கொழும்பில் இணைந்த எதிர்க் கட்சிகளின் ஊடகவியலாளர் மாநாடு-
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழித்து 17ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதோடு, இரு வருடங்களுக்குள் தேர்தல் முறைமையில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். இணைந்த எதிர்க்கட்சிகள், கொழும்பு, புறக்கோட்டையில் உள்ள சொலிஸ் ஹோட்டலில், இன்று நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதேவேளை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை மதித்து, நாடாளுமன்றத்தில் இருக்கின்ற சீர்திருத்தங்களை பயன்படுத்த வேண்டும் என ஐ.தே.கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் சீர்திருத்தங்களுக்கு ஐக்கியப்பட்ட முயற்சிகள் ஆதரவு வழங்கவிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இணைந்த எதிர்க்கட்சிகள் மாநாட்டில் பங்கேற்காத நிலையில் அவருடைய சட்டத்தரணி உபுல் குமாரபெரும் ஊடாக அனுப்பிவைத்துள்ள செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிடுபவர், தனது கட்சிக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியவராகவும் நேர்மையானவராகவும் இருப்பாராயின், நிச்சயம் அவருக்கு ஆதரவளிப்பதாக, முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா. ஊடக அதிகாரி இலங்கைக்கு ஆதரவாக செயற்பாடு-
ஐக்கிய நாடுகள் ஊடக அதிகாரி இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாக இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் செய்தியாளர் பேரவையின் முன்னாள் தலைவர் கியாம்பாலோ பியோலி இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றார் என அது தெரிவித்துள்ளது. பியோலி தனது மேன்ஹட்டனில் உள்ள வீட்டை, ஐ.நா அமைப்பின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி பாலித கொஹனவிற்கு வாடகைக்கு வழங்கியுட்டுள்ளார். போர்க்குற்றச் செயல்கள் நிராகரிக்கும் வகையிலான இலங்கை அரசாங்கத்தின் காணொளியொன்று ஐக்கிய நாடுகள் செய்தியாளர் பேரவையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மாற்றுக் கருத்துக்களை வெளியிடும் சில ஊடக நிறுவனங்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபட தடைகள் ஏற்படுத்தப்படுவதுடன் அனுமதி மறுக்கப்படுகின்றது. கடந்த சில காலங்களாகவே இன்னர் சிற்றி பிரஸ் நிறுவனத்திற்கு செய்தி சேகரிக்க தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. பியோலியின் நடவடிக்கைளுக்கு சில ஊடகங்கள் ஆதரவளித்து வருகின்றன எனவும் இன்னர் சிற்றி பிரஸ் மேலும் குறிப்பிட்டுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை-
இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்களையும் விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சிங்கள மொழியில் உள்ள தீர்ப்பாணை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, இலங்கை உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். தமிழக மீனவர்கள் சார்பில் ஆஜராவதற்காக, கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் சிறந்த சட்ட வல்லுநர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த மேன்முறையீட்டுக்கான செலவுக்காக தமிழக அரசு, 20 இலட்சம் ரூபாவை இந்திய தூதரகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது எனவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தப் பிரச்சினையை பயன்படுத்தி, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைக்கும் தி.மு.க.வின் எண்ணம் நிறைவேறாது என முதல்வர் பன்னீர்செல்வம் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கை ஜனாதிபதியும் இந்திய பிரதமரும் நேற்றுக்காலை தொலைபேசி கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது இருநாடுகளுக்கும் இடையில் உள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது இதன்போது இலங்கையில் மரண தண்டனை பெற்றுள்ள ஐந்து மீனவர்களையும் இந்திய சிறைக்கு மாற்றுவதற்கு இணங்கிக்கொள்ளப்பட்டதாக ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
