Header image alt text

இலங்கை தொடர்பில் பிரித்தானியா ஏனைய நாடுகளுடன் கலந்துரையாடல்-

ukஇலங்கையின் மனித உரிமைகள் விவகாரங்கள் தொடர்பில், பிரித்தானிய ஏனைய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுகோ ஸ்வைர் இதனை நேற்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பிரத்தானியா மீண்டும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு உள்வாங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான வினைத்திறனான செயற்பாடுகளை பிரித்தானியா முன்னெடுக்குமென அவர் கூறியுள்ளார். அத்துடன் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரங்கள் தொடர்பில், ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாய நாடுகள் மற்றும் ஏனைய சர்வதேச நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவின் வெளிவிவகார செயலர் டக்ளஸ் எலக்ஸாண்டர், பிரித்தானிய புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது இலங்கையில் சர்வதேச விசாரணை ஒன்று நடத்துவது தொடர்பில் பிரித்தானியாவின் தொழிலாளர் கட்சி விரைவில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

பிரித்தானிய தொழிற் கட்சி இலங்கைக்கு அழுத்தம்-

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரித்தானிய பிரதான எதிர்க்கட்சியான தொழிற் கட்சியும் தெரிவித்துள்ளது. பிரித்தானியா தமிழர் பேரவை உறுப்பினர்கள் சந்தித்து பேசும்போது பிரித்தானிய எதிர்க்கட்சி தலைவர் எட் மிலிபெண்ட் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு மார்ச் 14ஆம் திகதிவரை உலக நாடுகள் பொறுமை காக்கக்கூடாது என தமிழர் பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இலங்கையில் தமிழ் மக்கள்மீது நடத்தப்பட்ட போர்க்குற்றத்திற்கு சர்வதேச விசாரணைக்கான சந்தர்ப்பம் ஏற்படும்வரை தொடர்ந்து தமது கட்சி குரல் கொடுக்கும் என்றும் எட் மிலிபெண்ட் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மெக்சிகோவில் இலங்கையர்கள் ஐவர் கைது-

மெக்சிகோவில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் இலங்கையர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தவேளை இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இரு சிறுவர்களும் பெண் ஒருவரும் அடங்குகின்றனர். குறித்த ஹோட்டலில் இவர்கள் ஐவரும் கடந்த 4 நாட்களாக தங்கியிருந்துள்ளனர். 34 வயதான சந்திரிகா நிரோஷன், 31 வயதான தூரந்திங்க நிரோஷன், மற்றும் 27வயதான சிவபாதம் மற்றும் 10, 5 வயதான சிறுவர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு ஆவணங்கள் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது தம்மிடம் அவ்வாறான ஆவணங்கள் எதுவும் இல்லை என இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.

அடையாள அட்டை கிடைக்காத மாணவர்களுக்கு உதவி-

இம்முறை இடம்பெறவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் ஆட்பதிவு திணைக்களம் இன்றும் திறக்கப்பட்டிருந்தது. இதுவரையில் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளாத மாணவர்கள் இன்று அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள முடியும் என ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ்.சரத் குமார தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும் இதுவரையில் பெருமளவான பரீட்சை விண்ணப்பதாரிகளது அடையாள அட்டை பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பல்வேறு பிரச்சினைகள் உள்ள 1400 அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன. இந்த அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ளும் மாணவர்கள் மட்டுமல்லாது அவர்களது பெற்றோர்களும் ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு சமூகமளிக்க வேண்டும் என சரத் குமார தெரிவித்துள்ளார் 2013ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சை எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. இப்பரீட்சைக்கு 5லட்சத்து 78ஆயிரம் மாணவர்கள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம் புஸ்பகுமார கூறியுள்ளார்.

