Header image alt text

சீன ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

china_sl_president_0032(3883)சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்தார். விமான நிலையத்தில் வைத்து அவருக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்துக்கு சென்று அவரை வரவேற்றார். தனது பாரியாருடன் வருகைதந்த அவரை, விமான நிலையத்தில் விரிக்கப்பட்டிருந்த செங்கம்பளத்துக்கு இரு பக்கங்களிலும் நடனக்கலைஞர்கள் நடமாட, பாடசாலை மாணவர்கள் சீன, இலங்கை ஆகிய இருநாடுகளின் தேசிய கொடிகளையும் அசைத்து வரவேற்றனர். விமான நிலையத்தை விட்டு வெளியேறும் வீதியின் ஒரு பக்கத்திலும்; அலங்கரிக்கப்பட்டிருந்த யானைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவரை வரவேற்கும் முகமாக விமான நிலையத்தை சுற்றி இருநாட்டு கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன. அத்துடன் கட்டுநாயக்க- கொழும்பு  அதிவேக நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் கொழும்பில் அவர், பயணிக்கும் இடங்களிலும் இருநாட்டு கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன

இந்திய துணைத் தூதுவரின் கருத்து தொடர்பில் விளக்கம் கோரப்படும் – இந்தியா

ilankai inthiya koottukulu kootamயாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைக்கான இந்திய துணைத் தூதர் எஸ்.டி.மூர்த்தி அங்குள்ள தமிழ் மக்களிடம், இந்தியாவில் வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள், ஹிந்தி மொழியை தொடர்பு மொழியாக பேச கற்றுக்கொண்டுள்ளனர். நீங்களும், சிங்கள மொழியை பேச கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, ‘மொழி என்பது ஒரு நாட்டின் கொள்கை பிரச்சினை. அதில் தூதரக அதிகாரிகளின்  தலையீடு இருக்கக் கூடாது. இது குறித்து இந்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்’ என்று கோரியிருந்தார். இந்நிலையில், டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீனிடம் இது குறித்து கேட்டதற்கு, ‘இந்த பிரச்சினை பற்றி இன்னும் எங்களுக்கு முழுமையான தகவல் கிடைக்கவில்லை. எனினும், இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் துணைத் தூதர் எந்தக் கண்ணோட்டத்தில் அத்தகைய கருத்தை வெளியிட்டார் என்பது பற்றி விளக்கம் கேட்கப்படும்’ என்று கூறினார். மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அண்மையில் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்துவது சாத்தியமற்றது என்று கூறியிருந்தார். இது குறித்தும் அக்பருதீனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ‘இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. இலங்கை அரசிடம் அதையே இந்திய அரசும் தொடர்ந்து வலியுறுத்தும். இந்த விடயத்தில் இந்தியாவின் கோரிக்கையை இலங்கை அதிகாரப்பூர்வமாக நிராகரிக்கவில்லை. எனவே, இலங்கை அளித்த உறுதிமொழி நிறைவேற்றப்படும் என நம்புகிறோம்’ என்றார்

வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் (EPDP) கந்தசாமி கமலேந்திரன் பிணையில்

kamalenthiran_free_001நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷிசன், கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த கொலை தொடர்பில், வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கமலேந்திரனை 2013ஆம் ஆண்டு டிசெம்பர் 3ஆம் திகதி, பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினர் கொழும்பில் வைத்து கைது செய்தனர். அத்துடன் றெக்ஷிசனின் மனைவி அனிடா மற்றும் மேலும் ஒரு இளைஞர் ஆகியோரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கொலை தொடர்பிலான வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணை இடம்பெற்ற நிலையில், கடந்த 9 மாதங்களாக இடம்பெற்று மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். கமலேந்திரனை பிணையில் செல்ல யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் கடந்த ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதி அனுமதி வழங்கினார. பிணை வழங்கப்பட்டு இதுவரை காலமும் பிணையெடுப்பதற்கு ஆட்கள் இல்லாமல் இருந்த கமலேந்தினை அவரது உறவினர் ஒருவரே இன்று செவ்வாய்க்கிழமை இந்நிலையில், 2 இலட்சம் ரூபாய் காசுப்பிணை மற்றும் தலா 5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில பிணையில் எடுத்தார். இந்த வழக்குடன் தொடர்புடைய றெக்ஷிசனின் மனைவி அனிடா, கடந்த 9ஆம் திகதி பிணையில் விடுதலையானார். அத்துடன், வழக்கு முடிவடையும் வரையில் யாழ்ப்பாணத்தில் கமலேந்திரன் இருக்க முடியாது எனவும், வாரத்தில் ஒரு நாள், வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கையொப்பமிட வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தியிருந்தார்.  .

