1. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை நீதியாகவும், நேர்மையாகவும், நடுநிலைமையாகவும் நடத்த அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் என்று யாழ் மாவட்ட அரச அதிபர் க.மகேசன் தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அரசாங்க அதிபர் க.மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2. யாழ். தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் நேற்று ஒரே சூலில் உருவான மூன்று குழந்தைகள் சத்திர சிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளன. சாவகச்சேரியைச் சேர்ந்த திருமதி சுகந்தன் என்ற ஆசிரியைக்கே மூன்று குழந்தைகள் கிடைத்துள்ளன. இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையுமே ஒரே சூலில் கிடைக்கபெற்றுள்ளது.

3. யாழ். தென்மராட்சி வரணி பகுதியில் நேற்று முன்தினம் மாலை டிப்பருடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் பலியானதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். வரணியைச் சேர்ந்த பிரான்சிஸ் சினேஸ் (வயது-26) என்பவரே உயிரிழந்துள்ளார். யோகேந்திரன் கோகுலன் (வயது-26) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

4. வவுனியாவில் சுழற்சி முறையில் 1258 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நேற்று வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘எங்கள் உறவுகளுக்கான நீதி சர்வதேச நீதியாகவே வழங்கப்படவேண்டும்’, ‘வட-கிழக்கில் தமிழருக்கெதிராக இராணுவத்தால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை உடன் நிறுத்து’ போன்ற வசனங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தி கோசங்களை எழுப்பியிருந்தனர்.

5. தரம் 1ற்கு சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 35 இலிருந்து 40ஆக அதிகரிப்பதற்கு சட்ட அங்கீகாரம் கிடைத்திருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. உதவி ஆசிரியர்கள் இணைத்துக்கொள்ளும் அடிப்படையில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அனுமதி கிடைத்திருப்பதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

6. பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் குற்றப்புலனாய்வு திணைக்கள பணிப்பாளர் ஷானி அபேசேகர கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

7. ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ மற்றும் அவன்ற் கார்ட் நிறுவன தலைவர் மேஜர் நிஸங்க சேனாதிபதி ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் நிஸங்க சேனாதிபதியினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை ஆராய்ந்த நிலையில் அதனை விசாரணைக்கு எடுப்பதை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

8. ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 37 பேர் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இதனையடுத்து, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து வேட்புமனு தாக்கல் செய்திருந்த அனைத்து உறுப்பினர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கை நிறைவுக்கு வந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 54 பேரை நீக்கியிருப்பதாக நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

9. மீகொட- நாவலமுல்ல, மயான வீதியிலிலுள்ள விவசாய பண்ணையொன்றிலிருந்து மீட்கப்பட்ட, போதைப்பொருள் கடத்துவதற்கு பயிற்றப்பட்டதாக கூறப்படும் கழுகை தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு ஒப்படைத்து, அது தொடர்பான மேலதிக அறிக்கையை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, ஹோமாகம நீதவான் நிலபுலி லங்காபுர உத்தரவிட்டுள்ளார். அத்துடன் கழுகுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் தலா ஓர் இலட்ச ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

10. இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 58 பேர் குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2391ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2814ஆகும்.

11. ஜப்பான் மற்றும் கட்டாரில் வேலைக்காக சென்ற 47 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். இருவேறு விமானங்கள் ஊடாக குறித்த குழுவினர் வருகை தந்துள்ளனர். கட்டாரில் இருந்து வருகை தந்தவர்கள் அந்நாட்டு கடற்படையில் சேவையாற்றும் இலங்கையர்கள் 41 பேர் என தெரிவிக்கப்படுகின்றது. அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

12. ராஜாங்கனை மற்றும் லங்காபுர உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் வாக்கெடுப்பு நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு வாக்களிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படாது எனவும் சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் சுகாதார பிரிவின் ஆலோசனைகளுக்கு அமைய வாக்களிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

13. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் பிரேமலால் ஜயசேக, சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் நிலந்த ஜயகொடி மற்றும் கஹவத்தை பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்குமாக மூன்று பேருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2015 ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் கஹவத்தையில் நபரொருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டது தொடர்பில் பிரதிவாதிகளுக்கெதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

14. பொலன்னறுவ, லங்காபுர பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களின் பி.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று வெளியிடப்படவுள்ளது. அங்கு 325 பேர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

15. சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாமல் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை தமக்கு கிடைத்த முறைப்பாடுகளில் இத்தகைய முறைப்பாடுகளே அதிகமென Pயுகுகுசுநுடு அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். தேர்தலுடன் தொடர்புடைய 1950-க்கும் அதிக முறைப்பாடுகள் இதுவரை கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

16. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் ஹர்த்தால் பாலத்தின் அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக காரணமாக துறைமுக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் துறைமுகத்திற்கான நுழைபாதையும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

17. யாழ்.போதனா வைத்தியசாலை 7ம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அந்த விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் அனைவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த நோயாளி 7ம் இலக்க விடுதியின் மலசல கூடத்தைப் பயத்தியமை மற்றும் சிற்றுண்டிச் சாலைக்குச் சென்றமை ஆகிய காரணங்களினால் வடக்கு மாகாண சுகாதார குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் மேற்படி முடிவு எடுக்கப்பட்டது. இதனடிப்படையில் வடக்கு மாகாணம் மற்றும் வெளி மாகாணங்களைச் சேர்ந்த 70 பேர் அவர்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

18. தேர்தலுடன் தொடர்புடைய 685-க்கும் அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் முறைகேடு கண்காணிப்பு மத்திய நிலையத்தின் தேசிய இணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, தேர்தல் பிரசாரங்களுடன் தொடர்புடைய 1460 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் கண்காணிப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

19. தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் புதிதாக 213 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 28 ஆம் திகதி மாலை 4 மணி முதல் 29 ஆம் திகதி மாலை 4 மணி வரையான காலப்பகுதியில் குறித்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.