யாழில் துப்பாக்கி ரவைகள் மீட்பு-

யாழ். சுன்னாகம் ஜயனார் சனசமூக நிலைய வாசிகசாலை கட்டிடத்திற்குள் இருந்து 35 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. வாசிகசாலையினை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது, இந்த துப்பாக்கி ரவைகள் இருப்பது அவதானிக்கப்பட்டு, சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவ்விடத்திற்கு சென்ற பொலிஸார் ரவைகளை மீட்டுச் சென்றனர். இது ஏற்கனவே அங்கு இருந்தவையா, யாராவது கொண்டு வந்த அங்கு போட்டார்களாக என்பது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

மன்னார் பிரதான பாலத்தில் விபத்து-

மன்னார் தள்ளாடி பிரதான வீதியூடாக மன்னாரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பார ஊர்தி ஒன்று நேற்றையதினம் மன்னார் பிரதான பாலப்பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பார ஊர்தி கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பாதையிலிருந்து விலகி பள்ளத்திற்கு சென்றுள்ளது. எனினும் பாதையின் ஓரங்களில் அமைக்கப்பட்டிருந்த தூண்களில் இடிபட்டு பாதையில் இருந்த முற்றும் முழுவதுமாக விலகாமல் பாரிய விபத்து தடுக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்தின்போது இந்த வாகனம் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. ஆனால் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லையென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறையில் அழுகிய நிலையில் ஆணின் சடலம்-

யாழ். பருத்தித்துறையில் அழுகிய நிலையில் ஆணின் சடலமொன்று நேற்றுப்பகல் கரையொதுங்கியுள்ளது. அழுகிய நிலையில் காணப்படுவதால் சடலத்தை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிடுகின்றது. சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அதனை அடையாளம் காண்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குடிப்பரம்பலை மாற்ற திட்டமிட்ட வகையில் சிங்களக் குடியேற்றம்-

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களுடைய காணிகளை அபகரித்து அக்காணிகளில் தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள மக்களைக் குடியேற்றி இம்மாவட்டத்தின் குடிப்பரம்பலை மாற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றது என அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் கொக்கிளாய் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் நேற்றுமுன்தினம் முல்லைத்தீவு, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், மணலாறு (வெலிஓயா) ஆகிய இடங்களுக்குச் சென்று அப்பிரதேசத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர். Read more

தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா காலமானார்-

131205222859-breaking-only-mandela-with-c1-mainதென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா தனது 95ஆவது வயதில் நேற்றுக் காலமானார். இத்தகவலை தென்னாபிரிக்க அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. நெல்சன் மண்டேலா கடந்த சில மாதங்களாக கடும் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன் அதன் பின்னர் அவரது இல்லத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவருடைய உடல்நிலை பாதிப்படைந்து வருவதாக நேற்று முன்தினம் உறவினர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்றிரவு அந்நாட்டு நேரப்படி 8.05 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரது இல்லத்தில் சூழ்ந்திருக்கையில் அவரது உயிர் பிரிந்துள்ளது. 1918ஆம் ஆண்டு ஜுலை 18ஆம் திகதி பிறந்த நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியிரசுத் தலைவராவார். தென்னாபிரிக்காவில் புரட்சியை ஏற்படுத்திய பெருமையுடன் நிறவெறிக்கு எதிராக போராடியமையால் உலகம் போற்றும் தலைவராகவும் அவர் திகழ்ந்தார். மண்டேலாவின் 27ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்குகின்றார். உலக சமாதானத்துக்காக மண்டேலா ஆற்றிய சேவைகளைப் பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு ‘நேரு சமாதான விருது’ வழங்கியது. கணவர் நெல்சன் மண்டேலாவின் சார்பில் வின்னி மண்டேலா டெல்லிக்கு வந்து அந்த விருதைப் பெற்றிருந்தார். அத்துடன் 1990-ல் இந்தியாவின் ‘பாரத ரத்னா’ விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. 1993இல் உலக அமைதிக்கான நோபல் பரிசும், அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருதும் நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டது. தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18ம் தேதியை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக ஐ.நா அறிவித்துள்ளது.

