19ஆவது திருத்தத்துக்கு அமைச்சரவை அனுமதி: வர்த்தமானியும் வெளியானது

parlimentஇலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை முடிவுக்கு கொண்டுவரும் புதிய அரசியல் அமைப்புக்கு திருத்தத்துக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதுடன் விசேட வர்த்தமானியும் வெளியானது.
இந்த திருத்தங்கள் அடங்கிய திருத்தச்சட்டமூலம் விசேட சட்டமூலமாக அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் ஞாயிறன்று அவசரமாகக் கூடியிருந்த விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே 19ஆவது சட்டத் திருத்தத்துக்கு அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்துள்ளது.
புதிய திருத்தங்கள் தொடர்பான விசேட வர்த்தமானி, நேற்றிரவே வெளியிடப்பட்டதாக அரசாங்க அச்சகக்கூட்டுத்தாபன தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் சட்ட திருத்தங்கள் தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் நேற்றை அமைச்சரவைக்கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது.
முன்வைக்கப்பட்டுள்ள 19ஆவது அரசியல் சட்டத் திருத்த பிரேரணையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: 
1. இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை அகற்றப்பட்டு, ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றமும் சேர்ந்து நிர்வகிக்கும் ஆட்சி முறையாக மாறும்,  
2. இலங்கையில் அனைத்து தேர்தலிலும் விகிதாசார முறை நீக்கப்பட்டு, ஒவ்வொரு தொகுதியிலும் யார் அதிக வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே வெற்றிபெற்றவர் என்ற முறை கடைப்பிடிக்கப்படும்.  
3. ஒருவர் அதிகபட்சமாக இரண்டு ஆட்சிக்காலத்துக்கு மட்டுமே ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என்ற நிபந்தனை மீண்டும் கொண்டுவரப்படுகிறது. 
4. ஜனாதிபதியின் ஓர் ஆட்சிக்காலம் என்பது ஆறு ஆண்டுகளில் இருந்து ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்படும்.
5. நாடாளுமன்றம் தெரிவுசெய்யப்பட்டு ஓராண்டு கடந்துவிட்ட பின்னர், அதனை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்காது. ஒரு நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னர்தான் அதனைக் கலைக்கும் உரிமை மறுபடியும் ஜனாதிபதிக்கு வரும்.
6. ஒருவர் ஜனாதிபதியாக இருக்கும்போது அவர் உத்தியோகபூர்வமாக செய்யும் காரியங்களை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கு இருந்துவருகின்ற சட்டத் தடை அகற்றப்படும்.
7. இலங்கையில் அதிகபட்சமாக 30 பேரே அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்களாகவும், அதிகபட்சமாக 40 பேரே துணை அமைச்சர்களாகவும் என ஆக மொத்தம் 70 பேரே அமைச்சர்களாக இருக்க முடியும் என்ற வரம்பு ஏற்படுத்தப்படுகிறது.
8. 17ஆம் அரசியல் சட்டத் திருத்தம் மீண்டும் நடைமுறைப்படும்.
9. நாட்டின் ஆணைக்குழுக்கள் ஜனாதிபதியால் அல்லாமல் சுயாதீனமான முறையில் மீண்டும் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்றும் இந்தத் திருத்தம் அமையும். ஆனாலும், அமைச்சரவையின் தலைவராகவும், முப்படைகளின் தலைமைத் தளபதியாகவும் தொடர்ந்தும் ஜனாதிபதியே விளங்குவார்.
10. பிரதமரையும் அமைச்சர்களையும் நியமிக்கும் அதிகாரம் தொடர்ந்து ஜனாதிபதிக்கு இருக்கும்

அத்துமீறுவோரை சுடும் அதிகாரம் கடற்படைக்கு உண்டு

ranil01இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண இரு நாடுகளும் இணைந்து செயற்பட்டு வருகின்ற நிலையில், இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த கடற்படையினருக்கு அதிகாரம் உள்ளது என இந்தியாவின் என்.டீ.டி.வி தொலைக்காட்சிக்கு  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ள செவ்வியால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏற்கெனவே இந்திய ஊடகமொன்றுக்கு பேட்டியளித்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்படும் என்ற கருத்தை வெளியிட்டிருந்ததால் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா முழுவதிலுமிருந்து பாரிய எதிர்ப்பு கிளம்பியது.
இதற்கிடையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்து சென்றார். இவ்வாறானதொரு நிலையில், மீண்டும் மேற்கண்டவாறான கருத்தை பிரதமர் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளமையால், மீண்டும் அவருக்கு எதிரான எதிர்ப்பு மேலும் வலுப்பெற்றுள்ளது.
அந்த செவ்வியில்  மேலும் தெரிவித்த விக்கிரமசிங்க, ‘இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் வெற்றியளித்துள்ளதாகவும் இலங்கை மக்களை மோடி வெற்றிகொண்டுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தும் அதிகாரம் இலங்கை கடற்படையினருக்கு உள்ளதாகவும் அதுவொன்றும் புதியதல்ல என்றும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜிடம், இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்குமாறு வலியுறுத்தியதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தனது செவ்வியில் மேலும் கூறியுள்ளார்.

