Header image alt text

அவுஸ்திரேலியாவிலிருந்து மேலும் 33 பேர் திருப்பி அனுப்பிவைப்பு-

அவுஸ்திரேலியாவில் புகலிடம்கோரி அகதிகளாக சென்றவர்களில் மேலும் 33 பேர் இன்று விமானம் ஊடாக நாடுதிரும்பியுள்ளனர். அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவிலிருந்து விசேட விமானத்தின் மூலமாக பலத்த பாதுகாப்புடன் இவர்கள் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இக்குழுவில் 8 பெண்களும் 25 ஆண்களும் உள்ளதுடன், சிறுவர்கள் எட்டுபேரும் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் திருகோணமலையிலிருந்து மீன்பிடி படகுகள் மூலமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்றதாகவும், அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கிடைக்காததையடுத்து திருப்பியனுப்பப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, அவுஸ்திரேலியாவிலிருந்து நேற்றும் 40பேர் திருப்பியனுப்பப்பட்டிருந்தனர்.

நாடு திரும்பியோர்மீது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை-

அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக சென்று, அங்கு புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 40 பேர் நேற்றையதினம் மாலையில் விமானம்மூலம் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். இவர்களில் 12 பெண்களும், 08 சிறார்களும் அடங்குவதாக பொலிஸ் பதில் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். இவர்கள் கடந்தமாதம் 7ஆம் திகதி படகுமூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்றிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இக் குழுவினர் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இவர்களில் 12 பெண்களும், 08 குழந்தைகளும் அடங்குவதுடன்,. இவர்களை இன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிககை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. 

இந்தியா செல்வோர் தொடர்பில் கூடுதல் கவனம்-

இந்தியாவின் சென்னை, மும்பை மற்றும் மதுரை ஆகிய பகுதிகளுக்கு விமானம் மூலம் பயணிப்பவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கை சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது. சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு தங்கத்தை கடத்தும் சம்பவங்களை கருத்திற்கொண்டு, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளரும், சுங்கப் பணிப்பாளருமான லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இவ்வாறான சுமார் 50 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.  கடந்த இரு மாதங்களில் நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் தங்கத்தை கொண்டுசெல்லும் நடவடிக்கை 20 தடவைகள் முறியடிக்கப்பட்டது. சிலர் மிகவும் சூட்சுமமான முறையில் தங்கத்தை தமது உடலில் மறைத்து எடுத்துச்செல்கின்றமையை கடந்த காலங்களில் கண்டறிய முடிந்தது. அது தொடர்பில் சுங்க உத்தியோகத்தர்கள் அதிக கவனம் செலுத்தியுள்ளனர். இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைதல், இந்தியாவில் தங்கத்திற்கு விதிக்கப்பட்டுள்ள அதிகவரி உள்ளிட்ட சில காரணங்களால் இந்தியாவிற்கு சட்டவிரோதமான முறையில் தங்கம் கொண்டுசெல்லும் நடவடிக்கை அதிகரித்துள்ளது என சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழிற்கான ரயில் பாதையின் இரண்டாம் கட்ட இணைப்பு-

யாழ்ப்பாணத்துக்கான ரயில் பாதையின் இரண்டாம் கட்ட இணைப்பு விரைவில் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இதன்படி, கிளிநொச்சிக்கும் பளைக்கும் இடையிலான ரயில் பாதை திறக்கப்படவுள்ளது. ஏற்கனவே ஓமந்தையில் இருந்து கிளிநொச்சி வரையிலுமான ரயில் பாதையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அண்மையில் திறந்து வைத்துள்ளார் இந்நிலையில் கிளிநொச்சியில் இருந்து பளை வரை இணைக்கப்படவுள்ள பாதையிலும் ரயில் சேவையை நடத்தக்கூடியதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் பட்டதாரிப் பயிலுநர்களுக்கு நிரந்தர நியமனம்-

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 255 பட்டதாரிப் பயிலுநர்களுக்கு நிரந்தர நியமனங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் மேற்படி நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மன்னார் மாவட்ட செயலகத்தின் ஜெயிக்கா மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் ரிசாட் பதியுதீன், மன்னார் அரசாங்க அதிபர் எம்.வை.தேசப்பிரிய, மேலதிக அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மேல், உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.பரமதாஸ், மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சியான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வட மாகாணசபையின் கன்னியமர்வு-
வட மாகாண சபையின் கன்னியமர்வு எதிர்வரும் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். கைதடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அலுவலகத்தில் இந்த அமர்வு நடைபெறவுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பின் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

