Header image alt text

வட்டு மத்திய கல்லூரி மாணவர்களது போராட்டத்தின்போது தாக்குதல்-

IMG_7176யாழ். வட்டு மத்திய கல்லூரி மாணவர்களால் அதிபர் இடமாற்றத்தை கண்டித்து நடாத்தப்படும் போராட்டத்தின் இரண்டாம் நாளான இன்றைய போராட்டத்தின்போது புதிதாக இடமாற்றம் பெற்று வந்த அதிபரின் சகோதரரால் இன்று பெற்றோர் ஒருவர் தாக்கப்பட்டதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. தம்பையா கதிர்காமதம்பி என்பவரே புதிய அதிபரின் சகோதரரால் பொலிஸார் முன்னிலையில் தாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இவரை தாக்கிய நபர் பாடசாலை அதிபரின் காரியாலயத்தில் இருந்தே வந்து தாக்கியதாகவும், இந்த நபர் தாக்கப்பட்ட சமயம் கல்லூரி அதிபருடன் வலயக் கல்விப்பணிப்பாளரும் அலுவலகத்தில் இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. Read more

தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்-ஜனாதிபதி-

maithriஅரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்துவோர் மீது அரசியல் கட்சி தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 08வது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு இன்று பிற்பகல் 03மணிக்கு ஆரம்பமானபோது விஷேட உரையாற்றிய ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் ஐக்கியம் பாதுகாக்கப்படும் எனவும் முப்படைகளின் தளபதி, பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் அதற்கான பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வதாகவும், தேசிய பாதுகாப்பு தொடர்பில் அனைவரும் தனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இலங்கை பாராளுமன்றில் ஒரு பிரதான கட்சி 32 வருடங்களாகவும் மற்றொரு பிரதான கட்சி 31 வருடங்களாகவும் ஆட்சி செய்துவந்த நிலையில், இன்று கூடியுள்ள புதிய பாராளுமன்றம் இலங்கை அரசியல் வரலாற்றில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். யுத்த காலத்தில் தேசிய அரசாங்கத்தின் தேவை காணப்பட்ட போதும், அளும் கட்சி எதிர்க்கட்சி அரசியலே முன்னெடுக்கப்பட்டு வந்ததாகவும் ஜனவரி 08ல் தான் பதவியேற்ற பின் சமரச தேசிய அரசாங்கம் உருவாவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். இதுவரை இலங்கையர்கள் என்ற வகையில் அனைவரும் ஒன்றிணையும் விதமான அரசியல் யாப்பு ஒன்றறை உருவாக்க முடியாது போனதாக தெரிவித்த ஜனாதிபதி புதிய ஆட்சியில் விருப்பு வாக்கு முறை இல்லாத தேர்தல் திருத்த சட்டம் கொண்டுவரப்படும் என்றும் அதற்கான அடிப்படைத் தேவை

Read more

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு நிர்வாகம் தெரிவு-

tna (4)தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்களின் தலைவராக இரா. சம்பந்தன் தெரிவுசெய்யப்பட்டுள்ளதோடு கூட்டமைப்பின் கொறடாவாக த.சித்தார்த்தன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். குழுக்களின் செயலாளராக சிறிதரனும் பேச்சாளராக எம்.ஏ. சுமந்திரனும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் பதவி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு வழங்கப்படவேண்டுமென கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளதுடன், அந்த நம்பிக்கையிலேயே பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைமை பதவியை தமது தரப்பு பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச விசாரணை கோரி வடமாகாண சபையில் தீர்மானம்-

