இலஞ்ச, ஊழல் தொடர்பில் சுமார் 12 மில்லியன் முறைப்பாடுகள்-

briberyஇலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணையகத்துக்கு சுமார் 12மில்லியன் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று, அது தொடர்பான புலன் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் (கபே) நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். ‘இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ என்னும் தொனிப்பொருளில் இலங்கை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் கபே அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு நிகழ்வு யாழ். பஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று நடைபெற்றது. அந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அத்துடன், ‘மக்கள், ஆணைக்குழுமீது வைத்த நம்பிக்கை காரணமாக இவ்வளவு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. எங்கள் நாட்டில் தற்பொழுது அதிகமாக பேசப்படும் விடயமாக இலஞ்சம் மற்றும் ஊழல் காணப்படுகின்றது. இவை இல்லாத சமூதாயத்தை எவ்வாறு கட்டியெழுப்புதல் என்பது இப்போது முக்கியத்துவம் வாய்ந்ததாகவுள்ளது’ என்றார்.மேலும், ‘இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் புலன் விசாரணை நடத்தி சட்டத்தின்படி தண்டனை பெற்றுக்கொடுப்பதை விட, அதனை முன்னரே தடுப்பது எப்படி என்ற கோட்பாடே தற்போது அவசியமாகின்றது. ஒவ்வொரு அரச நிறுவனங்களிலும் பலர் கடமையாற்றுகின்றனர். ஒவ்வொன்றையும் அவதானித்து அதனை தடுப்பது சாத்தியமற்றது. மக்கள் மத்தியில் இது தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களின் ஒத்துழைப்பின் அடிப்படையிலேயே இதனை தடுக்க முடியும்’ என்றும் கூறினார்.