மங்கள வந்தால் அமைச்சை விட்டுக் கொடுக்கத் தயார் – பிரியங்கர ஜயரத்ன-
கட்சியை விட்டுச் சென்ற மங்கள சமரவீர எம்.பி மீண்டும் கட்சிக்கு வருவாராயின் அவருக்கு தனது அமைச்சுப் பதவியை விட்டுக்கொடுக்கத் தயார் என சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஆனமடுவ அலுவலக திறப்பு விழா நிகழ்வில் உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அமைச்சர் மேலும் கூறுகையில், ´மங்கள சமரவீரவுக்கு சிறிலங்கா சுதந்திர கட்சி என்பது புதிய இடம் அல்ல. நாம் இருந்த இருப்பில் மன கசப்பு ஏற்பட்டால் எதிர்வீட்டுக்குச் செல்வோம். ஆனால் பின்னர் வீட்டுக்கு வருவோம். மங்கள மீண்டும் வர முடிவு செய்துள்ளமை சிறந்தது. தற்போது இருக்கும் இடத்தில் இருந்து வேலை செய்ய முடியாது என அவருக்குத் தெரியும். பழையதை மறந்துவிட்டு வாருங்கள் பெரிய வீட்டுக்கு. உங்களை வெறுமனே பொறுபேற்க மாட்டோம். பொறுப்பு கொடுத்து சேர்த்துக் கொள்வோம். அதற்கு நான் எனது அமைச்சுப் பதவியையும் விட்டுக் கொடுக்கத் தயார். நாம் நமது நாட்டுக்காக உயிரையே கொடுப்போம் என்றார் அவர். Read more
யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்த முன்னாள் மாவட்ட நீதிபதியான மு.திருநாவுக்கரசு அவர்கள் சுகயீனம் காரணமாக இன்று காலமானார். இவர் தமிழின்மீதும் சைவத்தின்மீதும் அதிக பற்றுக் கொண்டவர் மாத்திரமல்லாமல் தமிழ் தேசியத்துக்காக 70களில் தொடக்கம் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றின் பிரசாரக் கூட்டங்களிலே மிகத் தீவிரமாக பங்காற்றி வந்தவர். இவர் மக்களைக் கவரக்கூடிய விதத்திலே அழகான தமிழிலே மிகவும் அழகாகப் பேசக்கூடிய ஒருவர். அன்னாருடைய இழப்பானது தமிழ் மக்களுக்கு ஒரு மிகப் பெரிய பேரிழப்பாகும். இவர் அண்மையில்கூட யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தந்தை செல்வநாயகம் அவர்களின் ஞாபகார்த்தக் கூட்டத்திலே ஞாபகார்த்த உரையினை நிகழ்த்தியிருந்தார். இவர் தான் சரியென்று கருதுகின்ற விடயங்களை எவருக்குமே அஞ்சாது அது தொடர்பான கருத்துக்களை மக்களிடம் எடுத்துக்கூறி வந்தவர். இவர் அரசியலில் மாத்திரமல்லால் சைவப் பிரசங்கங்களிலும் சிறந்து விளங்கி மக்கள் மத்தியிலே பெருமதிப்பைப் பெற்றிருந்தவர். அன்னாருக்கு புளொட் தலைவரும், வட மாகாணசபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தனது அஞ்சலியை செலுத்துவதுடன், அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.
சுகயீன காரணத்தினால் இன்று காலமான யாழ். அளவெட்டியைச் சேர்ந்த முன்னாள் மாவட்ட நீதிபதி மு.திருநாவுக்கரசு அவர்களுக்கு வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் தனது அஞ்சலியினைச் செலுத்துவதோடு, அன்னாரின் பிரிவினால் துயரடைந்திருக்கும் அவரது குடும்ப உறவுகளுக்கும், உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளார். வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் தனது இரங்கல் செய்தியில், அமரர் மு. திருநாவுக்கரசு அவர்கள் ஒரு சமூகப் போராளியாக தமிழ் சமூகத்தையும், தமிழ் இளைஞர்களையும் முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வதற்காக பாடுபட்டவர். அவர் கட்சி பேதங்களுக்கு அப்பால் தமிழ் உணர்வினையும், தமிழர்கள் இப்படித்தான் வாழ வேண்டுமென்ற யதார்த்தத்தையும் ஏற்படுத்தியதுடன், அதற்கு எடுத்துக் காட்டாகவும் திகழ்ந்தவர். இளைஞர்களை ஊக்குவிப்பதில் என்றும் சளைக்காத அவர், சைவத்தையும், தமிழையும் வளர்ப்பதிலே முன்னின்று செயற்பாட்டார். அவரால் விகடகவி என்கிற பெயரில் எழுதப்பட்ட கவிதைகள் தமிழ் சமூகத்திற்கு ஒரு முன்னுதாரணமாகும். அன்னாரது இழப்பு தமிழ் சமூகத்திற்கு ஒரு பேரிழப்பாகும். அன்னாருக்கு அஞ்சலி செலுத்துவதோடு, அன்னாரின் பிரிவினால் துயரடைந்திருக்கும் அவரது குடும்ப உறவுகளுக்கும், உறவினர் நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது,
