Header image alt text

வடமாகாண அமைச்சர்கள் அறிவிப்பு; ஈபிஆர்எல்எப், பிளாட் எதிர்ப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் 14 உறு(ப்பினர்களும், ஈபிஆர்எல்எப் கட்சியின் சார்பில் 6 உறுப்பினர்களும் டெலோ அமைப்பின் சார்பில் 5 உறுப்பினர்களும், புளொட் அமைப்பின் சார்பில் 2 உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் ஒரு உறுப்பினரும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு போனஸ் இடம் வழங்கப்பட்டுள்ள முஸ்லிம் உறுப்பினராகிய நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் பொது வேட்பாளர் ஒருவர் என மொத்தமாக 30 பேர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களாக வடமாகாண சபையில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து அமைச்சர் ஒருவரைத் தேர்ந்தெடுக்க முடியாவிடினும் பிரதித் தவிசாளர் பதவியிலிருக்கும் ஆன்டன் ஜெயநாதனுக்கு முக்கியமான துறைப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலதிக உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அயுப்அஸ்மீனுக்கும் அப்பொறுப்புக்களில் குறிப்பிட்ட விடயங்களில் பங்கேற்க வழிவகுக்கப்பட்டுள்ளது. இவர்கள் முதலமைச்சருடன் சேர்ந்து கடமையாற்றுவார்கள் முல்லைத்தீவு மாவட்டம் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம் என்பது கருத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சுப்பதவிகள் மீள்பரிசீலனை செய்யப்படும் போது முல்லைத்தீவுக்கு அமைச்சுப்பதவி வழங்கப்படுவதானது முன்னுரிமை பெறும் என்று வடமாகாண முதலமைச்சரினால் அமைச்சரவை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போருக்குப்பின்னரான சூழலை கருத்திற்க்கொண்டு உறுப்பினர்களின் தகைமைகள், அனுபவங்கள், நிபுணத்துவங்கள், விருப்பங்கள் போன்றவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெற்றுள்ளது. ஆட்சித்திறனுக்கு அடிகோலுபவை தகைமையும் திறமையும் ஆவன. எமது மக்களின் நம்பிக்கையை நடைமுறைப்படுத்தும் வண்ணம் இவற்றையே அத்திவாரமாகக் கொண்டு தேர்வு நடைபெற்றுள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்ப்பு இந்த அமைச்சரவைப் பெயர்ப்பட்டியல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களும் வடமாகாண முதலமைச்சரும் இணைந்து வெளியிடப்பட்ட பட்டியலே தவிர, தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் வெளியிடப்பட்டதல்ல என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈபிஆர்எல்எவ் கட்சியின் செயலாளர் நாயகமுமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியினால் வெளியிடப்பட்டுள்ள அந்த பெயர்ப்பட்டியலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமது கட்சிக்கு வழங்கப்படுகின்ற அமைச்சர் பதவியை பாதிக்கப்பட்ட பிரதேசமாகிய முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள இருவரில் ஒருவருக்கு வழங்குமாறு தாங்கள் தமிழரசுக் கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தனுக்குத் தெரிவித்திருந்த போதிலும், அவ்வாறு செய்யாமல் அவர்கள் தமது விருப்பத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட ஒருவருக்கு அதனை வழங்கியிருப்பதை தமது கட்சிக்கு வழங்கியதாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இது கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக வேண்டுமென்றே செய்யப்பட்ட காரியம் என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்தப் பெயர்ப்பட்டியல் குறித்து பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட பிளாட் அமைப்பின் தலைவரும், மாகாண சபை உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், தேர்தல் நடந்து முடிந்ததும் நடைபெற்ற கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட முதலாவது கூட்டத்தில் நான்கு அமைச்சுக்களையும் சபையின் தலைவர் பதவியையும் தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருக்கும் ஐந்து கட்சிகளுக்கிடையில் பகிர்ந்து கொள்வதற்குக் கொள்கை ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டபோதிலும், அது படிப்படியாகக் குறைவடைந்து, இரண்டு அமைச்சுக்களை இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுத்துக் கொண்டு ஏனைய இரண்டையும் ஈபிஆர்எல்எவ், டெலோ கட்சிகளுக்கு வழங்கியிருப்பதாகத் தெரிவித்தார்.