இரகசிய முகாம்கள் தொடர்பான சாட்சியங்கள் என்னிடம் உள்ளன: சுரேஷ்

sureshஇரகசிய முகாம்கள் தொடர்பான சாட்சியங்கள் தன்னிடம் உள்ளதாகவும் சாட்சியங்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டால் அவற்றை வெளிப்படுத்த தான் தயார் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், தெரிவித்துள்ளார். 

மேலும் தெரிவிக்கையில்,

கடத்தப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரகசிய முகாம்கள் தொடர்பாக உரிய விசாரணைகள் நடத்தப்படாமல் அவ்வாறான முகாம் இல்லை என பிரதமரும் நீதியரசரும் கூறுகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதியின் ஊழல்கள் தொடர்பாகவும் அமைச்சர்களின் ஊழல்கள் தொடர்பாகவும் விசாரிக்க குழு அமைத்துள்ளார்கள்.

ஆனால், இரகசிய முகாம்கள் தொடர்பான விசாரணைகளை உரிய முறையில் நடத்தாது இராணுவ தளபதியும் கடற்படை தளபதியும் அவ்வாறான முகாம் இல்லை என கூறினர், எனவே, அவ்வாறான இரகசிய முகாம்கள் இல்லை என பிரதமரும் நீதியரசரும் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

திருகோணமலையில் கோட்டாபய எனும் பெயர் கொண்ட இரகசிய தடுப்பு முகாம் இருந்தது. அதில் 700 பேர் வரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது அவ்வாறான முகாம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் முன்னர் இருந்தது. இதற்கான சாட்சியங்கள் என்னிடம் உண்டு. முழுமையான விசாரணைகள் நடத்தப்பட்டு சாட்சியங்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டால் சாட்சியங்களை முற்படுத்துவேன்.

அந்த முகாம் தொடர்பிலும் அந்த முகாமில் இருந்தவர்கள் யார்? அவர்கள் இப்பொழுது எங்கே? எதற்காக தடுத்து வைக்கப்பட்டு இருந்தார்கள்? போன்ற கேள்விகளுக்கு விடையையே நாங்கள் கோருகிறோம்.

இறுதி யுத்தத்தின் போது பேருந்துகளில் 20 ஆயிரம் பேர்  ஏற்றி செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்கள். அவர்களை ஏற்றி சென்றதை அவர்களுடைய உறவினர்கள் நேரில் கண்டுள்ளார்கள்.

எனவே, இந்த விடயங்களை முன்னைய அரசாங்கம் போல் மூடி மறைக்க முயலாமல் அது தொடர்பான பூரண விசாரணையை புதிய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

அதனை விடுத்து கடற்படையிடம் கேட்டோம், இராணுவத்தினரிடம் கேட்டோம் அவர்கள் அவ்வாறான முகாம்கள் இல்லை என்கிறார்கள். எனவே ,அவ்வாறான முகாம் இல்லை என்ற பதிலை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என மேலும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபைக்கு தலைவர், பிரதி தவிசாளர் தெரிவு

east makanamதிங்கட்கிழமை (16) நடைபெற்ற விசேட அமர்வில் கிழக்கு மாகாண சபையின்  தலைவராக சந்திரதாச கலபதியும் பிரதி தவிசாளராக இரா.துரைரத்தினமும் தெரிவு செய்யப்பட்டனர். தலைவர், பிரதி தவிசாளர் தெரிவை அடுத்து, ஐந்து நிமிடங்கள் வரை சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து புதிய சபை தலைவர் தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில், புதிய சபை தலைவரினால் மீண்டும் கூட்டப்பட்டது. இதன்போது, இம்மாதம் 31ஆம் திகதி மீண்டும் சபை கூடவுள்ளதாக புதிய சபை தலைவரினால் அறிவிக்கப்பட்டது .
கிழக்கு மாகாண முதலமைச்சராக தெரிவான ஹாபிஸ் நஸீர் அஹமட் தலைமையிலான அமைச்சரவையின் முதலாவது அமர்வு இதுவாகும். இதில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோவும் கலந்துகொண்டார். ஆளுநராக நியமிக்கப்பட்ட ஒஸ்ரின் பெர்ணான்டோ கலந்து கொள்ளும் முதலாவது அமர்வும் இதுவாகும்.
முன்னர் தவிசாளராக  செயற்பட்ட ஆரியவதி கலபதி தற்போது வீதி, போக்குவரத்து மற்றும் காணி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.