ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் நலன் சார்ந்துச் செயற்படுத்துவதைத் தடுக்க, சுற்றாடல் அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா மேற்கொண்ட முயற்சியைக் கண்டிப்பதாக, ஊடகவியலாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
பாதாள உலகக் கோஷ்டியுடன் தொடர்புடையஅமைச்சர் எனக் குற்றஞ்சாட்டி, அமைச்சர் சரத் பொன்சேகா தொடர்பில் இலங்கைத் தனியார் வானொலி ஒன்று செய்தி ஒலிபரப்பாக்கியிருந்தது. இந்நிலையில், குறித்த செய்தியை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டுமென, வானொலியின் ஆசிரிய பீடத்துக்கு, அமைச்சர் பொன்சேகா அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக, அந்த கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. குறித்த செய்தி தவறானதெனச் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், ‘மோதிப் பார்க்கலாம், என்ன நடக்குமெனப் பார்ப்போம்’ என்று தெரிவித்துள்ளதோடு, செய்தி தொடர்பில் மன்னிப்புக் கோரவேண்டுமென, அந்த வானொலி நிலையத்துக்கு ஆணையிட்டுள்ளதாகவும், அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊடகச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தி, ஊடகவியலாளர்கள் சுதந்திரமாகச் செயற்படுவதற்கு, இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அந்த அமைப்பு கோரியுள்ளது.
மேலும், அமைச்சர் சரத் பொன்சேகாவை, இது தொடர்பில் எச்சரிப்பதோடு, மீண்டும் இவ்வாறானதொரு சம்பவம் நடைபெறாதென்பதை, அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமெனவும் கோரியுள்ள ஊடகவியலாளர்களின் சர்வதேசக் கூட்டமைப்பு, இந்த விடயமானது, ஊடகச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதென்றும் சுட்டிக்காட்டியுள்ளது.