தர்மபுரம் பாடசாலை அபிவிருத்திக்கு நிதியுதவி-

கிளிநொச்சி தர்மபுரம் மகா வித்தியாலயத்தின் அபிவிருத்திக்கென ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) கிளிநொச்சி கிளையின் அனுசரணையில் சிறுதொகை நிதியுதவிக்கான காசோலை இன்றுமுற்பகல் 9.30அளவில் பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. பாடசாலை நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கிணங்க லண்டனில் வசிக்கும் புளொட் அமைப்பைச் சேர்ந்த திரு. தர்மலிங்கம் நாகராஜா அவர்களால் இந்த சிறுதொகை நிதி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

கட்சியிலிருந்து கமலேந்திரன் நீக்கம்:-ஈ.பி.டி.பி-

kamalendranஈ.பி.டி.பியின் வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கே.கமலேந்திரன், கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.தவராசா தெரிவித்துள்ளார். நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷியனின் கொலை விவகாரம் தொடர்பில் கமலேந்திரன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். டானியல் றெக்ஷியனின் கொலைக் குற்றச்சாட்டுக்கள் காரணமாக தனது கட்சியை சேர்ந்த கே.கமலேந்திரன், தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை துறக்க வேண்டும் என கேட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று கூறியிருந்தார்.

பிலிப்பைன்ஸில் சூறாவளி; உதவிப் பணியில் இலங்கை மருத்துவக் குழு-

ஹையான் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை முன்னெடுப்பதற்காக இலங்கை மருத்துவ குழுவொன்று பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு பயணமாகவுள்ளது. மருத்துவர்கள் குழாமில், தாதியர்கள் மற்றும் மேலதிக வைத்திய அதிகாரிகளும் அடங்கியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த குழுவில் 5 வைத்திய அதிகாரிகள் அடங்கியுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. பிலிப்பைன்ஸில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இக்குழுவினர் சுகாதார சேவைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் சீரற்ற காலநிலை, வெள்ளப் பாதிப்பு-

floodகிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் பல வெள்ளநீரில் மூழ்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ள நீர் மேலோங்கியுள்ளதால் அங்கு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பாசிக்குடா பகுதியில் கூடுதலான மழைவீழ்ச்சி இதுவரை பதிவாகியுள்ளது. கல்லோயோ குடியேற்ற கிராமங்களையும் கல்முனை நகரையும் இணைக்கும் பிரதான வீதியிலுள்ள கிட்டங்கி தாம்போதியின் மேலாக வெள்ளம் ஏற்ப்பட்டுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பல பிரதான வீதிகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை திருகோணமலை மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.

தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா (95) காலமானார்

131205222859-breaking-only-mandela-with-c1-mainஇரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அவரது மகள் மகஸிவே மண்டேலா, நெல்சன் மண்டேலா அவரது மரணப்படுக்கையில் மிகவும் தைரியமான ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் என்று கூறியிருந்தார்.
நேல்சன் மண்டேலா உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 2013 ஜூன் மாதம் 8-ம் தேதி  பிரிட்டோரியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நலம் கவலைக்கிடமாக உள்ளது என தென்னாப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சுமாவின் அலுவலகம் 2013 ஜூன் 23-ம் தேதி அறிவித்துள்ளது. மருத்துவமனையில் இருந்து செப்டம்பர் மாதம் வீடு திரும்பியதிலிருந்து அவரது இல்லத்திலேயே மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொண்டிருந்தார்
மண்டேலாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதால், நெல்சன் மண்டேலாவின் நெருங்கிய உறவினர்கள் அனைவரும் பூர்வீக வீட்டிற்கு அவசரமாக வரவழைக்கப்பட்டுள்ளனர். ஜோஹனஸ்பெர்க்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரது இல்லத்தில் சூழ்ந்திருக்கையில் அவரது உயிர் இன்று இரவு 8:50 மணியளவில் பிரிந்துள்ளது.

http://cnnphotos.blogs.cnn.com/2013/06/23/documenting-apartheid-one-long-nightmare/?hpt=hp_c2

பிரித்தானிய காலக்கெடு தொடர்ந்தும் அமுல்-

willaiam hugueஎதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர், மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை முன்னேற்றத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் இல்லையென பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹேக் இதனை தெரிவித்துள்ளார்;. இதனை இலங்கை அரசாங்கம் செயற்படுத்த தவறினால் ஜெனீவா மாநாடு கூடும்போது இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை பிரித்தானிய வலியுறுத்தும் எனவும் அவர் குறி;ப்பிட்டுள்ளார். இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் குறித்து நம்பிக்கையானதும் சுதந்திரமானதுமான விசாரணைகள் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரித்தானியா கோரியிருந்தது. இந்நிலையில், பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோன் பிரித்தானியாவின் உறுதியான நிலைப்பாட்டை பொதுநலவாய மாநாட்டின்போது வெளிப்படுத்தினார் எனவும் வில்லியம் ஹேக் கூறியுள்ளார்.