இது மாகாண சபையின் ஆரம்ப நடவடிக்கைக்கு அழகல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் மக்கள் ஒற்றுமைக்கும், ஒருங்கிணைந்த செயற்பாட்டிற்கும் அமோகமாக வாக்களித்துள்ள நிலையில், மாகாண சபையின் முக்கிய பொறுப்புக்கள் கட்சிகளிடையே பகிர்ந்தளிப்பதன் ஊடாகத்தான் அவர்களும் ஆர்வத்துடன் பங்களிக்க முடியும் என்றும், பதவியைப் பெறுவது முக்கியமல்ல என்றும் தெரிவித்தார். டெலோ அமைப்பின் தலைமைப்பீடம் இந்த அமைச்சரவைப் பட்டியல் பற்றி கலந்தாலோசிப்பதற்காக அவசரமாகக் கூடி ஆராய்ந்த பின்பே கருத்து எதனையும் தெரிவிக்க முடியும் என்று அந்தக் சட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய செல்வம் அடைக்கலநாதன் கூறினார். அவருடன் பிபிசி தமிழோசை தொடர்பு கொண்ட போது கட்சியின் தலைமைப்பீடம் கூடுவதற்குத் தயாராகிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

வடமாகாண சபை அமைச்சர்களின் விபரம் வெளியீடு-

வடமாகாண சபைக்கான அமைச்சரவை தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நேற்று நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டத்தில் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சர் – தம்பிராஜா குருகுலராஜா சுகாதார அமைச்சர் – பத்மநாதன் சத்தியலிங்கம் விவசாய அமைச்சர் – பொன்னுத்துரை ஐங்கரநேசன் உள்ளுராட்சி அமைச்சர் – பாலசுப்பிரமணியம் டேனிஸ்வரன் அவைத் தலைவர் – கந்தையா சிவஞானம், பிரதி அவைத் தலைவர் – அன்ரனி ஜெகநாதன் ஆகியோரின் பெயர்களே வெளியிடப்பட்டுள்ளன. நேற்று நடைபெற்ற இக் கூட்டத்தில் வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் மாத்திரமே கலந்துகொண்டிந்தமை குறிப்பிடத்தக்கது.

வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக கமலேந்திரன் தெரிவு-

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கந்தசாமி கமலேந்திரன் வடமாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்டு மாகாணசபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட கந்தசாமி கமலேந்திரன் எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நேற்று ஈ.பி.டி.பி அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பொதுச் செயலாளரினால் ஆளுநருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஈ.பி.டி.பி மேலும் குறிப்பிட்டுள்ளது.

பிரித்தானியாவில் இலங்கையர் கைது-

இலங்கையர் உள்ளிட்ட ஆறுபேர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். விஸா காலம் நிறைவடைந்த நிலையில், பிரித்தானியாவில் தங்கியிருந்த குற்றத்திற்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லங்கேசியர் பகுதியில் வைத்தே இந்த இலங்கையர், குடிவரவுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகரம் அறிவித்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்ளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையரின் கைது தொடர்பில் இலங்கை தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் வடமாகாண சபையில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அமைச்சுப் பதவியொன்று வழங்கப்பட வேண்டும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு போராட்டம்

