Header image alt text

ஊடக செயற்பாட்டாளர் கதீசன் மீதான தாக்குதலினை வன்மையாக கண்டிக்கிறோம்- தமிழ் தேசிய இளைஞர் கழகம்-

JOURNALISTவவுனியா பிராந்திய ஊடகவியாலாளர்களில் ஒருவரான இளம் சுதந்திர ஊடக செயற்பாட்டாளர் பாஸ்கரன் கதீசன் அவர்களின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலினை வன்மையாக கண்டிப்பதுடன், சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்படல் வேண்டும் என இளைஞர் கழகத்தின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அறிக்கையில், வவுனியா தர்மலிங்கம் வீதியில் போக்குவரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தமது விளம்பரங்களை காட்சிப்படுத்தியும், பந்தல்கள் அமைத்தும் வியாபாரம் மேற்கொண்டவர்களை வவுனியா நகரசபை, பொலிசாரின் துணையுடன் அகற்றியபோது செய்தி சேகரப்பில் ஈடுபட்டிருந்த சுயாதீன ஊடகவியலாளர் பாஸ்கரன் கதீசன்மீது தனியார் நிறுவன ஊழியர் நடாத்திய தாக்குதலினை வன்மையாக கண்டிப்பதுடன், சம்பந்தப்பட்டவர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்க வேண்டும் என்பதனை தமிழ் தேசிய இளைஞர் கழகமாகிய நாம் வலியுறுத்துவதுடன், இவ்வாறான தீர்ப்புக்கள் ஓர் முன்னுதாரணமாக இருப்பதுடன், இனிவரும் காலங்களில் இவ்வாறான செயல்கள் இடம்பெறாமல் இருக்க இவ் தீர்ப்பு நல்லாட்சியில் எடுத்துக் காட்டாக அமைதல் வேண்டும்.
Read more

இரு பாடசாலை மாணவிகளைக் காணவில்லையென முறைப்பாடு-

missingபாடசாலை மாணவிகளான சகோதரிகள் இருவரைக் காணவில்லை என பெற்றோர் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். யாழ். சுழிபுரம் பண்டைவெட்டி பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் சிந்துஜா (வயது 17) மற்றும் இளைய சசோதரியான சந்திரகுமார் நிவேதினி (வயது 14) ஆகிய இரு சகோதரிகளும் காணாமல் போயுள்ளனர். சந்திரகுமார் சிந்துஜாவின் சீருடை பெறுவதற்காக வட்டு இந்து கல்லூரிக்கு புதன்கிழமை காலை 9.30 மணியளவில் வீட்டில் இருந்து இருவரும் பாடசாலைக்கு சென்றுள்ளனர். பாடசாலைக்கு சென்ற இருவரும் மாலை ஆகியும் வீட்டிற்கு வரவில்லை என பெற்றோர் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை வட்டுக் கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அந்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் பிரதமர் ஜனவரியில் இலங்கைக்கு விஜயம்-

navasஎதிர்வரும் ஜனவரி முதல் வாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். பாகிஸ்தான் பிரதமரின் விஜயத்தின்போது இலங்கையுடன் 10 இருதரப்பு உடன்படிக்கைகள் செய்துகொள்ளப்படவுள்ளதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தை மேற்கோள்காட்டி த ஹிந்து தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுவூட்டுதல், இளைஞர் மேம்பாட்டுத் திட்டங்கள், சுகாதாரம், கலாசாரம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் தரவுப் பரிமாற்றம், பணத் தூய்தாக்கலுடன் தொடர்புடைய நிதி நிலைமைகள் பற்றிய புலனாய்வுத் தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட முக்கிய சில துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையில் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படும் என கூறப்படுகின்றது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், கடந்த 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின்போதே இறுதியாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இலங்கை பாகிஸ்தான் இடையே நீண்டகால உறவுள்ளதுடன், இலங்கைப் படையினருக்கு ஆயுதப் பயிற்சிகளையும், பாதுகாப்புத் தளபாட உதவிகளையும் பாகிஸ்தான் வழங்கிவருகின்றது.