புளொட்டின் வட மாகாணசபை உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்-

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) உயர்பீடம் இன்றுமுற்பகல் யாழ் கந்தரோடையில் சந்தித்து கலந்துரையாடியது. இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர்களின் சத்தியப் பிரமாணம் மற்றும் இது தொடர்பாக பரப்பப்பட்டு வரும் வதந்திகள் குறித்து விரிவாக கலந்துரையாடியதுடன், இந்த வதந்திகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்தவகையில் புளொட்டின் வட மாகாணசபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் கட்சியின் செயலாளர் சு.சதானந்தம்(ஜே.பி.) அவர்களின் முன்னிலையில் இன்று வட மாகாணசபை உறுப்பினர்களாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

சத்தியப் பிரமாண நிகழ்வு ஒத்திவைப்பு-

நாளையதினம் முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பினால் சுயாட்சியை உறுதிசெய்ய முடியும்-இந்தியா-

தமிழ் தேசியக் கூட்டமைப்பினால், இலங்கையில் சிறுபான்மை மக்களின் சுயஆட்சியை உறுதிசெய்ய முடியும் என்று, இந்திய மத்திய நிதித்துறை அமைச்சர் பீ.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 25 வருடங்களுக்குப பின்னர் நடத்தப்பட்ட வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரலாற்று ரீதியான வெற்றியை பதிவுசெய்துள்ளது. இது 13ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக சிறுபான்மை மக்களுக்கான அரசியல் தீர்வுக்கான புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அதேநேரம், மாகாணங்களுக்கான சுயஆட்சி, அதிகாரப்பகிர்வு, சமஉரிமை மற்றும் தமிழர்களுக்கும், ஏனைய சிறுபான்மை மக்களுக்கான சுய மரியாதை போன்ற விடயங்களை பாதுகாத்துக் கொள்ளும் இயலுமை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இருக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

பக்கச் சார்பாக செயற்படவில்லை-கமலேஷ் சர்மா-

இலங்கை விடயத்தில் தாம் பக்க சார்பாக செயற்படவில்லை என, பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச்செயலாளர் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். கமலேஷ் சர்மா தமது அதிகாரத்தை பயன்படுத்தி, இலங்கை அரசாங்கத்தை பாதுகாக்க முற்படுவதாக கனடா குற்றம் சுமத்தியிருந்தது. இந்த குற்றச்சாட்டு தம்மீது முன்வைக்கப்பட்ட தனிப்பட்ட குற்றச்சாட்டாகவே தாம் கருதுவதாக கூறியதுடன், எனினும் தம்மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள அவர், தாம் எந்த தரப்புக்கும் சார்பாக செயற்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்.தேவி ரயிலில் பாய்ந்து தற்கொலை-

கிளிநொச்சியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ்.தேவி ரயில் முன் பாய்ந்து தாயொருவரும் மகளும் உயிரிழந்துள்ளனர். வெயங்கொட மற்றும் பல்லேபொல ரயில் நிலையங்களுக்கு இடையில் கீனவல பிரதேசத்தில் இச்சம்பவம் இன்றுபகல் 1மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தாய் ஒருவர் தனது இரண்டு பெண் பிள்ளைகளுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்துள்ளதாக மத்திய ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. இதன்போது தாயும் ஒரு மகளும் ரயிலுடன் மோதி உயிரிழந்த நிலையில் ஒரு மகள் தப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் பத்திரிகையாளர் மாநாடு-

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் இன்றுமுற்பகல் 10.30அளவில் யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளர் மாநாடொன்றினை நடத்தியிருந்தனர்.

இங்கு உரையாற்றிய இவர்கள், தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான போக்கைக் கண்டிக்கும் நோக்கிலும், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலுமே நாம் நேற்றைய சத்தியப் பிரமாண நிகழ்வில் பங்கு பற்றவில்லை. இதனை வட மாகாண சபையின் செயற்பாடுகளுக்கு குந்தகமதாக இருப்பதாகவோ மாகாண சபையை பகிஸ்கரிப்பதாகவோ கருதக்கூடாது. தமிழ் மக்கள் எங்களுக்கு தந்த ஆணையை மதிக்கின்றோம். நாம் வடக்கு மாகாண சபையை தனியே மாகாண சபையாக பார்க்கவில்லை. ஒட்டுமொத்த தமிழ் மக்களின் தீர்வுக்கான ஆரம்பப் புள்ளியாகவே பார்க்கின்றோம்.

