும் இல்லை, கட்சி சார்ந்தவனும் இல்லை, நீதித்துறையில் சில காலம்கழித்த பின்னர் ஆன்மீகத்துடனும், இலக்கியத்துடனும், சட்டத்துடனும், முழ்கியிருந்த என்னை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து தேர்தலில் போட்டியிட வைத்தார்கள். இதனால் என்நிலை மாறியது என்று வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். நேற்று யாழ்.இந்துக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

நான் தேர்தலில் போட்டியிட்டு மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றி பெற்றேன் பின்னர் எனது நிலை மாறியது. மக்களுக்கு சேவையாற்றும் வைராக்கியத்துடன் இருந்தேன். சில கட்சிகளில் ஒருவர் இருவர் எடுக்கும் முடிவுகளுக்கு எல்லோருமே கட்டுப்பட வேண்டுமென்று எதிர்பார்க்கின்றார்கள். அவர்களின் முடிவுகளில் குறையிருந்து எடுத்துக் காட்டினால் எதிர்ப்பு அரசியல்வாதி என்கிறார்கள். Read more

இணை அனுசரணை அறிவிப்பு பிரதமர் ரணிலின் இரட்டை சாணக்கிய வியூகத் திறன்-

_DSC0369ஐ.நா, அமெரிக்கா போன்ற சர்வதேச சமூகத்தையும் தமிழர் தம் அரசியற் தலைமையையும் ஒன்றாகவே இவ்விணைச் சொல்லில் கையாளும் சாணக்கியமாகும் — கலாநிதி நல்லையா குமரகுருபரன் –

ரணில் விக்ரமசிங்க இன்று சர்வதேச அழுத்தத்திலிருந்து ஸ்ரீலங்கா விடுதலை பெற்றுவிட்டது எனவும், இலங்கையை சர்வதேச விசாரணையிலிருந்து மீட்டெடுத்ததாகவும் கூறுகின்ற இந்த ஆளும் அரசின் சாணக்கிய வெற்றி முரசிற்கு ஈடாக தமிழ் தலைமை யுத்தகால இழப்புகள் சம்பந்தமாக தமது சாணக்கியத்தை எப்படி வெளிப்படுத்த போகின்றது ? எனும் கேள்வி எழுகின்றது என்பது தமிழ் தலைமையின் பலம் சார்ந்த முக்கியமான விடயம் எனவும் தமிழ் தேசிய பணிக் குழு பொதுச்செயலாளர், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கூட்டமைப்பு தலைவர் கலாநிதி குமரகுருபரன் தெரிவித்தார்

தாம் சாரந்தவர்களுக்கு ”பொறுப்புக்கூறல்”, என்பதுதான் இன்று வௌ;வேறு வகைகளில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவைக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், அதேபோல த தே கூ சார்பாக பேசவல்ல எம்,எ.சுமந்தரனுக்கும். இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கா விற்கும் இருக்கின்ற முக்கிய பங்காற்றுகை. Read more

பா. உ சரவணபவன் அவர்களால் விளையாட்டு நிகழ்வு ஆரம்பித்து வைப்பு-

P1090734 (1)கடந்த 26.09.2015 அன்று யாழ். சங்கானை நிச்சாமம் பகுதியில் அமைந்துள்ள சரஸ்வதி சனசமூக நிலையத்தின் 58 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி நிகழ்த்தப்பட்ட விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளை பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அவர்கள் வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார். இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார். இவ் நிகழவில் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அவர்கள் உரையாற்றும்போது எதி;வரும் காலங்களில் மேற்படி சரஸ்வதி சனசமூக நிலையத்தின் அபிவிருத்தியின் பொருட்டு பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிற்கூடாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.
Read more

ஆட்கடத்தல் தொடர்பான கொள்கையில் மாற்றமில்லை-அவுஸ்திரேலியா-

australiaகடல் வழியாக முன்னெடுக்கப்படுகின்ற ஆட்கடத்தல் தொடர்பிலான தமது அரசாங்கத்தின் கொள்கையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என கொழும்புக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் வலியுறுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் மெல்கம் டர்ன்புல், நாட்டின் எல்லைப் பாதுகாப்பு விடயத்தில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய படகு மூலம் சட்டவிரோதமாக வருவோரை தடுப்பதற்கு தொடர்ந்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவுஸ்திரேலிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முயற்சிப்போர், கைது செய்யப்பட்டு மீண்டும் இலங்கைக்கோ அல்லது பெப்புவா நியூகினியா மற்றும் நவுரு தீவுகளுக்கோ அனுப்பிவைக்கப்படுவார்கள் எனவும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது சட்டவிரோதமாக படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்கும் எவரும் அவுஸ்திரேலியாவில் குடியேற்றப்பட மாட்டார்கள் எனவும் அந்த அறிக்கையில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு மூலம் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமை மேம்படுத்தப்படும்-ஜனாதிபதி-