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட சிறப்பு பட்டங்கள் பெறுவதற்கான பாடத் தெரிவில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்றில் செவ்வாய்க்கிழமை (16) ஈடுபட்டனர். கலைப்பீடத்தில் முதலாம் ஆண்டு பரீட்சையில் சித்தியடைபவர்கள் 3.0 ஜி.பி.ஏ அடைவு மட்டத்தை பெற்றால் இரண்டாம் வருடத்தில் இருந்து சிறப்பு கலை பட்டம் (4 வருடங்கள்) பெறுவதற்கு விரும்பிய பாட தெரிவுகளை மேற்கொள்ள முடியும். 3.0 ஜி.பி.ஏ பெறாதவர்கள் பொது கலைமாணி பட்டத்துடன் (3 வருடங்கள்) வெளியேற வேண்டும். Read more

யாழ் ஜம்புகோளபட்டினத்தில் மீன்பிடிக்க தடை – கடற்படை

index(1027)யாழ்ப்பாணம், ஜம்புகோளப்பட்டினம் (மாதகல்) கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு கடற்படையினர் முற்றாக தடை விதித்துள்ளனர் என்று கங்காதேவி மீன்பிடி சமாசம் தெரிவித்தது. சுழிபுரம், காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த 115 மீனவக் குடும்பங்கள், ஜம்புகோளப்பட்டினம் கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்தனர். எனினும், ஜம்புகோளப்பட்டினம் பகுதியில் சங்கமித்தை வந்திறங்கிய அடையாளமாக பௌத்த ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டது. இதனால் அப்பகுதி புனித பிரதேசமாக அறிவிக்கப்பட்டு, பௌத்த ஆலயம் அமைந்துள்ள இடத்தை சூழவுள்ள 2 கிலோமீற்றர் தூரத்திற்கு மீன்பிடிப்பதற்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து, புனித பிரதேசம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் காட்டுப்புலம் மீனவர்கள், மீன்பிடியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், பொன்னாலை பகுதியிலிருந்த கடற்படை முகாம் ஒன்று தற்போது ஜம்புகோளப்பட்டினத்தை அண்மித்த திருவடிநிலைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து, அப்பிரதேசமெங்கும் மீன்பிடிக்க வேண்டாம் என மீனவர்களுக்கு கடற்படையினர் அறிவித்துள்ளதுடன், மீனவர்கள் கடலில் போட்டிருந்த மீன்பிடி படுகைகளையும் அகற்ற உத்தரவிட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் ஆனால் கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால், குறித்த பிரதேசத்தை புனித பிரதேசமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அது தொடர்பில் இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் தெரிவித்த கடற்படையின் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய, ஜம்புகோளப்பட்டின கடற்பரப்பில் மீன்பிடிக்க வேண்டாம் என அறிவிக்கவில்லை என்றும் கூறினார்.  

சமாதான நீதவானை கடத்த முயற்சி – சுவிஸ்வாழ் தமிழர்

யாழ்ப்பாணம், கரவெட்டி பகுதியைச் சேர்ந்த சமாதான நீதவானான சி.சிதம்பரம் (வயது 63) என்பவரை, வானில் வந்தவர்கள் கடத்த முற்பட்டுள்ளதாகவும். ஊர் மக்கள் ஒன்று கூடியதையடுத்து வானில் வந்தவர்கள் தப்பி ஓடியதாகவும். பருத்தித்துறை தம்பசிட்டி பகுதியைச் சேர்ந்த சுவிஸ் நாட்டில் வசிக்கும் தனது தூரத்து உறவினர்களில் ஒருவரே வானில் ஆட்களுடன் வந்து தன்னை கடத்த முற்பட்டதாக அவர் சமாதான நீதவான் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) இரவு முறைப்பாடு பதிவு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணை மேற்கொண்ட போது, பணக்கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்திலேயே கடத்தல் முயற்சி இடம்பெற்றிருந்தமை தெரியவந்தது. இதனையடுத்து, கடத்தலில் ஈடுபட முனைந்தவரை கைது செய்து விசாரணைகள் மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளார்

மட்டக்களப்பு சிவன் கோவில் தேர் திருவிழாவிலன்று மேலும் விபத்து

pati_accident_002கொக்கட்டிச்சோலை தான்றோன்றீஸ்வரர் கோவில் தேர் திருவிழாவில் கலந்துகொண்டுவிட்டு மட்டக்களப்பு நோக்கி வந்துகொண்டிருந்த  முச்சக்கரவண்டியொன்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து கொக்கட்டிச்சோலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பஸ்வண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட 04  பேர் விபத்துக்குள்ளாகி காயமடைந்த  நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும். காயமடைந்தவர்களில் 03 பேர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களெனவும். காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஒல்லிக்குளம் பிரதேசத்தில் திங்கட்கிழமை (15) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்றும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்து நடத்துனர் பலி – முறிகண்டி

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து, முறிகண்டி பகுதியிலுள்ள  வளைவு ஒன்றில் திருப்ப முற்பட்ட வேளையில் முன்வாசலில் நின்றிருந்த நடத்துனர் தவறி கீழே விழுந்தார் இதன்போது, பஸ்ஸின் முன் சில்லு, நடத்துனர் மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். பலியான சம்பவம் இன்று திங்கட்கிழமை (15) காலை இடம்பெற்றுள்ளது.  வவுனியா, கோவில் புளியங்குளத்தைச் சேர்ந்த சந்திரன் தனுசன் (வயது 19) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.. இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மாங்குளம் பொலிஸார் கூறினர்.