ஜனநாயகப் போராளியாகத் தடம் பதித்தவர் அமரர் நடராஜா ரவிராஜ்! பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் எனது தென்மராட்சி மண்ணை உலகுக்கே தெரியபடுத்திய ஒருவர் என்றால் மிகையாகாது.- கலாநிதி .ந. குமரகுருபரன்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் கருத்து நாளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அறிவிக்கப்படவுள்ளது. மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிட தடையிருக்கின்றதா என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடந்த புதன்கிழமை உயர் நீதிமன்றிடம் ஆலோசனை கோரியுள்ளார். அதன்படி உயர்நீதிமன்ற பதிவாளர் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு இது குறித்து விளக்கக் கடிதம் அனுப்புமாறு கோரிக்கை விடுத்தார். இதற்கமைய சுமார் 40க்கும் மேற்பட்ட விளக்கக் கடிதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவற்றை ஆராய்ந்து பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் உள்ளிட்ட நீதியரசர்கள் நாளை ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தவுள்ளனர் இதேநேரம் அடுத்த ஜனாதிபதி தேர்தலை 2015ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
சிங்கபூருக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, தனது விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று நாடு திரும்பவிருப்பதாக தெரியவருகின்றது. அவர், நாடு திரும்பிய பின்னர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்துகொள்வாராயின் அமைச்சரவையில் இன்று அல்லது நாளை மாற்றங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மங்கள சமரவீர எம்.பி, அரசாங்கத்துடன் இணைந்துகொண்டால் அவருக்கு வெளிவிவகார அமைச்சர் அல்லது துறைமுக அமைச்சர் பதவியை வழங்க அரசாங்கம் இணைங்கியுள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. இதேவேளை ஜனாதிபதிக்கும் மங்கள சமரவீரவுக்குமிடையிலான இரகசிய சந்திப்பு கடந்த 3ம்திகதி இரவு மொரட்டுவையில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் சென்னையில் நடைபெறவுள்ள சட்டத்தரணிகள் மாநாட்டில் இன்று தலைமை தாங்கவுள்ளார். சென்னை வித்தியோதயா பள்ளியில் இன்றுமுற்பகல் இடம்பெறவுள்ள நிகழ்வில் பாதுகாப்பையும் இறையாண்மையும் காத்தல் என்ற தொனிப்பொருளில் வட மாகாண முதலமைச்சர் உரையாற்றவுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சட்டத்தரணிகள் மாநாட்டில் பங்கேற்கும் முகமாக இலங்கையிலிருந்து நேற்று முன்தினம் வடக்கு முதல்வர் சி.வி விக்னேஸ்வரன் இந்தியா புறப்பட்டுச் சென்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
பதுளை, கொஸ்லந்த மீரியாபெத்தயில் மண்சரிவு ஏற்பட்ட பகுதியிலிருந்து 40 வயதான பெண்ணொருவரின் சடலமும் 09 வயது சிறுமியொருவரின் சடலமும் இன்றுகாலை மீட்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் காணாமல் போனவர்களை மீட்கும்பணி 12ஆவது நாளாக இன்றுகாலை மேற்கொள்ளப்பட்டபோதே இச்சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்றையதினம் அப்பகுதியிலிருந்து மாடொன்று இறந்தநிலையில் மீட்கப்பட்டதுடன் இதுவரை 14 சடலங்கள் அப்பகுதியிருந்து மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, மண்சரிவில் புதையுண்டவர்களை தேடும் பணிகளை இடைநிறுத்துவது தொடர்பில் மக்களின் கருத்துக்களை இடர் முகாமைத்துவ அமைச்சர் எழுத்து மூலம் கோரியிருக்கின்றார்.
