கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை திறக்கும் தீர்மானம் தற்போதைக்கு இல்லை என்று விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் தூதுவர் மொஹமட் அஷ்ரப் ஹய்தாரி நேற்று மாலை அமைச்சர் ரணதுங்கவை சந்தித்துப் பேசியுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டிருக்கும் அமைச்சர், சுகாதாரத் துறையினர் மற்றும் கோவிட்-19 வைரஸ் தடுப்புப் படையணியின் ஆலோசனையின் பின்னரே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். Read more
ரயில் மார்க்கங்களின் இரு மருங்கிலும் சட்டவிரோதமாக வசிப்போருக்கு நிரந்தர வீடுகளை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன் முதற்கட்டமாக களனிவெலி ரயில் மார்க்கத்தின் இரு மருங்கிலும் உள்ள சட்டவிரோத குடியிருப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு நெரிசல்மிகு ரயில் செயற்றிட்டத்தின் பணிப்பாளர் பாலித சமரசிங்க குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, மருதானை தொடக்கம் பாதுக்க வரை வசிக்கும் 1,630 குடும்பங்களை வெளியேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
TRCSL எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசிகளை மாத்திரம் கொள்வனவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, SIM அட்டையுடன் பயன்படுத்தப்படும் எந்தவொரு தொலைபேசி சாதனத்தையும், TRCSL எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்திருத்தல் இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் தங்களின் காணிகளை விடுவிக்க கோரி முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் நேற்று மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். பல வருட காலமாக தாம் தமது காணிகளை பல இழந்து சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாகவும் தமது காணிகளை விரைவில் விடுவிக்குமாறும் இவர்கள் அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்காக விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் முதன்முறையாக அனுமதி அட்டைகளை வழங்க பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பரீட்சை அனுமதி அட்டைகள், பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை அனுமதி அட்டைகளில் பரீட்சை இலக்கம் மற்றும் விண்ணப்பதாரிக்கான பரீட்சை மத்திய நிலையம் தொடர்பான தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருக்குமென கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.
உள்ளக பாதுகாப்பு மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ, வவுனியாவுக்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது, 55 மில்லியன் ரூபாய் செலவில் வவுனியா மாவட்டச் செயலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கேட்போர் கூடத்தை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து, வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகாணங்களைச் சேர்ந்த பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது. இதில் பிரதேச ரீதியாக மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டன.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியில், இலங்கை மின்சார சபையால் மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, நடுக்குடா பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தித் திட்ட செயற்பாடுகள் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்கு, மின்வலு அமைச்சர் டலஸ் அழகபெரும, காற்று, சூரியசக்தி வலு இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தலைமையிலான விசேட குழுவினர், மன்னார் – நடுக்குடா பகுதிக்கு நேற்று மாலை விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றுடையவர்களின் எண்ணிக்கை 3382 ஆக அதிகரித்துள்ளது. ஒமானிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்து மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளைத் தீர்த்தல் உள்ளடக்கிய ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, அனைத்து இந்து அமைப்புக்களின் ஏற்பாட்டில், வவுனியாவில் இன்று காலை, மாபெரும் ஊர்வலமொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா குருமண்காடு காளி கோவில் முன்றலில் இருந்து காலை 08.30 மணியளவில் ஆரம்பமான இந்த ஊர்வலம், குருமண்காட்டு சந்தி ஊடாக வவுனியா கந்தசுவாமி கோவில் முன்றலை சென்றடைந்து நிறைவடைந்தது.
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாவத்தை சின்னவெம்பு கடலில் மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிந்துள்ளார். பாலையடித்தோன சந்திவெளியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான இ.செல்லத்துரை வயது (55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வழக்கம் போல் கரைவலைத் தொழிலுக்குச் சென்றவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.