1. கருணா அம்மான் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில், அவரை கைது செய்ய வேண்டும் என நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணையின்றி இரத்து செய்யப்பட்டுள்ளது. இவர் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை கொலை செய்துள்ளதாக சமீபத்தில் ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்டிருந்தார்.

2. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனை எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 9 மணிக்கு குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கோரிக்கைக்கமைய கோட்டை நீதவான் நீதிமன்றம் இவ் உத்தரவினை பிறப்பித்துள்ளது.

3. தேர்தல் ஆணைக்குழுவுக்கு பொதுத்தேர்தல் தொடர்பில் இதுவரையில் 224 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மூன்று வேட்பாளர்கள் மற்றும் 223 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு 64 வாகனங்களையும் காவல்துறையினர் பொறுப்பேற்றுள்ளனர். மேலும், தபால் மூல வாக்களிப்பு இன்று மாலை 4 மணியுடன் நிறைவடைகிறதென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

4. கடற்படை தளபதி வயிஸ் அத்மிரால் நிஷாந்த ஊலுகேதென்ன இராணுவ தளபதி சவேந்திர சில்வாவை இன்று இராணுவ தலைமையகத்தில் சந்தித்துள்ளார். இதேவேளை விமானப்படை தளபதி மார்ஷல் சுமங்கல டயஸையும் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. தனிமைப்படுத்தப்பட்டுள்ள அனைவரது வாக்குரிமையையும் ஆணைக்குழு பாதுகாக்கும். அவ்வாறானவர்கள் பொது வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்களிக்க வர மாட்டார்கள். தபால் மூல வாக்களிப்பு நடைமுறையைப் போன்றதொரு திட்டத்தை அந்த வாக்காளர்களுக்காக முன்னெடுக்க எண்ணியுள்ளோம் என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் இன்று ஊடக சந்திப்பில் தெளிவுபடுத்தினார்.

6. யாழ்ப்பாணம், மூளாய் பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று அதிகாலை 1.45 அளவில் வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் மூலம் அச்சுறுத்தி பதினாரறை பவுன் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

7. யாழ்ப்பாணம் அனலைதீவில் தயாளன் விதுசா என்ற 11 மாத குழந்தை ஒன்று மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. நீர் இறைக்கும் இயந்திரத்திற்காக வீட்டினுள் இருந்து இணைக்கப்பட்டிருந்த மின்சார வயரை தவழ்ந்து சென்ற குழந்த இழுத்துள்ளது. இதன்போதே வயர் ஊடாக பாய்ந்த மின்சாரம் குழந்தையினை தாக்கியுள்ளது.

8. வவுனியா – கனகராயன்குளம் ஆயிலடி பகுதியில் நேற்றுமாலை வேப்பமர கிளை முறிந்து வீழ்ந்ததில் ஒன்ரறை வயது குழந்தை உயிரிழந்துள்ளதுடன் சிறுமிகள் இருவர் காயமடைந்துள்ளனர். பலத்த காற்றினால் வேப்பம் மரத்தின் கிளை முறிந்து வீழ்ந்துள்ளது.

9. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2730 ஆக அதிகரித்துள்ளது.

10. நாட்டில் நேற்று 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இறுதியாக தொற்று உறுதியான 6 பேரில் 5 பேர் சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

11. வவுனியா வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சி முறையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்றுடன் 1,250வது நாட்களை எட்டியிருப்பதை முன்னெட்டு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 1,250 நாட்களாக தாம் போராடி வருவதாகவும் தமக்கான தீர்வினைத் தருமாறு வெளிநாடுகளிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

12. கொவிட் 19 தொற்றுறுதியான கடற்படையினர் அனைவரும் (906 கடற்படையினர்) குணமடைந்துள்ளனர். இறுதியாக சிகிச்சை பெற்று வந்த மூன்று கடற்படையினரும் நேற்றைய தினம் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.

13. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட 17 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழவின் அனுமதியுடன் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணக்கத்துடன் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. சிரேஷ் பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர், 9 உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், 4 பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் இரண்டு உப பொலிஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

14. யாழ். தென்மராட்சி மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றத்துக்கு அருகில் ரயிலுடன் மோதுண்டு 17 மாடுகள் உயிரிழந்துள்ளன. இந்தச் சம்பவம் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலுடன் மோதுண்டே மாடுகள் உயிரிழந்துள்ளன.

15. பூசா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளான கொஸ்கொட தாரக்க மற்றும் லெசீ ஆகிய குழுவினால் சிரேஷ்ட சிறைச்சாலை அதிகாரிகள் சிலருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.