மீரியாபெத்த மண்சரிவில் காணாமல் போனவர்களின் மரண சான்றிதழ்களை ஒருமாத காலத்துக்குள் பெற்றுகொள்ள முடியாதெனில், மண்சரிவின் மீட்பு பணிகளை தொடர வேண்டும் என மீரியாபெத்த மக்கள் கோரியுள்ளனர். ஒருமாத காலத்தில் மண்சரிவில் காணாமல் போனவர்களின் மரண சான்றிதழ்களை பெறமுடியும் என தங்களுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே மீட்புப் பணிகளை நிறுத்துமாறு கோரியதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர். எனினும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படாத பட்சத்தில், காணாமல் போனவர்களுக்கான மரண சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள 2 வருடங்களேனும் செல்லும். இதனால் ஊழியர் சேமலாப நிதி உள்ளிட்ட நிதிகளை பெற்றுக் கொள்வதில் சிரமம் ஏற்படும் என்பதால், இந்த மீட்பு பணிகளை தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டும் என தாங்கள் வலியுறுத்துவதாக அவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பில் மீட்பு பணிகளுக்கு பொறுப்பான மத்திய மாகாண படைப்பிரிவின் தளதிபதி மனோ பெரேரா கூறுகையில், இராணுவத் தலைமைகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில் மீட்பு நடவடிக்கைகளை இடைநிறுத்தப் போவதில்லை என்று கூறியுள்ளார்.
புளொட்டின் மத்தியகுழு உறுப்பினரும். முன்னைநாள் வவனியா நகரபிதாவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான கௌரவ ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் நேற்று (06.11.2014) வியாழக்கிழமை கோயில்குளத்தில் அமைந்துள்ள தனது வடமாகாண சபை அலுவலகத்தில் முக்கிய கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். இதன்போது 2015ஆம் ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட நிதியினூடக ஏனைய மக்களுக்கு வழங்கப்படுவது போன்று தமீழீழ மக்கள் விடுதலை கழகத்தின் போராட்ட கால வளர்ச்சிக்காக உயிர்நீத்த கழகத் தோழர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்நிதியின் மூலம் வாழ்வாதார மேம்பாட்டிற்கான உதவிகளையும், கழக வளர்ச்சிக்காக பாடுபட்டு தற்போது வறுமைக்கோட்டின் கீழ் உள்ள ஏனைய கழகத் தோழர்களுக்கு தனது மாகாணசபை நிதியில் முன்னிலைப்படுத்தி தன்னால் இயன்ற உதவிகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாது கழக நலன் விரும்பிகள் மற்றும் பொதுஅமைப்புக்களுடாகவும் உதவிகளை நேரடியாவே அல்லது தனதூடாகவோ வழங்குவதாகவும் அவர் கூறியதுடன், எம் இனத்தின் விடுதலைக்கு தன் வாழ்வை தியாகம் செய்து நிர்க்கதியாக நிற்கின்ற ஏனைய இயக்க, குடும்ப உறுப்பினர்களுக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்வேன் என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

சிவி.விக்னேஸ்வரன் வட மாகாண முதலமைச்சராக பதவியேற்றதன் பின்னர் முதல் தடவையாக இன்றுகாலை இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார். சென்னையில் நடைபெறும் அரச சார்பற்ற அமைப்பான மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (பி.யூ.சி.எல்.) விழாவில் பங்கேற்கவென அவர் இந்தியா சென்றுள்ளார். பி.யூ.சி.எல். அமைப்பு சார்பில் கே.ஜி.கண்ணபிரான் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. தியாகராய நகர், திருமலை சாலையிலுள்ள வித்யோதயா பள்ளியில் காலை 11ற்கு தொடங்கவுள்ள இந்நிகழ்வில் சி.வி.விக்னேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வாரென கூறப்படுகிறது. “பாதுகாப்பையும், இறையாண்மையும் காத்தல்” என்ற தலைப்பில் அவர் சிறப்புரையாற்றவுள்ளதாகவும், இதில் தென்னாப்பிரிக்க நீதிமன்ற முன்னாள் நீதிபதி சக்கரியா முகமது யாகூப், எழுத்தாளர் வசந்த் கண்ணபிரான் ஆகியோரும் பங்கேற்பரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றுக்கு எழுத்துமூல ஆவணம் சமர்பிக்கப்பட மாட்டாதென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என்பதால் ஏதேனும் தரப்பினருக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் சட்டத்தரணி அஜித் பத்திரண தெரிவித்துள்ளார். மூன்றாவது தடவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியட முடியுமா? என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரியுள்ளமை தொடர்பில் இன்றுமாலை 3 மணிக்கு முன்னர் பதிலளிக்குமாறு உயர்நீதிமன்ற பதிவாளர் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடம் கோரியுள்ளார். உயர்நீதிமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாமையால் கருத்து தெரிவிப்பதை தமது சங்கம் தவிர்த்துள்ளதாக அஜித் பத்திரண குறிப்பிட்டுள்ளார்.