அரச அதிகாரிகள் தமிழ் கற்க பௌத்த அமைப்பு எதிர்ப்பு-

Bodu_bala sanaஇலங்கையில் அரச அதிகாரிகள் தமிழ்மொழியை கற்பதை கட்டாயப்படுத்த, அரசு எடுத்துள்ள முடிவை இரத்துச் செய்யுமாறு கடும்போக்கு பௌத்த அமைப்பான பொது பல சேனா கோரியுள்ளது. தமது நாடு ஒரு சிங்கள பௌத்த நாடு என்பதை இலங்கை அரசு மறக்கக் கூடாது என அந்த அமைப்பின் செயலர் கலபொட அத்தே ஞானசார தேரர் கூறியுள்ளார். இலங்கையில் பெரும்பாலானவர்கள் சிங்கள மொழியை பயன்படுத்துவதால் அவர்களை தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என அரசு கூற முடியாது. அரசு தனது தீர்மானத்தை ரத்து செய்துவிட்டு, நாட்டில் அனைவரும் சிங்கள மொழியை கற்றுக் கொள்வதை கட்டாயமாக்க வேண்டும். இனங்களிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு அரச அதிகாரிகள் தமிழ் மொழியை கற்றுக் கொள்வது அவசியம் என அரசு கூறுவதை ஏற்க முடியாது என கலபொட அத்தே ஞானசார தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச விசாரணை வந்தால் ஆதாரங்கள் சமர்பிப்போம் – ஏசிஎப்-

action hungerஇலங்கையில் பிரெஞ்சு தொண்டு நிறுவனமான ஏசிஎப் நிறுவனத்தின் உள்ளுர் ஊழியர்கள் 17 பேர் திருகோணமலை மூதூரியல் வைத்து 2006ல் படுகொலை செய்யப்பட்டது குறித்து, இலங்கை படைகள்மீது குற்றம் சுமத்தியிருக்கும் அந்நிறுவனம், இந்த விவகாரத்தில் தமக்குக் கிடைத்த சாட்சியங்களை, சர்வதேச விசாரணை நடந்தால், கையளிக்கத் தயாராக இருப்பதாகத் குறிப்பிட்டுள்ளது. ஏசிப் நிறுவனத்தின் உள்ளுர் ஊழியர்கள் மூதூரில் 2006 ஆகஸ்டு 4ம் திகதி படுகொலை செய்யப்பட்டனர். இவர்கள் முழங்காலிடப்பட்டு விசாரணையின்றி சுடப்பட்டுள்ளனர். இவர்களைச் சுட்டவர்கள் இலங்கைப் படையினர்தான் என்பதற்கு தம்மிடம் ஆதாரங்கள் இருப்பதாக நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த நிறுவனம் கூறியுள்ளது. இந்த அறிக்கை பற்றி பிபிசிக்கு கருத்து தெரிவித்த, இந்த நிறுவனத்தில் மனிதநேய செயல்பாட்டு ஆலோசகர், பாலின் செட்குவிட்டி, இந்த விஷயத்தில் தங்களுக்கு கிடைத்த சாட்சியங்கள் மிகவும் எளிமையானவை, நேரானவை, இவைகளை முழுமையாக வெளியிட்டால் அது யார் இந்த சாட்சியங்களை தந்தார்கள் என்ற அடையாளத்தைக் காட்டிக் கொடுத்துவிடும், அது அவர்களுக்கு பாதுகாப்புத் தராது என்று அஞ்சுகிறோம். எனவேதான் தெளிவாக மேற்கோள்காட்டத் தேவையில்லாத எந்த ஒரு வாக்குமூலத்தையும் நாங்கள் நேரடியாக மேற்கோள் காட்டவில்லை. மாறாக, ஏற்கனவே பொதுவெளியில் இருக்கும் வாக்குமூலங்களை, இந்த வாக்குமூலங்களை வைத்து சரி பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது யார் எங்களுக்கு தகவலைத் தந்தவர்கள் என்பதை வெளியிடாமல் வந்த தகவலை சரிபார்த்துக்கொள்ள கிடைத்திருக்கும் ஒருவழி என்றார்.