தேர்தலில் ஐ.தே.கட்சியை தோற்கடிப்பதற்கு அர்ப்பணிப்பேன்-மகிந்த-

mahindaஎதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியைத் தோற்கடிப்பதற்கு முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார். கந்தானை நாகொடவிலுள்ள தனியார் வர்த்தக நிறுவனங்களைப் பார்வையிட்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளிக்கும்போதே மகிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வெள்ளை வான் அச்சுறுத்தல் காணப்படுவதாகக் கூறப்பட்டாலும் இன்று அவ்வாறான ஒரு சூழல் இல்லை எனவும், ஆனாலும், தற்போது டிபெண்டர் அச்சுறுத்தல் காணப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்குச் சொந்தமான டிபெண்டர் வாகனத்தில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.

நத்தாரை முன்னிட்டு 557 கைதிகளுக்கு விடுதலை-

jailபுனித நத்தார் தினத்தை முன்னிட்டு 557 சிறைக் கைதிகளை விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிசான் தனசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். சிறிய குற்றங்களுக்காக நாடு முழுவதிலுமுள்ள சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர். இதன்படி ஜனாதிபதி மன்னிப்பின்கீழ், 557 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர்மீதான தாக்குதல், வன்னி ஊடகவியலாளர் சங்கம் கண்டனம்-

vanni reporterஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தற்போதும் இலங்கையில் தொடர்ந்த வண்ணமேயுள்ளது இவ்வாறு வன்னி ஊடகவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியாவில் பிராந்திய ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் வன்னி மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் சார்பாக அதன் செயலாளர் கி.வசந்தஷரூபன் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்;கையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்ட உரையின்போது, இந்நாட்டில் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் தற்போது இல்லை எனவும் கடந்த காலத்தில் படுகொலைசெய்யப்பட்ட மற்றும் அச்சுறுத்தலுக்குள்ளாகிய ஊடகவியலாளர்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறும் என நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில், வடபகுதியில் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் ஊடக சுதந்திரம் தொடர்பில் அரசாங்கம் கூறும் கருத்துக்களை கேள்விக்குறியாக மாற்றிவிட்டது. இவ்வாறான தாக்குதல் சம்பவங்களை எமது சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது. Read more

தாஜூதீன் கொலை விவகாரம், கெப்டன் திஸ்ஸ தப்பிச்செல்ல முயற்சி-

tajudeenபிரபல றக்பி விளையாட்டு வீரர் வசிம் தாஜூதீனின் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரெனக் கருதப்படும் கெப்டன் திஸ்ஸ என்பவர், நாட்டை விட்டுக் கடல் வழியாகத் தப்பிச்செல்ல முற்பட்டுள்ளதாக, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கு முன்னிருந்த நிர்வாகத்துக்கு ஆதரவு வழங்கும் கடற்படைப் பிரிவிவைச் சேர்ந்த அதிகாரியொருவரின் துணை, இந்த கெப்டன் திஸ்ஸவுக்கு இருப்பது, விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக அத் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நீண்டநாள் ஆதரவாளரும் வாகன சாரதியுமான இவருக்கு, பிரயாணத்தடையை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஏற்கெனவே பெற்றிருந்தது. தாஜூதீனின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள், நாட்டை விட்டு தப்பிச் செல்ல முடியாத அளவுக்கு குற்றப்புலனாய்வு அதிகாரிகள் இயங்கி வருவதாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். Read more

தென்பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க சவுதி அரேபியாவிற்கு அழைப்பு-

 arjunஇலங்கையின் தென்பகுதியில் மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்றை அமைக்குமாறு சவுதி அரேபிய அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் இந்த அழைப்பினை விடுத்துள்ளதாக அரேபிய செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது. இவ்வாறான ஓர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கும் பட்சத்தில் இலங்கையை அண்மித்த இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு எண்ணெய் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகைகளை மேற்கொள்ள முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சவுதி அரேபிய நிதிக்கொள்கை முகவர் பஹாட் பின் அப்துல்லா அல் முபாரக்குடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து சுமார் 300 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள கரையோர நகரான ஹம்பாந்தோட்டையில் இந்த மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க முடியுமென அவர் பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. Read more