இரண்டு பேருந்துகள் மோதி பலபேர் காயம் – காலியில்

காலி, தடல்லை எனும் இடத்தில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இச்சம்பவத்தில் காயமடைந்த 14 பேர் கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இரா.சம்பந்தன், மாவை, அனந்தி ஆகியோரை கேலி செய்து சுவரொட்டிகள் – யாழில்

tna_poster_001தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசு கட்சியின் தலைவர் சேனாதிராசா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் சசிதரன் ஆகியோரை கேலி செய்து, யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சர்வதேச ஜனநாயக தினம் இன்று திங்கட்கிழமை(15) கொண்டாடப்படும் நிலையில், அன்றைய ஜனநாயகம் – இன்றைய ஜனநாயகம் என பிரசுரிக்கப்பட்டு இரண்டு விதமான கேலிச்சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. அதன் கீழ் மேற்படி மூன்று அரசியல்வாதிகளும் செல்வ செழிப்புடன் இருப்பதாக குறிப்பிடப்பட்டு அவர்களின் புகைப்படங்களும் அச்சிடப்பட்டுள்ளன.

வடமாகாண மக்களும் சிங்களம் கற்கவேண்டும் – இந்திய பதில் துணைத்தூதர்

india_moorthy_001இந்திய மக்கள் தொகையில் குறைந்தது 50 சதவீதமானோர் இந்தியாவின் இணைப்பு மொழியான ஹிந்தியை கற்றிருப்பதைப்போல வடமாகாண மக்களும் சிங்களம் கற்கவேண்டும் என்பதே தங்களின் ஆர்வம் என்று இந்திய பதில் துணைத்தூதர் தெரிவித்துள்ளார். ஹிந்தி மொழி பயன்பாட்டை இந்தியாவில் பரப்பும் நோக்கில் ஆண்டுதோறும் செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி கடைபிடிக்கப்படும் ஹிந்தி திவாஸ் என்கிற நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இருக்கும் இந்திய துணைத்தூதரக அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய இந்திய பதில் துணைத்தூதர் எஸ் டி மூர்த்தி இந்த கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார் என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேசசெயலர் பிரிவுகளில் மினிசூறாவளி

miniஒட்டுசுட்டான் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலர் பிரிவுகளில்  வெள்ளிக்கிழமை (12) பிற்பகல் மினிசூறாவளி போன்று பலத்த காற்றுடன் கூடிய மழையினால் மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுளது. ஒட்டுசுட்டான் பிரதேசத்திலுள்ள கெருடமடு மற்றும் மண்ணாங்கண்டல் கிராமத்தை சேர்ந்த மக்களதும் புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள வசந்தபுரம் கிராம மக்களதும் 42 வீடுகள் சேதமடைந்துள்ளது. பலத்த காற்றுக்கு கூரைகள் மற்றும் கூரைத்தடிகள் தூக்கி வீசப்பட்டமையாலும் மரங்கள் முறிந்து கூரைகளின் மீது வீழ்ந்ததாலும் இவற்றில் 10 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. Read more

மட்டக்களப்பு சிவன் ஆலயத் தேர் சில்லில் அகப்பட்டு ஒருவர் மரணம் நால்வர் காயம்

kokkadicholai_ther_006மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்தமான சிவன் ஆலயங்களில் ஒன்றான தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் தேரோட்ட உற்சவத்தின் போது தேர் சில்லில் அகப்பட்டு முனைக்காடு வாசியான எஸ். ஜீவானந்தம் (வயது 42) பலியானதாகவும் மேலும் காயம்பட்ட நால்வர் உடனடியாக மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும்.கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் தெரிவித்தனர்.
பிள்ளையார் வலம் வந்த தேர், ஆலய உள் வீதியில் உலா வரும்போது அக்கினி மூலையில் வைத்து ஜீவானந்தம்  தேரின் பின்புறச் சில்லுக்குள் அகப்பட்டு மரணமாகியுள்ளார். சற்று மழை பெய்து கொண்டிருந்ததால் ஜீவானந்தமும் காயம் பட்ட ஏனைய நால்வரும் வழுக்கி விழுந்து தேரின் மரச் சில்லுக்குள் அகப்பட்டிருக்கலாம் என்று கூடவே தேரோட்டத்தில் கலந்துகொண்ட அடியார்கள் தெரிவித்தனர்.
தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்ட உற்சவ வரலாற்றில் தேர்ச் சில்லுக்குள் அகப்பட்டு ஒருவர் மரணமடைந்திருப்பது இதுவே முதன் முறையாகும் என்று ஆலய நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். சம்பவம் குறித்து கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Untitled Post