இலங்கையின் வடமாகாண சபையில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அமைச்சுப் பதவியொன்று வழங்கப்பட வேண்டும் என்று அங்குள்ள உள்ள பெண்கள் அமைப்புக்கள், விவசாய, மீன்பிடிதுறை சார்ந்த அமைப்புக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து கவன ஈர்ப்பு நடவடிக்கையின் மூலம் கோரிக்கை விடுத்திருக்கின்றன.
முல்லைத்தீவு அரச செயலகத்தின் முன்னால் கோரிக்கைகள் அடங்கிய சுலோக அட்டைகளைத் தாங்கிய வண்ணம் வீதியோரத்தில் கூடி நின்று தமது கவன ஈர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
சுனாமி பேரலைகளினாலும், யுத்தத்தினாலும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களைக் கொண்ட முல்லைத்தீவு மாவட்டம் அமைச்சுப் பொறுப்புக்கள வழங்கப்படாமல் புறகக்கணிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர்கள், தமது மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள நான்கு மாகாண சபை உறுப்பினர்களில் ஒருவருக்கு ஓர் அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும் என்று  தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு அனுப்பி வைப்பதற்காக தமது கோரிக்கைள் அடங்கிய மகஜரை முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர்களாகிய டாக்டர் சிவமோகன் மற்றும் எம்.ரவிகரன் ஆகியோரிடம் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கையளித்துள்ளனர்.
நான்கு பேர் அடங்கிய மாகாண சபை அமைச்சரவையை அமைப்பதற்காகப் பல தடவைகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்கள் கூடி பேச்சுக்கள் நடத்தியுள்ள போதிலும், இன்னும் முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாகாணசபை அமைச்சர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் விபரங்களை முதலலைச்சர் சி.வி.விக்னேஸ்வன் வெளியிடுவார் என்று எதிர்பாபர்க்கப்படுகின்றது

கனடாவின் பிரதமரான ஸ்டீபன் ஹார்ப்பர் அவர்கள் இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் தான் கலந்துகொள்ளமாட்டேன் என்று கூறியுள்ளர்

இலங்கையில் மூன்று வருடங்களுக்கு முன்னர் முடிவுக்குவந்த இலங்கைப் போர் மற்றும் அதன் பின்னரான காலப்பகுதி ஆகியவற்றில் அங்கு நிலவரங்கள் மேலும் மோசமடைந்துள்ளதாகவும் மனித உரிமை நிலவரங்களில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று காரணம் காட்டியே கனடாவின் பிரதமரான ஸ்டீபன் ஹார்ப்பர் அவர்கள் இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் தான் கலந்துகொள்ளமாட்டேன் என்று கூறியுள்ளர். கடந்த 2 வருடங்களில் இந்த விடயங்களில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதுடன் அந்த நிலைமைகளில் கணிசமான பின்னடைவு மற்றும் அவை மேலும் மோசமடைதல் ஆகியவற்றை நாங்கள் காணக்கூடியதாக இருக்கிறது. இதன் அடிப்படையில் இந்த காமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதில்லைஎன்று கனடிய பிரதமர் கூறியுள்ளார். அதுமாத்திரமன்றி காமன்வெல்த் அமைப்புக்கான நிதியுதவியையும் கனடா நிறுத்துவது குறித்து பரிசீலிப்பதாகவும் கூறியுள்ளார். காமன்வெல்த் அமைப்புக்கு நிதி உதவி வழங்குவதில் இரண்டாவது இடத்தில் இருக்கும் கனடா வருடாந்தம் 20 மில்லியன் டாலர்களை அந்த அமைப்புக்கு வழங்கிவருகிறது. இதேவேளை கனடாவின் மூத்த செனட் உறுப்பினரும் காமன்வெல்த்துக்கான கனடிய பிரதமரின் தூதுவருமான ஹியூ சேகல் அவர்கள் காமன்வெல்த் அமைப்பின் தலைமைச் செயலரான கமலேஸ் சர்மா இலங்கையின் கைப்பாவையாகச் செயற்படுவதாக விமர்சித்துள்ளார். இலங்கை பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவின் விவகாரத்தை உதாரணமாகக் காண்பித்துப் பேசிய அவர் அவை குறித்த தகவல்கள் அமைப்பின் தலைவர்களுக்கு செல்வதை செயலர் மறைத்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இதற்கிடையே கனடா இந்த மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என்று எடுத்த முடிவு குறித்து கருத்து வெளியிட்ட காமன்வெல்த் அமைப்பின் பேச்சாளரான ரிச்சர்ட் உக்கு அவர்கள் தமது உறுப்பினர்களின் முடிவை தாம் மதிப்பதாகக் கூறியுள்ளார் ஆனால் காமன்வெல்த் அமைப்பின் தலைமைச் செயலர் இலங்கையின் கைப்பாவை என்று கூறியதை அவர் நிராகரித்துள்ளார்.