sivajiஇன அழிப்பு தொடர்பிலான சர்வதேச விசாரணை பொறிமுறையொன்றினை கோரி வடமாகாணசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. வடமாகாண சபை அமர்வுகள் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகின. இந்நிலையில் சபையின் வாயிற் பகுதியில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கவனயீர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தார். சர்வதேச நீதி விசாரணை தொடர வேண்டும், கொலையாளியை நீதிபதியாக நியமிக்க முடியுமா?, உள்நாட்டு விசாரணை எமக்கு நீதி பெற்றுத் தராது போன்ற பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் முதலமைச்சர் சர்வதேச விசாரணை கோரி தீர்மானம் கொண்டுவர இருப்பதாக கூறி போராட்டத்தை கைவிடுமாறு கோரப்பட்ட நிலையில் அவர் போராட்டத்தினை கைவிட்டு சபை அமர்வுகளில் பங்கேற்றிருந்தார். சபையில் முதலாவது பிரேரணையாக இன அழிப்பிற்கு சர்வதேச விசாரணை பொறிமுறை தொடர்பாக குறிப்பிட்டு தனது தீர்மானத்தை முதலமைச்சர் முன்மொழிந்தார். அதனை எம்.கே.சிவாஜிலிங்கம் ஆமோதித்திருந்தார்.

பாராளுமன்ற பிரதி சபாநாயகராக திலங்க சுமதிபால தெரிவு-

sumathipalaபுதிய பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக திலங்க சுமதிபால இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபாலடி சில்வா திலங்க சுமதிபாலவின் பெயரை முன்மொழிந்ததுடன் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹகீம் வழிமொழிந்தார்.

குழுக்களின் பிரதித் தலைவராக செல்வம் அடைக்கலநாதன் எம்.பி தெரிவு-

selvamஎட்டாவது பாராளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேலும் சபை முதல்வராக லக்ஷ்மன் கிரியெல்லவும் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்கவும், நியமிக்கப்பட்டுள்ளனர்.

எட்டாவது பாராளுமன்ற சபாநாயகராக கரு ஜயசூரிய தெரிவு-

karu jeyasuriyaஎட்டாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக கரு ஜயசூரிய தெரிவு செய்யப்பட்டுள்ளார் கரு ஜயசூரியவின் பெயரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்ததுடன், அவரது பெயரை நிமல் சிறிபால டி சில்வா வழிமொழிந்துள்ளார். இதற்கமைய பிரதமர் மற்றும் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் புதிய சபாநாயகரை பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கு அமைய அக்ராசனம் வரை அழைத்துச் சென்றனர். அதனைத் தொடர்ந்து புதிய சபாநாயகர் தமது நியமனப் பத்திரத்தில் கையொப்பமிட்டார். தேசபந்து கரு ஜயசூரிய இலங்கையின் 20 ஆவது சபாநாயகர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சர்வதேச விசாரணை மூலமாகத் தான் எமக்கு ஒரு நியாயம் கிடைக்கமுடியும்’ – புளொட்

Sithar ploteஇலங்கையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் போர்க்கால குற்றங்கள் தொடர்பில் அரசாங்கம் நடத்தக்கூடிய உள்ளக விசாரணைக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாக அமெரிக்கா அண்மையில் தெரிவித்திருந்தது.
ஆனால்,பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான புளொட் தெரிவித்துள்ளது.‘உள்ளக விசாரணைகள் மூலம் அறிக்கைகள் வரலாம்… ஆனால் ஒரு நியாயம் கிடைக்கும் என்று எவருமே எதிர்பார்க்கவில்லை’ என்று புளொட் அமைப்பின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். Read more

நாளை முதல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இலவச அஞ்சல் வசதி

postதற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட முத்திரை இலவச அஞ்சல் வசதி மீண்டும் 01.09.15 செவ்வாய்க்கிழமை முதல் வழங்கப்படவுள்ளதாக அஞ்சல் மா அதிபர் டி.எம்.பி.ஆர். அபயரத்ன தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 2015.06.26ஆம் திகதி நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவியும் இரத்துச்செய்யப்பட்டிருந்தது. அதன்படி சகல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமது கடமையின் நிமித்தம் கடிதம் அனுப்புவதற்காக வழங்கப்பட்டிருந்த விசேட முத்திரையை பாவித்து கடிதம் அனுப்பும் வரப்பிரசாதம் நிறுத்தப்பட்டிருந்தது. புதிய நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்ய்பபட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட முத்திரை மூலம் இலவச அஞ்சல் வசதியை மீண்டும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக சகல அஞ்சல் அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.