தமிழ் மக்கள் தங்கள் ஒற்றுமையை காட்டி உள்ளார்கள். நாம் அவர்களுக்கு எமது ஒற்றுமையை காட்ட வேண்டும். ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்த நாம் அனைவரும் கடுமையாக உழைப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

அத்துடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழவில் தாம் பங்குபற்றாமல் விட்டது வட மாகாணசபையைப் புறக்கணிப்பதாகவோ, வட மாகாணசபையில் பங்குபற்றாமல் விட்டதாகவோ அர்த்தமில்லை என்றும், தாம் தொடர்ந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களாக இருப்பதுடன், மாகாண சபையின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் முழுமையாக பங்குபற்றி மகாணசபையை திறம்பட செயற்பட வைப்போம் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் மேலும் தெரிவித்துள்ளனர்.

அரசியல் காரணங்களால் சத்தியப்பிரமாண நிகழ்வில் பங்கேற்கவில்லை-குணசீலன்-

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் நேற்றைய பதவிப்பிரமாண நிகழ்வில் தான் பங்கேற்காமைக்கு அரசியல் ரீதியாக பல காரணங்கள் உள்ளதாக ரெலோ சார்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு வடமாகாண சபைக்கு தெரிவான வைத்தியக் கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிடுள்ள அறிக்கையில், யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டமைப்பின் பதவியேற்பு நிகழ்வில் நான் கலந்து கொள்ளாமைக்கு எனது மனைவி விபத்தில் சிக்கியதே காரணமென வெளியான செய்திகளில் எவ்வித உண்மைகளும் இல்லை. எனது மனைவி அவ்வாறான விபத்தில் சிக்கவுமில்லை. நான் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ளாமைக்கு அரசியல் ரீதியாக பல காரணங்கள் உள்ளன என்று கூறியுள்ளார்.

இறுதிப் போரில் மக்களை காக்கும் யோசனை ஏற்கப்படவில்லை-ஐ.நா பேச்சாளர்-

இலங்கையின் இறுதிக்கட்ட போரின்போது பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் யோசனையை அரசாங்கம் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூனின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். இறுதிப் போர் இடம்பெற்ற காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு வலயங்களை அறிமுகம் செய்வது குறித்து ஐ.நா தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தது. எனினும், அரசாங்கம் இந்த யோசனையை முழுமையாக அமுல்படுத்தவில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.  பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு செயற்பட்டு வந்ததுடன் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வலயங்களை அறிவிக்குமாறு வலியுறுத்தியும் வந்தது. போரை நிறுத்துமாறும், பாதுகாப்பு வலயங்களை உருவாக்குமாறும் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் உரிய முறையில் அமுல்படுத்தத் தவறியது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இன்னர் சிற்றி பிரஸ் ஊடகத்திற்கு அளித்த விசேட செவ்வியின்போதே பர்ஹான் ஹக் இதனைக் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை: திஸ்ஸ விதாரண-

தேசிய பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கமும் தனித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை. மாறாக பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்வதன் மூலமே தீர்வு என்பது சாத்தியமாகும் என அமைச்சரும் முன்னாள் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். உலகில் இதுபோன்ற உள்நாட்டு பிரச்சினைகள் நிலவிய நாடுகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து ஒரு மேடையில் கூடி பேச்சுவார்த்தை நடத்தியே தீர்வு காணப்பட்டுள்ளது. தனித்து இரு தரப்புக்கள் பேச்சுநடத்தித் தீர்வு எட்டப்படுவது சாத்தியமற்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

வடமராட்சி கடல் கொந்தளிப்பில் 40ற்கும் மேற்பட்ட படகுகள் சேதம்- வடமராட்சி கடலின் மணற்காட்டுபகுதியில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு 12 மணியளவில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் நாற்பதிற்கும் மேற்பட்ட மீன்பிடிப்படகுகளும் வலைகளும் நீரினுள் அடித்து செல்லபட்டுள்ளது. இதனால் மீன்பிடியை வாழ்வாதாரமாக கொண்ட அப்பகுதி மக்கள் தொழிலை இழந்துள்ளனர். மேலும் மீட்கப்பட்ட படகுகள் பாவனைக்குதவாத வகையில் உள்ளது எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

 நாம் ஏன் பதவியேற்பு நிகழ்வை பகிஸ்கரித்தோம் ?

தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (PLOTE) விளக்கம்.
11-10-2013, அன்று இடம்பெற்ற வடமாகாணசபை உறுப்பினர்களுக்கான பதவியேற்பு நிகழ்வில் பங்குகொள்வதை எமது அமைப்பு தவிர்த்திருந்தது. மேற்படி முடிவானது, மக்கள் மத்தியிலும், எமது அமைப்பின் ஆதரவாளர்கள் மத்தியிலும் சில கேள்விகளை எழுப்பியிருக்கக் கூடும். எனவே இது குறித்து, சில விடயங்களை தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு எமக்குண்டு.

நாம் ஏன் இத்தகையதொரு முடிவை எடுக்க நேர்ந்தது?

வடமாகாணசபை என்பது, உண்மையில் வடக்கு மக்களுடன் மட்டுமே தொடர்புபட்ட ஒரு விடயமல்ல. இது – ஒட்டுமொத்த தமிழ் மக்களும், இலங்கைத் தீவில் கௌரவத்துடனும், சமத்துவத்துடனும் வாழ்வதற்கான, ஒரு அரசியல் தீர்வை நோக்கி முன்செல்வதற்கான, ஆரம்ப புள்ளியாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு, வடமாகாணசபையை, அவ்வாறானதொரு நோக்கில் கையாள வேண்டும் என்பதுதான், கொழும்பின் மீது அழுத்தங்களை பிரயோகித்துவரும் சர்வதேச சமுகத்தின் எதிர்பார்ப்புமாகும். ஆனால் அத்தகையதொரு நோக்கிலிருந்து கூட்டமைப்பு விலகிச் சென்றுவிடுமோ, என்னும் அச்சம் எமக்குள் எழுந்துள்ளது. எமது மக்கள், வடமாகாணசபை தேர்தலின் போது, எமக்களித்த பேராதரவை, வெறும் கட்சி அரசியலுக்குள் முடக்கி, கிடைத்திருக்கும் இந்த அரிய சந்தர்ப்பத்தையும் இழந்துவிடக் கூடிய ஆபத்தை, நாம் உணர்கிறோம். Read more

வட மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்-

வடமாகாண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்றுகாலை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் முன்னிலையில் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர். இதில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் ஆகியவற்றின் சார்பில் வடமாகாண சபைத் தேர்தலில் வெற்றியீட்டிய உறுப்பினர்களுள் 9பேர் பங்கேற்கவில்லை. டெலோ தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தார். ஈ.பி.எல்.ஆர்.எப்.பின் 5 மாகாணசபை உறுப்பினர்களும், புளொட்டின் 2 மாகாணசபை உறுப்பினர்களும், டெலோவில் இரு மாகாணசபை உறுப்பினர்களும் இந்த சத்தியப்பிரமாண நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. இதன்படி வடமாகாண சபையின் உறுப்பினர்களாகத் தெரிவான ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினர் ஆறுமுகம் கந்தையா சர்வேஸ்வரன், சிவப்பிரகாசம் சிவமோகன், எம்.தியாகராஜா, மயில்வாகனம் இந்திரராஜா, ஆறுமுகம் சின்னத்துரை துரைராஜா ரவிகரன், புளொட் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமோதரம்பிள்ளை லிங்கநாதன், ரெலோ சார்பில் கனகலிங்கம் சிவாஜிலிங்கம், மன்னார் உறுப்பினர் குணசீலன் ஆகியோரே இந்நிகழ்வில் பங்கேற்றிருக்கவில்லை

வட மாகாண சபை தவிசாளர், அமைச்சர்கள் தெரிவு தொடர்பில் புளொட் தலைவரும், வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கருத்து-

வட மாகாணசபை தவிசாளர் மற்றும் அமைச்சர்களின் பெயர்கள் வெளியாகியிருக்கும் நிலையில் இது தொடர்பில் பி.பி.சி செய்தியாளர் புளொட் தலைவரும், வட மாகாணசபை உறுப்பினருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களைத் தொடர்புகொண்டு இதுபற்றி கேட்டபோது,

மக்களைப் பொறுத்தமட்டில் உணர்ச்சிபூர்வமாக மிகப் பெருவாரியாக இரண்டு விசயங்களுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்துள்ளார்கள். அது அவர்கள் இந்த ஒற்றுமையை வலியுறுத்துவதற்கும் தங்களுடைய உணர்வுகளை வெளிக்கொணர்வதற்காகவுமே. தேர்தல் முடிந்து ஐந்து கட்சிகளும் கலந்துகொண்ட முதலாவது கூட்டத்திலே கொள்கை ரீதியாக ஓர் உடன்படிக்கையை கண்டுகொண்டோம். Read more