 

இலங்கை கண்டனம்

Posted by plotenewseditor on 10 October 2013
Posted in செய்திகள் 

 கனடாவின் பிரதமரான ஸ்டீபன் ஹார்ப்பர் அவர்கள் இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் தான் கலந்துகொள்ளமாட்டேன் என்று கூறியுள்ளர் இலங்கை கண்டனம்

மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என்ற கனடாவின் முடிவை இலங்கை கடுமையாக கண்டித்துள்ளது. இந்த மாநாட்டுக்கு ஏனைய அனைத்து நாடுகளும் ஏகோபித்து ஆதரவு தரும் நிலையில் கனடா அதனை புறக்கணிப்பதன் மூலம் அது தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்கிறது என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி. எல். பீரிஸ் கூறியுள்ளார். கனடா இலங்கை மாநாட்டை முற்றாக பகிஸ்கரிப்பதாகக் கூறவில்லை. வெளியுறவு அமைச்சு மற்றும் ஏனைய நிலைகளில் உள்ள பிரதிநிதித்துவம் ஒன்று கனடாவின் சார்பில் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளத்தான் போகிறது.

வடமாகாண சபை சிறப்பாகச் செயற்பட இந்தியா ஒத்துழைக்கும்-குர்ஷித்-

வடக்கு மாகாண சபை சிறப்பாகச் செயற்படுவதற்கும், இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் இந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக வாழவும் தம்மாலான உதவிகளை வழங்கத் தயாராகவுள்ளோம் எனவும் இலங்கையில் புகையிரதப் பாதை அபிவிருத்தி, துறைமுக அபிவிருத்தி, பொருளாதாரா அபிவிருத்திகள், கலாசார அபிவிருத்திகள் என்பனவற்றை மேற்கொள்வதற்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்குவோம் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று தெரிவித்துள்ளார். அமைச்சர் குர்ஷித் தனது குழுவினர் சகிதம் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து மதகுருமார், வர்த்தகர்கள், தொழில்துறை தலைவர்கள், புத்திஜீவிகள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரை யாழ். ரில்கோ விருந்தினர் விடுதியில் வைத்து சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேர்வினின் செயலரும் பாதுகாப்பு அதிகாரியும் வீடு திரும்பல்-

கொழும்பு, மருதானையில் வைத்து கடத்தப்பட்டதாக கூறப்படும் பொதுமக்கள் தொடர்புகள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் இணைப்புச்செயலர் ஜே.டி. திலக்கசிரி மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரியும் வீடு திரும்பியுள்ளதாக பொலிஸ் பதில் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அதிகாரி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அவ்விருவரும் தாக்கப்பட்டுள்ளதாகவும், மாலபேயிலிருந்து வீட்டுக்கு ஆட்டோவில் சென்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பு டி.ஆர் விஜயவர்த்தன மாவத்தையில் வைத்து இவ்விருவரும் நேற்று கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இருவரையும் கடத்தியவர்கள் யார். அவர்களை தடுத்துவைத்து விசாரணைகளை நடத்தியோர் யார் என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

விக்னேஸ்வரன் கடமைகள் பொறுப்பேற்பு-

வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் கடமைகளை இன்றையதினம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். யாழ். கோவில் வீதியில் அமைந்துள்ள முதலமைச்சரின் இல்லத்தில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இந்நிகழ்வில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாண பிரதம செயலர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பொத்துவிலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்-