காணாமற்போனோரில் 87 பேர் இறந்தோராகப் பதிவு-

missingகாணாமற்போனவர்களை இறந்தவர்களாகக் கருதிப் பதிவு செய்யும் சட்டம் கொண்டுவரப்பட்டு இரு வருடங்கள் கடந்துள்ள போதும் 87பேரே இதுவரை வடக்கில் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்தச் சட்டம் மூலமான பதிவு நடவடிக்கைகள் எதிர்வரும் 10ஆம் திகதியுடன் முடிவடையும் நிலையில் அது மேலும் இரு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. காணாமற்போனவர்களை இறந்தவர்களாகக் கருதி பதிவு செய்யும் விசேட நடவடிக்கை 2010ஆம் ஆண்டு 19ஆம் இலக்க சட்டத்தினூடாகக் கொண்டுவரப்பட்டது. இந்த விசேட சட்டம் எதிர்வரும் 10ஆம் திகதியுடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்தபோதும், தற்போது அதன் காலம் மேலும் இரு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை குறித்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில், வடக்கில் இதுவரை 87பேரே காணாமற் போனோரை இறந்தவர்களாகக் கருதி பதிவு செய்துள்ளனர். பெரும்பாலானவர்கள் தமது உறவுகள் திரும்பி வருவார்கள் என்று இன்னமும் நம்பிக் கொண்டிருப்பதால் இந்தப் பதிவு நடவடிக்கையில் நாட்டம் செலுத்தவில்லையென்று தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து சாரதியின்றி ரயில் பயணம்-

No Driver Trainரயில் சாரதி இல்லாமல் ரயில் இன்ஜின் ஒன்று பயணித்த சம்பவமொன்று இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. கொழும்பு-9, தெமட்டகொடையில் ரயில்கள் நிறுத்திவைக்கப்படும் இடத்திலிருந்து இன்று அதிகாலை 1.45 மணியளவில் ரயில் சாரதி இல்லாது, மேற்படி ரயில் இன்ஜின் தானாகவே இயங்கி பயணித்துள்ளது. இவ்வாறு பயணித்த ரயில் இன்ஜின் கல்கிஸைக்கும் இரத்மலானைக்கும் இடையில் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு ரயில் இன்ஜின் பயணித்துள்ள நிலையில் விபத்துக்கள் எதுவும் சம்பவிக்கவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த ரயில் இன்ஜின் தற்போது இரத்மலானை ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த ரயிலின் இன்ஜின் சாரதியும், அவரது உதவியாளரும் உடனே பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவென ரயில்வே திணைக்களத்தால் தொழில்நுட்பக் குழுவைச் சேர்ந்த மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக 111 முறைப்பாடுகள்-

மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக இவ்வருடம் 111 முறைப்பாடுகளைப் பெற்றுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு எதிராக இவ்வருடம் 111 முறைப்பாடுகளை பெற்றதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இவற்றில் 9 முறைப்பாடுகள் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரானவை என ஆணைக்குழுவின் தலைவர் ஜகத் பாலபட்டபெந்தி கூறியுள்ளார். இந்த ஆணைக்குழு இவற்றை ஆராய்ந்து வருகிறது. விசாரனையின்பின் கைது செய்யப்பட்டவர்களில் 99 சத வீதத்தினர் அரசசேவை அதிகாரிகள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நான்கு துறைமுகங்களால் இலங்கைக்கு அச்சுறுத்தல்-

