வீட்டுத் திட்டத்தில் மாற்றம் ஏற்படுத்துமாறு வடக்கு ஆளுனர் பரிந்துரை-

reginold coorayவடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ள 65,000 வீடுகளின் வடிவமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பரிந்துரை விடுத்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள குறித்த வீட்டுத் திட்டம் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவின் பிரபல ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “இந்த திட்டத்தை நிறுத்த வேண்டாம் பல்வேறு திருத்தங்களுடன் தொடருங்கள்..” என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அவரது பரிந்துரைகள் குறித்து விரிவாக கூற மறுத்தபோதும், சில வசதிகள் தொடர்பில் பயனாளிகளால் வழங்கப்பட்டுள்ள யோசனைகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, இது குறித்து மத்திய அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தினீர்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, எழுத்துமூலம் இந்த விடயத்தை அறிவித்துள்ளேன். எனது கடமையை நிறைவேற்றியுள்ளேன் என பதிலளித்துள்ளார். இந்த வீட்டுத் திட்டத்தின் பிரகாரம் சமையல் எரிவாயு, சமையல் அடுப்பு, கணனி, தொலைக்காட்சி போன்றவற்றை பயனாளிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது, மக்கள் இந்த திட்டத்தை விரும்புவார்கள் என நான் நினைக்கிறேன் எனவும் ரெஜினோல்ட் குரே மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்கு இராணுவத்துக்கு பதிலாக பொலிஸ் அனுப்பிவைப்பு-

Mahinda Rajapaksa, Daya Ratnayakeமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவக் குழுவை நீக்கி விட்டு அதற்காக பொலிஸாரை அனுப்பி வைத்துள்ளதாக, தெரியவந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையளவில், பாதுகாப்புப் பணியில் இருந்த 50 இராணுவத்தினர் இவ்வாறு இராணுவத் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக, மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். அவர்களுக்கு பதிலாக பொலிஸ் பாதுகாப்புக் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பாதுகாப்பு சபையினரால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேர்த்தன தெரிவித்துள்ளார். மேலும், மஹிந்த ராஜபக்ஷவுக்கு மட்டுமல்ல ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அனைத்து முக்கியஸ்தர்களின் பாதுகாப்புக்கும் பொலிஸாரை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எதுஎவ்வாறு இருப்பினும் பாதுகாப்பு படையை குறைக்க எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும், இராணுவத்தினருக்கு பதிலாக பொலிஸாரை மட்டுமே மாற்றியுள்ளதாகவும் அமைச்சர் ருவன் விஜேவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை-

education ministryதேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் நடவடிக்கைகளை ஏப்ரல் மாத்திற்குள் நிறைவு செய்யவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2013ஆம் ஆண்டில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில், தகுதிபெற்ற 4,700 பேரை தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு சேர்த்துக்கொள்ளவுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு இன்றிலிருந்து அழைப்புக் கடிதங்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளன. இந்த மாணவர்கள் நாடு பூராகவுமுள்ள 19 கல்வியியல் கல்லூரிகளில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். 2013 ஆம் ஆண்டின் பின்னர், கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பதுடன், இதற்கான எதிர்ப்பார்ப்புடன் இருந்த மாணவர்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை-பொலிஸ் மா அதிபர்-

illangakoonநாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என பொலிஸ்மா அதிபர் என்.கே.இளங்கக்கோன் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினர் மேற்கொள்ள முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நாபானபிரேமசிறி மகாநாயக்க தேரரை சந்தித்தப் பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பொலிஸ்மா அதிபர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அத்துடன், நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவினர் அனைத்து பாதுகாப்பு விடயங்களையும் முன்னெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.