Posted by plotenewseditor on 14 September 2014
Posted in செய்திகள் 

unnamed

புகலிடக கோரிக்கையாளர் பிரச்சினை தொடர்பில் ஐ.நா அமைப்பு கவலை-

pugalida korikkaiyaalar pirachanaiஇலங்கையில் அரசியல் தஞ்சம் கோருகின்றவர்களை நாடுகடத்த வேண்டாம் என ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவை மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. அகதிகள் பேரவையின் இணையத்தளத்தில் இது தொடர்பான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாதம் 3ம் திகதி முதல் 11ம் திகதி வரையில் 62 பாகிஸ்தானியர்களும், 2 ஆப்கானிஸ்தானியர்களும் இலங்கையில் இருந்து நாடுகடத்தப்பட்டதாக அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது. இன்னும் 102 பேர் வரையில் இலங்கையிலிருந்து நாடுகடத்தப்படவிருக்கும நிலையில், இந்த செயற்பாடுகளை நிறுத்துமாறு ஐ.நா அகதிகள் பேரவை கோரியுள்ளது. இலங்கை அரசாங்கம், ஜூன் 9ஆம் திகதி இதற்குரிய சிறப்பு நடவடிக்கையை ஆரம்பித்தது. ஓகஸ்ட் 15ஆம் திகதி அது ஸ்தம்பித்திருந்தது. எனினும் செப்டெம்பர் 3ஆம் திகதி மீண்டும் இந்நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் கவலை வெளியிட்டுள்ளது.

கொழும்பில் மொனோரெயில் சேவை-

கொழும்பு நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மொனோரெயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. உலகின் தனித்துவமான போக்குவரத்து சேவையான மொனோரெய்ல் திட்டத்தை கொழும்பு நகரிலும் நடைமுறைப்படுத்த விருப்பம் கொண்டுள்ளதாக ஹிட்டாச்சி மொனோரெயில் பிரிவு அறிவித்துள்ளது. இலங்கைக்கு வருகைத்தந்த ஜப்பானிய பிரதமருடனான வர்த்தகக்குழு இதனை அறிவித்துள்ளது. மொனோரெய்ல் திட்டம், போக்குவரத்துக்கு மிகவும் காத்திரமான பங்கை அளிக்கும் என்றும் ஹிட்டாச்சி மொனோரெய்ல் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு நகரத்தை மையப்படுத்தும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த 1.3பில்லியன் டொலர்கள் தேவை. இதற்கான ஆய்வுகளும் முடிவடைந்துள்ளன. ஜப்பானின் ஜெய்க்கா திட்டம் முதல்கட்ட நிதிகளை வழங்கவுள்ளது. இதன்படி ஒருகிலோமீற்றர் மொனோரெய்ல் திட்டத்தை அமைக்க 57 மில்லியன் டொலர்கள் தேவை. இத்திட்டம் மாலபே ஊடாக ரொபட் குணவர்த்தன மாவத்தை, பத்தரமுல்ல, தேசிய வைத்தியசாலை, உலக வர்த்தக மையம், கொழும்பு கோட்டை மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய இடங்களை மையப்படுத்தி மொனோரெயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

மேலும் செய்திகளை வாசிக்க…… Read more

அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் மாத்திரமே ஒரு ஆளுநரை நீக்க முடியும்-

imagesCAANYQEWமக்கள் நலன் சார்ந்த விடயத்திற்கு என்றைக்கும் தடையாக இருக்க மாட்டேன் என வடமாகாண ஆளுநர் ஜீ,ஏ சந்திரசிறி தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநரின் அலுவலகத்தில் இன்றுகாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாண சபையுடன் நெருங்கி செயற்பட தயாராகவே இருக்கின்றேன். மாகாணசபை சட்ட திட்டங்களுக்கு அமைவாக மாகாணசபை செயற்பட்டால் ஒத்துழைக்க தயாராக இருக்கின்றேன். அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் ஒரு ஆளுனரை நீக்குவதாயின் ஆளுனர் அரசியலமைப்புக்கு எதிராக செயற்பட்டு இருந்தால், அரச நிதியை கையாண்டு இருந்தால், லஞ்சம் ஊழல் மோசடி செய்திருந்தால் தான் பின்பற்ற வேண்டிய ஒழுக்கத்தை கைவிட்டு இருந்தால் ஆளுநரை நீக்க முடியும். இந்த செயற்பாடுகள் மாகாண சபையினால் நிரூபிக்கப்பட்டு மாகாணசபை ஜனாதிபதிக்கு அறிவித்தால் ஜனாதிபதியாhல் ஆளுநர் நீக்கப்படுவார். இந்நடைமுறை தவிர்ந்து வேறு எவ்விதத்திலும் மாகாண சபையால் ஆளுநரை நீக்கமுடியாது அதற்குரிய தகுதியோ சட்டமோ இல்லை. வடமாகாண பிரதம செயலாளர் முதலமைச்சருக்கு கீழ் பணியாற்றுபவரல்லர். ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டவர். மாகாண நிதிக்கு பொறுப்பானவர் என்ற வகையில் முதலமைச்சருடன் இணைந்து செயற்படுவார். சட்டரீதியான முதலமைச்சரின் பணிப்பினை அவரினால் புறந்தள்ள முடியாது. தற்போதைய வடமாகாண பிரதம செயலர் மிக திறமையாக சட்டத்திற்கு அமைவாக செயற்படுபவர் என்றார்.

