ஆகஸ்ட் 10ம் திகதிவரை வாக்காளர் அட்டை விநியோகம்-

votesஆகஸ்ட் 17ம்திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் அச்சடிக்கும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளது என தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது. அந்தவகையில் 22 மாவட்டங்களிலும் சுமார் ஒருகோடியே 50 இலட்சத்து 496 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். இவர்களுக்கான வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்தின் ஊடாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய இம்மாதம் 29ம் திகதி நாட்டிலுள்ள தபால் நிலையங்களுக்கு கையளிக்கப்பட்டு ஆகஸ்ட் 10ம் திகதிக்குள் வீடு வீடாக வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும். ஆகஸ்ட் 2ம் திகதி மற்றும் 9ம் திகதி ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் விசேட வாக்காளர் அட்டை விநியோகிக்கும் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார். எனினும் வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் ஓகஸ்ட் மாதம் 10ம் திகதிக்கு பின்னர் அந்தந்த அஞ்சல் மற்றும் உப அஞ்சல் அலுவலகங்களுக்குச் சென்று தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தி பெற்றுக்கொள்ளமுடியும் என தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் தபால்மூல வாக்களிப்பிற்கு தேர்தல் கடமையில் ஈடுபட எதிர்பார்த்துள்ள ஊழியர்கள் 5 இலட்சத்து 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. குறித்த விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகின்றது. கடந்த 14 ஆம் திகதியுடன் தபால்மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பங்கள் ஏற்கும் நடவடிக்கை முடிவடைந்துள்ளது. மேலும் தற்காலிக அடையாள அட்டைகள் விநியோகிப்பதற்கான விண்ணப்பங்களை ஆகஸ்ட் 10 ஆம் திகதி வரை ஏற்பதற்கு தேர்தல் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை இல்லாத அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்களிப்பதற்காக தற்காலிக அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல்கள் செயலகம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் ஜனாதிபதி தேர்தலில் பயன்படுத்திய அடையாள அட்டையை பயன்படுத்த முடியும் என்றும் தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.