துயர் பகிர்வு   – அருட்பணி ஜேம்ஸ் பத்திநாதன் அவர்கள்

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அருட்பணி ஜேம்ஸ் பத்திநாதன் அவர்கள் 11-07-2019 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

இன ரீதியான வன்முறையால் பாதிக்கப்பட்ட மலையக மக்களை காந்தீயம் அமைப்பின் மூலமாக வடக்கு கிழக்கில் குடியேற்றுவதில் மிகவும் அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் செயலாற்றியதோடு, கழகத்தின் செயலதிபர் உமாமகேஸ்வரன் அவர்களுடனும் கழகத்தின் ஏனைய தோழர்களுடனும் மிக நெருக்கமாகப் பணியாற்றியவர்.

இலங்கையில் திட்டமிட்டவகையில் மேற்கொள்ளப்பட்ட இன ஒடுக்குதல்களுக்கும், இன ரீதியான வன்முறைகளுக்கும் எதிராக தீவிரமாக செயற்பட்டதோடு, அனைத்து விடுதலைப் போராட்ட இயக்கங்களுடன் நெருக்கமான தொடர்புகளை பேணி, தமிழ் மக்களுடைய முழுமையான விடுதலைக்காக தன்னுடைய அர்ப்பணிப்பான சேவையினை ஆற்றிவந்தார்.
கிளிநொச்சி ஆரோபணம் இளைஞர் இல்லத்தின் இயக்குனராகவும், யாழ். மனித முன்னேற்ற நடுநிலையத்தின் இயக்குனராகவும், செட்டிகுளம், பூநகரி, முழங்காவில், முல்லைத்தீவு, மாங்குளம், கொய்யாத்தோட்டம் ஆகிய பங்குத் தளங்களில் பங்குத் தந்தையாகவும், யாழ். மறைமாவட்டக் காணிப் பொறுப்பாளராகவும் பணியாற்றியிருந்த அருட்பணி ஜேம்ஸ் பத்திநாதன் அவர்களின் மறைவு விடுதலையை வேண்டி நிற்கும் தமிழர்களுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் இப்பெருந் துயரினைப் பகிர்ந்து கொண்டு அன்னாருக்கு எமது இதய அஞ்சலியை காணிக்கையாக்குகின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)