பாகிஸ்தானுக்காக வேவு பார்த்தவருக்கு விளக்கமறியல்-

pakistan kkaaka vevu paarthaபாகிஸ்தானுக்காக இந்தியாவில் வேவு பார்த்ததாக தெரிவிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்ட அருண் செல்வராஜ் 15 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்திய தேசிய புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட அவர் நேற்று பூந்தமல்லி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. அவர் தற்போது தேசிய புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தமிழகத்தின் துறைமுகங்கள், வானூர்தி நிலையம் உள்ளிட்ட பல முக்கிய பிரதேசங்களின் வரைபடங்களை அவர் பாகிஸ்தானுக்கு தயாரித்து வழங்கியிருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதேவேளை அருண் செல்வராஜா, புலிகளுடனும் தொடர்பு கொண்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர் இலங்கையில் புலிகளின் உறுப்பினர்களுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்கியமைக்காக தேடப்பட்டு வருபவர் என்று த ரைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது. இவரது வீட்டில் பொலிஸார் நடத்திய சோதனையில் வங்கி கணக்கு புத்தகங்கள் கிடைத்துள்ளன. இவரது வங்கி கணக்கில் இந்திய ரூ.2 கோடி வரை பணம் இலங்கையிலிருந்து இணையம் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த பணம் இவருக்கு உளவு பார்த்ததற்கான கூலியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அண்மையில் கைதுசெய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ. உளவாளி சாகிர் உசேன், கடந்த 2012-ம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட தமீம் அன்சாரி ஆகியோருடன் அருண் செல்வராஜூக்கு இடையே நிறைய தகவல் பரிமாற்றங்கள் நடந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகளை வாசிக்க…….... Read more

13ஆவது திருத்த சட்டம் குறித்து கூட்டமைப்புடன் பேசத் தயார்: ஜனாதிபதி-

imagesCAEVMZZHஅரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பகிரங்க பேச்சுவார்த்தைக்கு தான் தயாhக இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து வெளிவருகின்ற தி இந்து பத்திரைகைக்கு வழங்கிய செவ்வியிலேயே, ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்பில் தான் அதிருப்தி அடைந்திருப்பதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ள ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தின்போது இந்திய பிரதமரைச் சந்தித்து பேசவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, எதிர்வரும் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியமிருப்பதாக வெளியாகும் செய்திகள் மறுப்பதற்கில்லை என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய மீனவர்கள் இலங்கை கடல் வளத்தை நாசப்படுத்துகின்றனர்-ஜனாதிபதி-

ilankai india meenavar pechchuஇந்திய மீனவர்கள் இலங்கை கடல் வளத்தை நாசப்படுத்துவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்கள் சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்டிருக்கும் படகுகளை பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்கள் உடனே விடுவிக்கப்படுவதாகவும், அவர்கள் இலங்கை கடல் பகுதிக்கு மீண்டும் வராமலிருக்கவே, படகுகளை விடுவிடுப்பதில்லை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். 2009 போருக்கு பின் தமிழர்கள் வாழும் பகுதியிலிருந்து 90 சதவிகித இராணுவத்தினர் வெளியேறிவிட்டனர்; மீதமுள்ளவர்கள், மக்களின் பாதுகாப்பிற்காக அங்கு உள்ளனர். இராணுவத்தினர் இலங்கையில்தான் இருக்க முடியும். அவர்களை இந்தியாவில் வைக்க முடியாது. இலங்கையில் தற்போது அமைதி நிலவி வருகிறது. வடக்கு பகுதியில் இருப்பவர்கள் சுதந்திரமாக தெற்கு பகுதிக்கு சென்று வருவதற்கு முடிகின்றது தமிழ் இளைஞர்கள் மத்தியில் இலங்கை அரசாங்கத்தின் மீதான கண்ணோட்டம் மாறி வருகின்றது. கற்றுத்தந்த பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழு அளித்த 35 பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மற்றயவைகளை நிறைவேற்ற கால அவகாசம் வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை வாசிக்க…… Read more

