மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படவில்லை-ஆனந்தன் எம்.பி-

sivasakthi ananthanயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் எதிர்பார்ப்புகள் வரவு-செலவுத்திட்டத்தில் நிறைவேற்றப்படவில்லையென ஈ.பி.ஆர்.எல்.எவ்இன் செயலாளரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வரவு-செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின்மீதான விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ந.சிவசக்தி ஆனந்தன் மற்றும் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் ஆகியோர் கலந்துகொள்ளாமைக்கான காரணம் குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு எதிர்பார்த்த நிவாரணங்கள் இந்த வரவு- செலவுத்திட்டத்தில் வழங்கப்படவில்லை. அரசியல் கைதிகள் விடுதலை, தமிழர்கள் வாழ்கின்ற மாவட்டங்களில் தமிழ் அரச அதிபர்களை நியமித்தல் போன்ற சிறிய அரசியல் கோரிக்கைகளைக்கூட இந்த நல்லாட்சி அரசாங்கம் நிறைவேற்றவில்லை. நிறைவேற்றுவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. முன்னர் ஆட்சியாளர்களாகவும் பிரதான எதிர்க்கட்சியாகவும் பெரும்பான்மை இனக்கட்சிகள் இருந்தமையால்தான் எமது கோரிக்கைகள் செவிமடுக்கப்படாமல் இருந்தன எனக் கருதப்பட்டது. இப்பொழுது இரண்டு கட்சியினரும் ஓரணியில் இருப்பதால் எமது கோரிக்கைகள் உரியமுறையில் பரிசீலிக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் நாமும் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு நிபந்தனையின்றி ஆதரவளித்தோம். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் 16ஆசனங்களைப் பெற்று நிபந்தனைகளின்றி நாடாளுமன்றத்துக்கு வெளியிலிருந்து இந்த அரசுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்தோம். இதற்குப் பிரதி உபகாரமாக இப்பொழுது எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவர் பதவி மற்றும் அரசியல் யாப்பு சீர்திருத்தசபை உறுப்பினர் என்ற பதவிகள் கூட்டமைப்புக்குக் கிடைத்துள்ளன. இருப்பினும் இந்தப் பதவிகளால் எதுவித பயனையும் தமிழ் மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.