சீனத் திட்டங்களுக்கு மூவரடங்கிய குழு நியமனம்-

sddssஇலங்கையில் முன்னெடுக்கப்படும் சீன முதலீடுகள் மற்றும் திட்டங்களை ஒழுங்கமைக்கும் வகையில் உயர்மட்ட குழுவொன்றை நியமிக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் உடன் இடம்பெற்ற சந்திப்பின்போது பிரதமர்இந்த உறுதி மொழியினை வழங்கியுள்ளார். இந்த உயர்மட்ட குழு மூன்று பேரை உள்ளடக்கியதாக இருக்கும் என சீன ஜனாதிபதியிடம், பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். விசேட திட்டங்களுக்கான அமைச்சர் சரத் அமுனுகம, அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம, கொள்கைத்திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஆலோசகர் ஆர். பாஸ்கரலிங்கம் ஆகியோர் விசேட குழுவில் உள்ளடங்குவார்கள் என பிரதமர் கூறியுள்ளார். இதேவேளை இலங்கை கடன் சுமையிலிருந்து தப்பிக்கவே, சீனாவின் கோரிக்கைகளை ஏற்றுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சீனா சென்று பல உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளார். இந்நிலையில் இலங்கையரசால் இடைநிறுத்தப்பட்ட போட் சிட்டி திட்டமும் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. இவையாவும் சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினை மற்றும் இலங்கையின் கடன்படுகை, கடன் மீளச்செலுத்தல் பிரச்சினைகளில் இருந்து மீளவே இலங்கை, சீனாவுடன் உடன்படிக்கைகளுக்கு சென்றுள்ளதாக வொய்ஸ் ஒப் அமெரிக்கா, ஆய்வாளர்களை சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. சில ஆய்வாளர்களின் கருத்துப்படி இந்தியாவும், அமெரிக்காவும் உரிய முறையில் உதவி வழங்காமைiயை அடுத்தே இலங்கை, சீனாவுடன் உறவுகளை புதுப்பிக்க நேர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இலங்கையை பொறுத்தவரை, சீனாவின் அவசரக் கடன்களுக்கும் பொருளாதார மேம்பாட்டுக்கும் தேவையென கொழும்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

துறைமுக நகரத் திட்டத்தில் எவரும் முதலீடு செய்யலாம்-பிரதமர்-

ranilஇந்து சமுத்திரத்தின் பொருளாதார மத்திய நிலையமாகத் திகழவுள்ள துறைமுக நகரத் திட்டத்தில், அனைத்து நாட்டினரும் முதலிட முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர், நாடு திரும்பும் முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்படி தெரிவித்தார். ‘துறைமுக நகரத் திட்டம் என்பது சீனாவுக்கு மாத்திரமானதல்ல. அது தென்னாசியாவின் பொருளாதார மத்திய நிலையமாகத் திகழவுள்ளது. ஆகவே, இத்திட்டத்தில் முதலிடுவதற்கு அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கின்றோம். ஆகவே, இத்திட்டத்தில் அனைத்து நாடுகளும் முதலிட முடியும் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன். எமது பொருளாதாரத் திட்டத்தினை நாங்கள் மாற்றவில்லை. ஆனால், துறைமுக நகரத் திட்டத்தில் கடைப்பிடிக்கப்படாமலிருந்த விடயங்களைச் சரிசெய்துள்ளோம். துறைமுக நகரத் திட்டத்துக்காக வழங்கப்பட்டுள்ள காணி, அரசாங்கத்துக்கே சொந்தமானது. அதனை 99 வருட நீண்டகால குத்தகைக்குக் கொடுக்கின்றோம். இதுவொரு முதலீட்டுத் திட்ட கட்டுமானமாகும். இத்திட்டத்தில் முதலிட விரும்புபவர்கள் எமது நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக முதலிட முடியும்’ எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். துறைமுகத் திட்டத்தினால் அண்டை நாடுகளில் பாதுகாப்புக்குக் குந்தகம் ஏற்படுமா என்று கேட்கப்பட்டபோது, ‘தேசிய பாதுகாப்புக்கோ அல்லது அண்டை நாடுகளின் பாதுகாப்புக்கோ இத்திட்டத்தினால் பாதகநிலை ஏற்படாது. இத்திட்டமானது, தெற்காசியாவின் பொருளாதார மத்திய நிலையம் என்ற அந்தஸ்தை இலங்கை பெறுவதற்கான அடித்தளமாகவே பார்க்கப்படவேண்டும். அத்தோடு கடல்வளப் பாதுகாப்பு என்பது சர்வதேச கடல் எல்லைப் பாதுகாப்போடு சம்பந்தப்பட்ட விடயம். ஆகவே, அதனைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. எனவே, அண்டை நாடுகளுடனும் சர்வதேசத்துடனும் பாதுகாப்புத் தொடர்பாகக் கலந்தாலோசித்த பின்னர்தான் இத்திட்டத்தினை ஆரம்பிக்க முடிவெடுத்தோம்’ எனவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.