download (2)இந்தியா, சிங்கப்பூர், மலேஷியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் என்பவற்றின் துறைமுகங்கள் இலங்கைக்கு அச்சுறுத்தலாகியுள்ளன என நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் கேள்விக்கு பதிலளித்த துறைமுகங்கள் செயற்திட்ட அமைச்சர் றோஹித்த அபேகுணவர்த்தன துறைமுகங்கள் தொடர்பாக பல விவரங்களை வெளிப்படுத்தினார். இந்திய உப கண்டத்திலிருந்து வரும் கப்பல் மாற்றியேற்றும் சரக்குகளை ஓமானிலுள்ள சலலா துறைமுகம் கவர்ந்;து வருகின்றது. இந்திய கிழக்குக்கரை சரக்கு பங்களாதேஷ் மற்றும் மியன்மார் சரக்குகளை கவரும் சிங்கப்பூர் துறைமுகமும் இலங்கைக்கு சவாலாக உள்ளது. ஓமான் துறைமுகங்களான ஜெபெல் அலி ஹோபக்கன் துறைமுகங்களும் இலங்கைக்கு போட்டியாக உள்ளன. இந்தியாவிலுள்ள கொச்சின், சென்னை, ஜவஹர்லால் நேரு துறைமுகங்கள் மேலும் மேலும் கப்பல் நிறுவனங்களை ஈர்த்து வருகின்றன. இந்த போட்டிகளை சமாளிக்க இலங்கை துறைமுகங்களையும் அது தொடர்பான உட்கட்டமைப்புகளையும் விஸ்தரித்து வருகின்றது. இதனால் ஆகவும் பெரிய கப்பல்களையும் இங்கு கொண்டுவர முடியும். இறங்குதுறைகளை நடாத்துபவர்களுடனும் கப்பல் கம்பனிகளுடனும் பங்குதாரர்களாகி வருகிறோம் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் வயோதிப பெண்மீது துப்பாக்கிச்சூடு-

வவுனியா – மன்னார் பிரதான வீதி யாழ். ஐஸ்கிறீம் வீதி பகுதி வீட்டில் தனிமையில் இருந்த வயோதிப பெண் மீது இனந்தெரியாதோர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். நேற்று இரவு 8.40 மணியளவில் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 60 வயதுடைய சற்குணசேயோன் பாலசுந்தரி என்ற பெண் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வவுனியா பொலிஸார் தெரிவித்துள்;ளனர். வீட்டில் தனிமையில் இருந்த இப் பெண்மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும் இதன் காரணமாக இப்பெண் கால் பகுதியில் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் விபத்துக்கள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா பொலிஸார் இதுபற்றிய விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி விபத்தில் 11பேர் காயம்-

கிளிநொச்சி இரணைமடு சந்தியில் நேற்றையதினம் இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் 11பேர் காயமடைந்துள்ளனர். நேற்றிரவு 10.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகிலிருந்து மரமொன்றில் மோதியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த 11 பேரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயமடைந்த பஸ்ஸின் சாரதி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றிய மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

வேக எல்லையை மீறும் சாரதிகளுக்கு புள்ளிகள் இடும் முறைமை அறிமுகம்-

vehicle speed.jpg 022வேக எல்லையை மீறிய குற்றத்திற்காக சாரதி அனுமதிப் பத்திரத்தில் புள்ளிகள் இடும் முறையொன்றை அறிமுகப்படுத்த மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன் முதல் கட்டத்தின்கீழ் அதிவேக மார்க்கங்களில் இந்த நடைமுறையை முன்னெடுக்கவுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் எஸ்.எச். ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் போக்குவரத்து பொலிஸாருடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சாரதி அனுமதிப் பத்திரத்தில் புள்ளிகள் இடும் நடைமுறை தற்போது இரண்டு தவறுகளுக்காக மாத்திரமே முன்னெடுக்கப்படுகின்றது. மதுபோதையில் வாகனத்தை செலுத்துதல் மற்றும் வாகன விபத்துக்களை ஏற்படுத்தல் ஆகிய தவறுகளுக்காகவே இவ்வாறு புள்ளிகள் இடப்படுகின்றன. அதன் பிரகாரம் 14 ஆயிரம் சாரதிகளின் அனுமதிப் பத்திரங்களில் புள்ளியிடப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து எஸ்.எச். ஹரிச்சந்திர மேலும் தெரிவித்துள்ளார்.