தமிழரசுக் கட்சியின் 15ஆவது தேசிய மகாநாட்டில் புளொட் தலைவர் சித்தார்த்தன் அவர்கள் ஆற்றிய உரை-

unnamedதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தண்ணர் அவர்களே! தமிழரசுக் கட்சியின் தலைவர் சேனாதியண்ணர் அவர்களே!, எங்களுடைய முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா அவர்களே! எனது அருமை நண்பர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அவர்களே! மற்றும் ஏனைய கட்சிகளின் தலைவர்களே!

இங்கு மிகப் பெருந்திரளாக கலந்து கொண்டிருக்கின்ற தமிழரசுக் கட்சியின் பேராளர்களே! ஆதரவாளர்களே! பெரியோர்களே! தாய்மார்களே! அனைவருக்கும் எனது அன்பார்ந்த வணக்கம்!

unnamed1தமிழரசுக் கட்சியின் இந்த 15ஆவது மகாநாட்டிலே ஒரு அதிதியாக கலந்துகொண்டு பேசுவதற்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கிய அண்ணன் சேனாதிராஜா அவர்களுக்கும், மகாநாட்டுக் குழுவுக்கும் எனது அன்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

தமிழரசுக் கட்சி மகாநாட்டிலே கலந்துகொள்ள வேண்டுமென்ற என்னுடைய பெரு விருப்பம் இன்று வந்ததல்ல. 1969ஆம் ஆண்டு உடுவிலிலே பதினோராவது மாநில மகாநாடு நடைபெற்றபோது, ம.பொ.சி அவர்கள் அதிதியாகக் கலந்துகொண்டார். அப்போது அம்மகாநாட்டிலே ஒரு பேராளராக கலந்துகொள்ள வேண்டுமென்ற ஓர் அவா என்னுள் எழுந்தது. அதன் நிமித்தம் தமிழரசுக் கட்சியினுடைய காரியாலயம் – அப்போது 2ஆவது குறுக்குத் தெருவிலே இருந்தது – அங்கிருந்த மணியண்ணரிடம் சென்று எனது விருப்பத்தைத் தெரிவித்து இதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று கேட்டேன். அவர் கட்சியின் அங்கத்துவ விண்ணப்பப்படிவத்தைத் தந்து இந்த படிவத்தை நிரப்பித் தா நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். 

படிவத்தை நிரப்பி அதற்குரிய சந்தாப் பணத்தையும் கொடுத்து 69ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியிலே நான் அங்கத்தவனாக சேர்ந்தேன். ஆனாலும் அந்த மகாநாட்டிலே கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை ஏனென்றால், அந்த மகாநாட்டு நேரத்திலே எனது தந்தையார் அதன் ஏற்பாட்;டாளராகவிருந்த முத்துலிங்கம் அண்ணர் போன்றவர்களிடம் உங்களுக்கு போக்குவரத்துக்கு வாகனம் ஏதேனும் தேவையென்றால் இவனிடம் சொல்லுங்கள், இவன் வருவான் கூட்டிக்கொண்டு போங்கள் என்று சொல்லிவிட்டார். ஆகவே, அந்த மகாநாட்டினுள் கலந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு நழுவிவிட்டது. இப்போது இந்த 15ஆவது மகாநாட்டில் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்ததையிட்டு நான் பெருமகிழ்ச்சியடைகின்றேன். Read more

வட மாகாண சபைக்கு புதிய செயலாளர் நியமனம்-

வடக்கு மாகாண சபையின் புதிய செயலாளராக சிவபாதசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண சபையின் விசேட அமர்வு யாழ். கைதடியில் அமைந்துள்ள மாகாண சபைக் கட்டடத்தில் இன்றுகாலை 9.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இன்றைய அமர்வு புதிய செயலாளருடனேயே நடைபெறுவதாக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அறிவித்திருந்தார். இதன்படி இன்றிலிருந்து செயலாளராக சிவபாதசுந்தரம் தனது கடமையினை பெறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இதற்கு முன்னர் பேரவைச் செயலாளராக கிருஸ்ணமூர்த்தி கடமையாற்றி வந்தார். எனினும் அவரின் ஒப்பந்த காலம் நிறைவடைந்திருக்கும் நிலையில் அவருடைய இடத்திற்கு சிவபாதசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி நகரில் எட்டு கடைகளில் திருட்டு-