எதிர்கட்சிகள் யாவற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வேட்பாளரை முன்னிறுத்தும் ஒரு பொது வேலைத்திட்டத்தை அமைப்பதில், நாடு திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க முக்கிய பங்கெடுத்து வருவதாக தெரியவருகிறது. ஆனால், அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா என்பது தெரியவில்லை என்றும் கட்சிகளிடையே கருத்து வேறுபாடு இருப்பினும் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கருத்து வலுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில், சமூக நீதிக்கான தேசிய இயக்கத்துக்கு தலைமை தாங்கும் வண.மாதுலுவாவே சோபித தேரர், ஐக்கிய தேசியக் கட்சி உட்பட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளை தனித்தனியாக அவர் சந்தித்து வருகின்றார். இந்த கூட்டங்கள் கோட்டையிலுள்ள அவரது விகாரையில் நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள், கோவில்குளம் சிவன் கோவில் நிர்வாகம், தமிழ் விருட்சம், மற்றும் கோவில்குளம் இளைஞர் கழகத்தினரும் இணைந்து, மண்சரிவில் உயிர்நீத்த எமது உறவுகளுக்காய் ஓர் அஞ்சலி நிகழ்வு இன்றையதினம் (06.11.2014) மதியம் 12.00 மணியளவில் கோவில்குளம் சிவன் கோவிலில் நடைபெற்றது. உயிர் நீத்த மக்களின் ஆத்மா சாந்திக்கான இவ் பிரார்த்தனை நிகழ்வில் புளொட் மத்தியகுழு உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு ஜி.ரி.லிங்கநாதன்(விசு), நகர சபையின் செயலாளர் திரு சத்தியசீலன், புளொட் முக்கியஸ்தரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), மூத்த ஊடகவியலாளர் திரு மாணிக்கவாசகம், வரியிறுப்பாளர் சங்கத்தின் தலைவர் திரு சந்திரகுமார்(கண்ணா), மக்கள் வங்கியின் நகர கிளையின் முகாமையாளர் திரு றோய் ஜெயக்குமார், கண்ணகி தேவராஜா ஆகியோருடன் பல சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.









வவுனியா தமிழ் பிரதேச சபையினரால் வவுனியா முத்தையா மண்டபத்தில் நேற்றுக்காலை (05.11.2014) 09.30 மணியளவில் நடத்தப்பட்ட வாசிப்பு மாத நிகழ்வில் புளொட் மத்தியகுழு உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான கௌரவ ஜி.ரி லிங்கநாதன் அவர்கள் உரைநிகழ்த்தினார். அவர் தனதுரையில், வவுனியா தமிழ் பிரதேச சபையின் செயற்பாடானது வவுனியாவின் ஏனைய பிரதேசசபையினை விட முன்மாதிரியாகவும் சிறப்பாகவும் செயற்பட்டு வருவதை கடந்த இரு வருட நிகழ்வில் கலந்து கொண்டபோது என்னால் அவதானிக்க முடிந்தது. இவ்வாறு முன்மாதிரியாக செயற்பட்ட இச்சபையின் தவிசாளர், உபதவிசாளர், செயலாளர், ஏனைய உறுப்பினர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதுடன் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான நிகழ்வுகளை கிராம மட்டத்திற்கு எடுத்துச்சென்று கிராம மக்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதற்கு முன்வரவேண்டும் என தெரிவித்தார் அத்தோடு வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் ஊடாக 2015ம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிராமப்புர வீதிகளை மேம்படுத்துவதற்கான நிதியினைக் கோருவதற்கு பிரதேச சபை உறுப்பபினர்கள் முன்நின்று செயற்பட வேண்டும். வவுனியா மாவட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடக்குமாகாணசபை உறுப்பினர் நால்வரிடமுமிருந்து வவுனியா மாவட்டத்தின் வளர்ச்சிக்காக ஒருகோடி இருபது லட்சம் ரூபா நிதி பயன்படுத்தப்படுகின்றது. எதிர்வரும் ஆண்டிலும் இவ்வாறான நிதியினைப் பெற்று இம்மாவட்டத்தினை வளர்ச்;பாதையில் கொண்டு செல்வோம் என்றார். அத்துடன் வவுனியா பிரதேசசபையால் நடத்தப்பட்ட போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களையும் அவர் வழங்கி கௌரவித்தார்.