ஐ.நா விசேட பிரதிநிதி முல்லைத்தீவுக்கு விஜயம்-

mayilitti people Peyani (2) Peyaniஇலங்கை வந்துள்ள உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளானவர்களின் மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதியும், விசேட அறிக்கையாளருமான சலோகா பெயானி, முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்திருந்தார். முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்றுகாலை விஜயம் செய்திருந்த பெயானி, அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், முல்லைத்தீவு இராணுவ கட்டளைத் தளபதி மேஜர்ஜெனரல் எல்.பி.ஆர்.மார்க் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளார். இதனையடுத்து முல்லைத்தீவில் இறுதியாக மீள்குடியேற்றப்பட்ட கிராமமான கேப்பாபிலவு மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளுக்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டதாக மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். Read more

நெடுந்தீவு கொலை- வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட மூவர் கைது-

EPDPசுட்டுக்கொலை செய்யப்பட்ட யாழ். நெடுந்தீவு பிரதேசசபைத் தலைவர் டானியல் றெக்ஷியன் கொலை விவகாரம் தொடர்பில் அவரது மனைவி இன்றுகாலை ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நெடுந்தீவிலுள்ள அவரது வீட்டில் வைத்தே இவர் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளார். பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷியனின் கொலை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், வடமாகாண எதிர்க்கட்சித் தலைவருமான கந்தசாமி கமலேந்திரனும் நெடுந்தீவைச் சேர்ந்த மற்றொருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

நல்லிணக்கம் குறித்து நடவடிக்கை இன்றேல் பொறுமை இழக்கும் நிலையேற்படும்-

இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள், பொறுப்புக்கூறுதல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிடின் சர்வதேச சமுதாயம் பொறுமை இழந்துவிடக்கூடுமென அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்காவும் அமெரிக்க நட்பு நாடுகளும் இதனை வலியுறுத்திவருவதாக தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் நிருபர்களிடம் பேசும்போது தெரிவித்துள்ளார். இவ்வாறான முன்னேற்றம் இலங்கையில் ஏற்படுவதற்காக இலங்கையிலுள்ள எமது நண்பர்களுடன் நாம் மனப்பூர்வமாக வேலை செய்கின்றோம் என்றும் நிஷா பிஸ்வால் சுட்டிக்காட்டியுள்ளார்.

பலாலி கிழக்கு பிரதேசத்தில் குடியேற முடியாது-மயிலிட்டி மக்கள்-

யாழ். வலிகாமம் வடக்கு பலாலி கிழக்குப் பகுதியில் மீளக்குடியேறுவதற்கு படையினரால் விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் தாம் மீளக்குடியேற மாட்டோம் என கோணாப்புலம் நலன்புரி நிலையத்தில் வசித்துவரும் மயிலிட்டியைச் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது, பொதுநலவாய மாநாடு நடைபெற்றபோது மயிலிட்டிப் பிரதேசத்தினைச் சேர்ந்த எம்மை பலாலி பிரதேசத்தின் கிழக்காக உள்ள காணிகளில் குடியேற்றுவதற்கு இராணுவம் நடவடிக்கை மேற்கொண்டது. இதன்போது, குறித்த பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று அப்பிரதேசத்தில் பொதுமக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கை பிரதேச செயலகத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான கூட்டம் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. Read more

மன்னாரில் பெண்கள் உரிமை செயற்பாட்டுக் குழுவின் பேரணி-

mannar penkal urimai (1)mannar penkal urimai (2)பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் முகமாகவும் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளுக்கு நீதி கோரியும் நாளை மன்னாரில் பிரச்சாரமும், எதிர்ப்பு பேரணியும் இடம்பெறவுள்ளதாக மன்னார் மாவட்ட மாதர் ஒன்றியத்தின் மாவட்ட இணைப்பாளர் மஹாலட்சுமி கிருசாந்தன் தெரிவித்துள்ளார். நாளை மன்னார் பொது நூலகத்திற்கு முன்பாக காலை 9 மணிக்கு மன்னார் மாவட்ட பெண்கள் உரிமைக்கான செயற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. Read more