maithriபுதிய அரசியலமைப்பொன்றை அறிமுகப்படுத்தி நாட்டின் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் 70 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க்கிற்கு சென்றுள்ள ஜனாதிபதி, நியூயோர்க் பௌத்த விகாரையில் கூடியிருந்த இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றியபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக புதிய அரசாங்கத்திற்கு சர்வதேச சமூகம் பரியளவில் ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மக்கள் தமக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை மக்களின் நன்மைகருதி உரிய முறையில் பயன்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்பெயின் இரண்டாக பிரிகின்றது-

spainஸ்பெயின் நாட்டின் வடகிழக்கு மாகாணமான கடலோனியாயில் மொத்தமாக 75 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் ஸ்பெயினில் இருந்து சுதந்திரம் பெற்று தனிநாடு ஆக செயல்பட விருப்பம் தெரிவித்து வந்தனர். இதனால் அங்கு பல கட்டப் போராட்டங்கள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து அங்கு வாழும் மக்களிடம் கருத்துக் கணிப்பு நேற்று நடத்தப்பட்டது. அந்த கருத்துக்கணிப்பில், ஸ்பெயினிலிருந்து பிரிவதற்கு ஆதரவாக அதிகளவான வாக்குகள் கிடைக்கபபெற்றுள்ளன. அதை தொடர்ந்து கருத்துக் கணிப்பில் பிரிவினைவாதிகள் வெற்றிபெற்றதாக அப்பகுதி ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ள அர்தர்மாஸ் கூறியுள்ளார். மேலும் 2017ம் ஆண்டு முதல் கடலோனியா பகுதி சுதந்திர நாடாக பிரகனடம் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதனால் ஸ்பெயின் இரண்டாக உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஐரோப்பா கண்டத்தில் கடலோனியா என்ற புதிய நாடு உருவாகிறது. இது ஸ்பெயினின் வளம் மிகுந்த பகுதி. தொழிற்சாலைகளும, வர்த்தக நிறுவனங்களும் அதிக அளவில் உள்ளன. இங்குள்ள பார்சிலோனாவில் ஸ்பெயினின் 2ஆவது பெரிய விமான நிலையமுள்ளது. அங்கு காணப்படும் துறைமுகம் 3ஆவது பெரிய துறைமுகமாகும்.

இலங்கை – இந்திய கூட்டு இராணுவ பயிற்சி-

indo sri lankaஇந்தியா-இலங்கைக்கு இடையேயான இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், பயிற்சி யுக்திகளை பரிமாறிக் கொள்ளும் வகையிலும் இரு நாடுகளும் பங்கேற்கும் கூட்டு இராணுவ பயிற்சி நாளைமுதல் இரு வாரங்கள் நடைபெறவுள்ளது. புனேயில் உள்ள ஆந்த் இராணுவ முகாமில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் இரு நாட்டு இராணுவ அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். ‘பயிற்சி மித்ர சக்தி-2015’ என்று பெயரிடப்பட்ட இக்கூட்டு பயிற்சி, இரு நாடுகளுக்கும் இடையிலான 3-வது முகாம் ஆகும். இந்த பயிற்சி மூலம் இரு நாட்டு இராணுவத்தின் திறமை பெருகும், புரிதல் தன்மையும், மரியாதையும் அதிகரிக்கும் என்று இந்திய இராணுவத்துறை சார்பில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா.சபை வழிகாட்டுதலின்படி தீவிரவாத ஒழிப்பு கூட்டு நடவடிக்கையாக நடைபெறும் இந்த பயிற்சி அடிப்படை உறுதி மற்றும் தன்னம்பிக்கை பெருகவும், எல்லையில் அமைதி, முன்னேற்றம், நிலைத்தன்மை அதிகரிக்கவும் வழிவகுக்கும் எனவும் கூறப்படுகிறது.

வவுனியாவில் சிறுவர்கள் ஆர்ப்பாட்டம்-

vavuniyaதமிழ் அரசியல் கைதிகளாக சிறைச்சாலைகளில் விசாரணைகளின்றியும், விடுதலையின்றியும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது தந்தைமார்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி, வவுனியா செட்டிகுளத்தில் சிறுவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தமது தந்தையர்கள் விடுதலையின்றி சிறைச்சாலைகளில் வாடுவதனால், தமது வாழ்க்கையும் பள்ளிப்படிப்பும் அவர்களின் அரவணைப்பும், பாதுகாப்புமின்றி பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்து, அவர்களை விடுதலை செய்ய ஆவன செய்ய வேண்டும் என புதிய அரசாங்கத்திடம் அவர்கள் கோரியிருக்கின்றனர். மேலும் இவர்கள் நல்லாட்சியில் நல்வாழ்வு கிடைக்குமா? சிறுவர் நாமே?, அப்பாவின் நீண்ட சிறையால் வாழ்வை இழந்து தவிப்பது நாமே!, போன்ற சுலோக அட்டைகளைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.