கிளிநொச்சி நகரில் எட்டு கடைகளின் பூட்டுக்கள் உடைப்பு ஆடைகளும் திருடப்பட்டுள்ளன கிளிநொச்சி நகரிலுள்ள 8கடைகளின் பூட்டுக்கள் அடையாளம் தெரியாதவர்களால் உடைக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கிளிநொச்சி பொதுச் சந்தையிலுள்ள எட்டு கடைகளின் பூட்டுகள் நேற்றிரவு உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது ஒரு கடையிலிருந்த ஆடைகள் சிலவும் திருடப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில், வர்த்தகநிலைய உரிமையாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர் இதற்கமைய பொதுச் சந்தையிலிருந்த இரு காவலாளிகளிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அரச சார்பற்ற நிறுவனங்கள் பாதுகாப்பு செயலர் இடையே சந்திப்பு-

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இலங்கையில் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அரச சார்பற்ற நிறுவனங்கள் வரம்புமீறிச் செயற்படக்கூடாது என அண்மையில் பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றின்மூலம் அறிவித்திருந்து. இந்நிலையில் அரசுக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் இடையில் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் அரச சார்பற்ற நிறுவனங்களை அரசாங்கம் கண்காணித்தல், காணாமல் போனவர்கள் தொடர்பிலான பிரச்சினைகள், அரசாங்கத்துடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பேச விரும்பாமைக்கான காரணங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. பதினொரு அரச சார்பற்ற நிறுவனங்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் கல்முனை மாநகர முதல்வர் சந்திப்பு-

பிரித்தானியாவின் இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர் லாரா லேவிஸ் இன்று கல்முனை மாநகர சபைக்கு விஜயம்செய்து மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பரை சந்தித்து கலந்துரையுள்ளார். கல்முனை மாநகர சபையில் அமைந்துள்ள முதல்வர் செயலகத்தில் இன்று மதியம் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது கல்முனைப் பிராந்தியத்தின் தற்போதைய அரசியல் மற்றும் சமூக, கலாசார விடயங்கள் குறித்து பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர், கல்முனை மாநகர முதல்வரிடம் கேட்டறிந்து கொண்டார். குறிப்பாக யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தங்களின் பின்னர் இப்பிராந்தியத்தின் மீள்கட்டுமானப் பணிகள், மக்களின் வாழ்வாதாரம் போன்றவை தொடர்பிலும் சமாதான சூழலில் சமூகங்கள் இடையிலான நல்லிணக்கம் மற்றும் முரண்பாடுகள் தொடர்பிலும் மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர், பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகருக்கு விளக்கிக் கூறியுள்ளார்.

மாலைத்தீவு உயர்மட்டக் குழு இலங்கைக்கு விஜயம்-

இலங்கையில் நாளை நடைபெறவுள்ள மாலைத்தீவு – இலங்கை கூட்டு ஆணைக்குழு கூட்டத்தில் மாலைத்தீவின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர் துன்யா மவுமூன், மீன்பிடி மற்றும் விவசாய அமைச்சர் மொஹமட் சினி, கல்வி அமைச்சர் ஆய்சாத் சிஹாம் உள்ளிட்ட அரசாங்கத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். இந்த கூட்டு ஆணைக்குழு கூட்டம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர் துன்யா மவுமூன் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. மாலைத்தீவு – இலங்கை கூட்டு ஆணைக்குழு 1994ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் ஏற்படுத்தப்பட்டது. கடந்த ஜூன் மாதம் மாலைத்தீவு சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கைக்கு மாலைத்தீவு வழங்கி வரும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்திருந்தார்.

ஐ.நா அமைதி காக்கும் பணியில் இலங்கை விமானப்படை இணைவு-

ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபடுவதற்காக மூன்று ஹெலிகொப்டர்களில் விமானப்படை வீரர்களை அனுப்பவுள்ளதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கொலித குணதிலக்க தெரிவித்துள்ளார். ஐ.நா பாதுகாப்பு பேரவையின் தீர்மானத்திற்கு அமைய, இந்தப் படையணி மூன்று மத்திய ஆபிரிக்க நாடுகள் மற்றும் சூடானின் அமைதிகாக்கும் பணிகளுடன் இணைக்கப்படவுள்ளன. ஐக்கிய நாடுகளின் பணிகளில் இலங்கை விமானப்படை இணைந்து செயற்படவுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும். மூன்று எம்.ஐ 17ரக ஹெலிகொப்டர்கள், விமானிகள் மற்றும் பொறியியலாளர்கள் உள்ளிட்ட 122பேர் அடங்கிய குழுவொன்று மத்திய ஆபிரிக்க நாடுகளுக்கு அனுப்பப்படவுள்ளது. படையினரை அழைத்துச் செல்லுதல், உணவுப்பொருட்களை கொண்டு செல்லுதல், உள்ளக விமானப் பயணங்கள், பெரசூட் ஊடாக பொருட்களை இறக்குதல் மற்றும் மருத்துவ வசதிகளை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக இந்த ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