நுவரெலியாவில் மண்சரிவு அபாயம் காணப்படும் இடங்களை பரிசோதனை செய்வதற்காக, தேசிய கட்டிட நிர்மாண ஆய்வு நிறுனத்தை சேர்ந்த ஆறு குழுக்கள் அடங்கிய அதிகாரிகள் தற்போது பரிசோதனை நடவடிக்கைகளில் ஈடுப்பட்டிருப்பதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ.குமாரசிரி தெரிவிக்கின்றார். நுவரெலியா மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் காணப்படும் இடங்களான கொத்மலை இறம்பொடை, லெவன்டன், பொகவந்தலாவ, மஸ்கெலியா, ஹட்டன், நுவரெலியா, எலமுல்ல, இராகலை தியனில்ல ஆகிய பகுதியில் 564 குடும்பங்களை சேர்ந்த 2521 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், இவர்கள் 20 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் கூறுகின்றனர்.
இலங்கை தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்காக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தால் இன்னும் முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்கின்றமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இந்த விசாரணைகளுக்காக முறைப்பாடுகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் கடந்த மாதம் 30ம் திகதியுடன் நிறைவடைவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. எதுஎவ்வாறிருப்பினும் குறித்த காலத்திற்குப் பின்னர் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் மறுக்கப்பட மாட்டாது என மனித உரிமைகள் ஆணையகம் அண்மையில் அறிவித்தது. இது ஒரு தரப்பினரின் நலன்கருதி எடுக்கப்பட்ட தீர்மானம் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் பக்கச்சார்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இது குறித்து கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ள அமைச்சர் பீரிஸ், இதனால் நீதி, நியாயம் மீறப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
போப்ஸ் சஞ்சிகை வெளியிட்டுள்ள உலகில் அதிகாரம்வாய்ந்த மனிதர்களின் பட்டியலில் பராக் ஒபாமாவை பின்தள்ளி ரஷ்ய ஜனாதிபதி முதலிடம் பிடித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு இரண்டாம் இடமே கிடைத்துள்ளது போப்ஸ் சஞ்சிகையின் பட்டியலில் உலகின் பலம்வாய்ந்த 72 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன இதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு 15 ஆவது இடம் கிடைத்துள்ளது மோடி பிரதமராக பதவியேற்று குறுகிய காலத்திற்குள் இந்த இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது போப்ஸ் சஞ்சிகையின் பட்டியலில் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங், பிரேஸில் ஜனாதிபதி டில்மா ருஸெல்ப் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர் போப்ஸ் சஞ்சிகையின் பட்டியலில் இந்தியத் தொழிலதிபர்களான அனில் அம்பானி மற்றும் லஷ்மி மிட்டல் ஆகியோரும் உள்ளனர்.
நிலவும் ஆட்சியை மாற்றும் தலைவர் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே என நவ சம சமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த போராட்டம் ஏற்று கொள்ளக் கூடியது. எனக்கு ரணில் விக்கிரமசிங்க அவசியமில்லை. எனக்கு அவர் ஜனாதிபதியாக வந்தாலும் கூட அவர் குறிப்பிடதக்க சேவையினை தொழிலாளர்களுக்கு வழங்குவார்கள் என எதிர்பார்க்க முடியாது. எப்படியிருப்பினும், இந்த தருணத்தில் சர்வாதிகார, சமய கடும்போக்கு, ஆட்சியை கட்டுபடுத்த கூடிய ஒரேயொரு தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.