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பகுதியில் வீசிய பலத்த காற்று மற்றும் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இது தொடர்பான விபரங்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாக அம்பாறை மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் எஸ்.எம். ஸியாத் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவுகளை வழங்குவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். காற்று மற்றும் மழையினால் வீடுகள் சேதமடைந்த நிலையில் இடம்பெயர்ந்தவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தற்போது தங்கியுள்ளனர். நேற்றுமாலை வீசிய பலத்த காற்றால் 373க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் 09 வீடுகள் முழுமையாகவும், 364 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. அத்துடன் இந்த அனர்த்தங்களின் போது, இருவர் காயமடைந்துள்ளனர். இதேவேளை வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் அரச அலுவலகங்களின் கூரைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கல் அவசியம்-குர்ஷித்-

இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்றுகாலை அலரிமாளிகையில் இச்சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் பற்றி இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையில் அர்த்தமுள்ள அதிகாரப்பரவல் மேற்கொள்ளப்பட வேண்டும் என சல்மான் குர்ஷித் இதன்போது ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார். 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்ட குர்ஷித் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் கூடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். இருநாட்டு மீனவர்களுக்கிடையிலான கலந்துரையாடல் மூலம் மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சல்மான் குர்ஷத் சந்திப்பு-

வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பெற்றுக்கொண்டுள்ள பிரமாண்டமான வெற்றிக்கு இந்தியாவின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், வடக்கு மக்களால் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள இந்த வெற்றியானது இந்தியாவுக்கு அரசியல் ரீதியிலான பல்வேறு பாரிய அழுத்தங்களை பிரயோகித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.  இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்தியா முழுமையான அக்கறை செலுத்தி பங்களிப்பையும் வழங்கத் தயாராகவுள்ளது. தற்போது இடம்பெற்றிருப்பது முதற்படி மாத்திரமே. இங்கு எதுவும் முடிந்துவிடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சல்மான் குர்ஷித்தை கூட்டமைப்பு பிரதிநிதிகள் நேற்று கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதன்போது கூட்டமைப்பினரிடம் விடயங்களை கேட்டறிந்த குர்ஷித் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான பிரதிநிதிகளும், அமைச்சர் குர்ஷித்துடன் இந்திய வெளியுறவுத்துறை பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொதுநலவாய நாடுகளுக்கான நிதியை குறைக்க கனடா திட்டம்-

இலங்கையில் பொதுநலவாய நாடுகள் அமர்வுகள் நடத்தப்படுவதற்கான எதிரொலியாக பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு வழங்கிவரும் நிதி உதவியை குறைக்க கனடா திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு வழங்கும் நிதி உதவிகளை கணிசமாக குறைப்பது குறித்து கனடா ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு நிதி உதவிகளை அதிகளவில் வழங்கும் நாடுகளின் வரிசையில் கனடா இரண்டாம் இடத்தை வகிக்கின்றது. ஆண்டு தோறும் கனடா 20 மில்லியன் கனேடிய டொலர்களை பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்காக வழங்கி வருகின்றது. இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து திருப்தியடைய முடியாது என கனடா அறிவித்துள்ளது. கனடாவில் வரி செலுத்தும் மக்களின் பணமே இவ்வாறு உதவியாக வழங்கப்படுவதாகவும் அதனை ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்த விரும்புவதாகவும் கனடா அறிவித்துள்ளது.

