தேர்தல் விதிமுறை மீறல்களை தடுப்பதோடு மீண்டும் யாழில் கொரோனா தொற்று ஏற்படாவண்ணம் தேர்தல் கடமையில் ஈடுபடுங்கள் என யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ள பொலிஸாரின் தேர்தல் கடமை குறித்து விளக்கமளிக்க யாழ் துரையப்பா மைதானத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

காவற்துறையினால் கைது செய்யப்பட்ட நீர்கொழும்பு முன்னாள் சிறைச்சாலை அதிகாரி அனுறுத்த சம்பாயோ நாளைய தினம் வரை ரிமான்ட் விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பகல் நேரப் பராமரிப்புடன் கூடிய முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, வவுனியா வெளிவட்ட வீதியில் அமைந்துள்ள குடிவரவு திணைக்களத்துக்கு அருகாமையில், இன்று நடைபெற்றது. வவுனியா மாவட்ட செயலாளர் சமன்பந்துலசேன, பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டிவைத்தார்.

எந்தவோர் அரசியல்கட்சியைச் சேர்ந்த வேட்பாளரும் தேர்தல் சட்டதிட்டங்களை மதிப்பதில்லை என பதுளையில் தெரிவித்துள்ள தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல், தேர்தல் சட்டதிட்டங்களை மீறும் வேட்பாளர்கள் நீதிமன்றம் மூலம் குற்றவாளியாக நிருபிக்கப்பட்டால், வழங்கப்படும் தண்டனைகளுக்கு மேலதிகமாக 7 வருடங்களுக்கு அரசியல்தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கொரோனா வைரஸ் பாதுகாப்பு கருதி வாக்களிப்பு நிலையங்களுக்கு இரசாயண திரவம் தெளிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் ஒதியமலை பகுதி கரிவேப்ப முறிப்பு, எருக்கலம்பிலவு மற்றும் தனிக்கல்லு ஆகிய வயற்காணிகளை, பெரும்போக நெற்செய்கைக்காக விவசாயிகள் நேற்று சுத்தம் செய்யும்போது இராணுவத்தினர் தடுத்துள்ளதுடன், காணி அனுமதிப் பத்திரங்களின் பிரதிகளை தம்மிடம் ஒப்படைத்துவிட்டு துப்பரவுப் பணிகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பொலநறுவை, கிரிதலேகம மத்திய மகா வித்தியாலயத்தில் கற்கும் 450 மாணவர்களும் 82 ஆசிரியர்களும் 7 ஊழியர்களும் நேற்று முன்தினம் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். லங்காபுர பிரதேச செயலகத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

தாய் உயிரிழந்த சோகத்தில் இளைஞர் ஒருவர் தன்னுயிரையும் மாய்த்துக்கொண்ட சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், நேற்று உருக்குலைந்த நிலையில் 28 வயது இளைஞன் ஒருவனின் சடலத்தை தாம் காட்டுக்குள்ளிருந்து மீட்டெடுத்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக கத்தாரில் சிக்கியிருந்த மேலும் 13 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். அத்துடன் ஜப்பானின் நரிட்டாவிலிருந்து ஒருவரும் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் Pஊசு பரிசோதனைகளின் பின்னர், கண்காணிப்பு முகாம்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை பூர்த்திசெய்த 55 பேர் இன்றையதினம் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதுவரை 29,121 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை பூர்த்தி செய்து வீடு திரும்பியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

நேற்று நாட்டில் புதிதாக 08 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர். அதன்படி, நோயாளர்களின் எண்ணிக்கை 2823 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் ஒருவர் லங்காபுர புனர்வாழ்வு நிலையத்தில் தொற்றுக்குள்ளான கைதிக்கு நெருக்கமானவர் எனவும் ஏனைய 07 பேரும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து இலங்கை வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எனவும் அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.