தேர்தல் வாக்காளர் இடாப்பு இணையத்தளத்தில் பிரசுரிப்பு-
2015ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பு இன்றுமுதல் தேர்தல்கள் செயலகத்தின் இணையத்தளத்தில் பிரசுரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதி வரை வாக்காளர் இடாப்பு இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இந்த காலப்பகுதியில் வாக்காளர் இடாப்பில் உள்ள பெயரில் குறைப்பாடுகள் காணப்படுமாயின், மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளருக்கு அல்லது தேர்தல்கள் செயலகத்திற்கு அறிவிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். றறற.நடநஉவழைn.டம எனும் இணையத்தள முகவரியூடாக 2015ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பு தொடர்பிலான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் எனத் தேர்தல்கள் செயலகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
நாலக்க உள்ளிட்ட மூவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்-
பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் நாலக்க கொடஹேன உள்ளிட்ட மூவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதன்படி இவர்களை எதிர்வரும் 04ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளனர். தனது பதவிக் காலத்தில் இளைஞர்களுக்கான நாளைய அமைப்புக்கு 50 இலட்சம் ரூபா நிதி வழங்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கான நாலக்க கடந்த 7ம் திகதி பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியிருந்தார். இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட அவரை கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியவேளை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனையிலிருந்து தப்பிய இலங்கைப் பெண்-
சவுதி அரேபியாவில் ஆணொருவருடன் தகாத உறவைப் பேணியதாக குற்றம்சாட்டப்பட்டு கல்லால் அடித்து கொல்லுமாறு, இலங்கைப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை, சிறைத் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட மேன்முறையீட்டை அடுத்தே, அந்த நாட்டு அரசாங்கத்தினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார். இதன்படி குறித்த பெண் மூன்று வருடங்கள் சிறையில் இருக்க வேண்டும் எனத் தெரியவந்துள்ளது.
ஐரோப்பாவிற்கு புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு-
கடல் வழியாகவும், தரை மூலமாகவும் ஐரோப்பாவுக்குள் நுழைந்த குடியேறிகளின் எண்ணிக்கை பத்து லட்சத்தை தாண்டிவிட்டதாக குடியேறிகளுக்கான சர்வதேச அமைப்பு (ஐ.ஜி.எம்) கூறியுள்ளது. இது கடந்த வருடத்தை விட 4 மடங்கு அதிகமாகும். இதில் பெருமளவிலானோர் கடல் மார்க்கமாகவே வந்துள்ளனர். 8 லட்சத்துக்கும் அதிகமானோர் துருக்கியில் இருந்து கிரேக்கத்துக்கு கடல் வழியாக வந்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அகதிகளாவர். 3695 பேர் கடலில் மூழ்கியுள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்றும் ஐ.ஓ.எம் கூறியுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த திங்களன்று எட்டப்பட்டதாகவும், கடல் மற்றும் தரை மார்க்கமாக வந்தவர்களின் எண்ணிக்கை 1,005,504 ஆகும் என்றும் அது கூறுகின்றது. கிரேக்கம், பல்கேரியா, இத்தாலி, ஸ்பெயின், மால்டா மற்றும் சைப்பிரஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளின் ஊடாக வந்தவர்களே இவர்களாவர். 455,000 பேர் சிரியாவைச் சேர்ந்த அகதிகள், 186,000 க்கும் அதிகமானோர் ஆப்கானில் இருந்து வந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