பொதுநலவாய மாநாட்டில் சைப்பிரஸ் ஜனாதிபதி பங்கேற்க தீரமானம்-

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவாகள்; அமர்வி;ல் பங்கேற்பதென்று சைப்பிரஸ் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸ் சைப்பிரஸ் ஜனாதிபதி நிக்கொஸ் எனஸ்ட்டியாடெஸை சந்தித்தபோது இந்த தீர்மானம் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில், பங்கேற்பதென அவுஸ்திரேலியா, பி;ரித்தானியா போன்ற நாடுகள் அறிவித்துள்ளன. மனித உரிமை நிலவரத்தை காரணம் காட்டி கனடா இலங்கை அமர்வை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூத்த ஊடகவியலாளர் செல்லையா நடராஜா அவர்களின் மறைவிற்கு புளொட் அனுதாபச் செய்தி-

வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் செல்லையா நடராஜா அவர்களின் மறைவானது பத்திரிகைத் துறைக்கு மிகப்பாரிய இழப்பாகும் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(புளொட்) விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1950களில் ஊடகத்துறையில் காலடி எடுத்துவைத்த அமரர் நடராஜா அவர்கள், வீரகேசரி பத்திரிகையில் தம்மை இணைத்துக்கொண்டார். பின்னர் அதன் உதவி ஆசிரியராகவும், அதன் பிறகு செய்தி ஆசிரியராகவும் ஊடகத் துறையில் கடந்த 2005ஆம் ஆண்டுவரையில் பணியாற்றி ஓய்வுபெற்றார். 1983ஆம் ஆண்டில் காணப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையிலும் அமரர் நடராஜா அவர்கள் துணிச்சலுடன் தமிழ் மக்களின் அவலங்களை வெளிக்கொணர்ந்தவர். அத்துடன் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளையும், தேவைகளையும் உலகிற்குச் சொல்வதில் அயராது பாடுபட்டவர். போராட்ட வழிமுறை மாறியபோது அதற்கான நியாயங்களை கோடிகாட்ட அவர் பின்னின்றதில்லை. Read more

உள்ளக சுயநிர்ணயம் ஒரு நாட்டை பிளவுபடுத்தாது-சிவி விக்னேஸ்வரன்-

உள்ளக சுயநிர்ணயம் ஒருநாட்டை பிரிவுபடுத்தாமல் ஒற்றுமைப்பாதையில் கொண்டு செல்லக்கூடும் என்ற உண்மையை எமது சிங்கள சகோதர, சகோதரிகள் தமது அரசியல்வாதிகளுக்கு இடித்துரைக்க முன்வரவேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி முன்னிலையில் முதலமைச்சராக பதவியேற்ற பின் ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். என்னுடைய பதவியின் செயல்பண்புகளையும் கடப்பாடுகளையும் நான் நேர்மையுடனும் நம்பிக்கையுடனும் இயற்றுவேன் என்றுதான் இன்றுகாலை பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டேன். Read more

வட மாகாண முதலமைச்சராக சி.வி விக்னேஸ்வரன் சத்தியப் பிரமாணம்-

வட மாகாண முதலமைச்சராக திரு. சி.வி விக்னேஸ்வரன் அவர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் முன்னிலையில் அலரிமாளிகையில் வைத்து இன்றுமுற்பகல் 9.30மணியளவில் தமிழில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். முதலில் திரு சி.வி விக்னேஸ்வரன் அவர்கள் வட மாகாணசபை உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதுடன், அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண முதலமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். இந்த சத்தியப் பிரமாண நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகியோரும், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், சி.வி. விக்னேஸ்வரன், விக்னேஸ்வரன் அவர்களது குடும்ப அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன், அரச தரப்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுடன், பிரதமர் டீ.எம்.ஜயரத்ன, வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி, அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, டியூ குணசேகர, ராஜித சேனாரத்ன, மைத்திரபால சிறிசேன, திஸ்ஸ விதாரண, ரவூப் ஹக்கீம், அதாவுல்லா, அஸ்வர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும், பிரபா கணேசன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர். இது பற்றி கருத்துத் தெரிவித்த புளொட் தலைவரும், வட மாகாணசபை உறுப்பினருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், தாம் நல்லெண்ண நோக்கிலும், ஒற்றுமைக்காகவுமே இந்நிகழ்வில் பங்கேற்றதாகவும், ஆனாலும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்வது பிழையானது என்ற தனது நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் கிடையாதென்றும் குறிப்பிட்டுள்ளார்.