வாகரையிலிருந்து கொழும்பிற்கு நேரடி பஸ் சேவை-
மட்டக்களப்பு வாகரை பேருந்து சாலையானது பயணிகளின் நன்மை கருதி கொழும்பிற்கான தமது நேரடி பேருந்து சேவையை இன்று முதல் ஆரம்பித்துள்ளது. இப் பேருந்து சேவையானது இன்று முதல் திருகோணமலை சேருநுவரவில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு வாகரை ஊடாக வாழைச்சேனை நகரம் வந்தடைந்து அங்கிருந்து கொழும்பிற்கான சேவையினை மேற்கொள்ளவுள்ளது. தினமும் காலை 7 மணிக்கு திருகோணமலை சேருநுவரவில் இருந்து புறப்படும் பேருந்தானது மாலை 4மணிக்கு கொழும்பினை சென்றடையும். மறுநாள் மாலை 4 மணிக்கு கொழும்பில் இருந்து அதே வழிப்பாதையில் சேருநுவரவிற்கு 12 மணிக்கு சென்றடையும். இதேவேளை, வாகரை பிரதேசத்தில் வாழும் மக்கள் தமது தூர இடங்களுக்கான போக்குவரத்தினை வாழைச்சேனை நகரம் வந்து புகையிரதம் மற்றும் தனியா் அரச பேருந்துகளில் தங்களது பயணங்களை மேற்கொண்டு வருவது வழக்கமாகும். இதனால் நேர விரயமும் பல சிரமங்களையும் எதிர்நோக்கி வந்தனர். மேற்படி பிரதேசத்தில் நீண்ட நாட்களாக நிலவி வந்த குறைபாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்து பிரதேச மக்கள் சாலை நிர்வாகத்திற்கு தமது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.