சுப்பிரமணியன் சுவாமிக்கு அழைப்பாணை-

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமியை ஒக்டோபர் 10ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தமிழ்நாடு நீதிமன்றம் இன்று அழைப்பாணை விடுத்துள்ளது. தமிழக மீனவர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல், கடிதம் மட்டும் எழுதுவதாக தமிழக முதலமைச்சரை விமர்சித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு சுப்பிரமணியன் சுவாமி பேட்டி அளித்திருந்தார். இதனையடுத்து, ஜெயலலிதா, சுப்ரமணியனுக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துகொண்டபோதே தமிழ்நாடு நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மூத்த பத்திரிகையாளர் மாணிக்கவாசகர் காலமானார்-

மூத்த பத்திரிகையாளர் செல்லத்தம்பி மாணிக்கவாசகர் கொழும்பில் காலமானார். ஊடகத்துறையில் அனைவருடனும் நட்போடு பழகிய மூத்த பத்திரிகையாளர் செல்லத்தம்பி மாணிக்கவாசகர், நேற்றுமாலை கொழும்பில், தனது 75ஆவது வயதில் காலமானார். சுகவினம் காரணமாக கடந்த இரு வாரமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமாலை 6 மணியளவில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் பருத்தித்துறை புலோலியை பிறப்பிடமாகக் கொண்ட மாணிக்கவாசகர், 40 ஆண்டுகளுக்கும் மேலாக கொழும்பில் வாழ்ந்து வந்தார். டைம்ஸ் ஒப் சிலோன் என்ற ஆங்கில நாளேட்டில் செய்தியாளராக பணிபுரிந்தார். பின்னர் சன்டே ஒப்சேவர் வார ஏட்டில் 30 ஆண்டுகள் பணிபுரிந்து, பத்திரிகைத் துறையிலிருந்து ஓய்வுபெற்றார். ஓய்வுபெற்ற பின்னரும் வீரகேசரி, தினக்குரல், சுடர் ஒளி ஆகிய நாளேடுகளிலும் அதன் வார ஏடுகளிலும் ஆக்கங்களை எழுதி வந்தார்.

இந்தியப் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மீண்டும் கடிதம்-

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 21 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் மூலம் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். பாக்குநீரிணைப் பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வரும் தமிழக மீனவர்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். கடலில் தத்திளிக்கும் மீனவர்களை காப்பாற்றுவதற்காக வரும் மீனவர்களின் படகுகளும் தாக்குதலுக்கு உள்ளாகின்றது. இவ்வாறு கடலில் தத்தளிக்கும் மீனவர்களை கைது செய்து நீதிமன்றக் காவலில் வைப்பது மனிதாபிமானமற்ற அணுகுமுறையாகும். இந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்;டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க மத்திய அரசாங்கம் உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்

சீன ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்-
சீன ஜனாதிபதி ஸி ஜிங்பிங் இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 16ஆம் திகதி, இலங்கைக்கு வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின்பேரில் அவர், இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயத்தின் போது இருதரப்பு உடன்படிக்கைகள் பல கைச்சாத்திடப்படவுள்ளன. சீன ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு 28 வருடங்களுக்கு பின்னர் எதிர்வரும் 16ஆம் திகதி அன்று விஜயம் செய்யவிருக்கின்றமை இங்கு குறிப்பிடக்கூடிய ஒன்றாகும்.

பயங்காரவாதத்தை ஒழிக்க அமெரிக்காவிடம் ஒத்துழைப்பு கோரல்-

பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்க இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு சிங்கள ராவய அமைப்பு அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு இன்றுகாலை சென்ற சிங்கள ராவய அமைப்பு இது தொடர்பான மனுவொன்றை கையளித்துள்ளது. பின்னர் அந்த அமைப்பின் தலைவர் அக்பீமன தயாரத்ன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது. எனினும் அதனை மீண்டும் உயிர்ப்பிக்க சில சக்திகள் முயன்று வருகின்றன. இந்நிலையில், அமெரிக்கா பயங்காரவாதத்தை முற்றாக ஒழிக்க ஆதரவு வழங்க வேண்டும் என கோரிக்கை கூறியுள்ளார்.

ஊவா மாகாணசபை தேர்தலை குறித்த திகதியில் நடத்துவதில் சிக்கல்-

எதிர்வரும் 20ஆம் திகதி ஊவா மாகாணசபைத் தேர்தல் நடைபெறுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது. மொனராகலை மாவட்டத்தில் நிலவிவரும் அமைதியற்ற அசாதாரண சூழ்நிலையின் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மொனராகலை மாவட்டத்தில் அமைதியான நிலை திரும்பாத வரைக்கும் ஊவா மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் 20ம் திகதி நடத்துவதா என்று இறுதி முடிவு எடுக்கப்படாது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

சர்வதேச விசாரணைக் குழுவிற்கு அனுமதி இல்லை-அரசாங்கம்-

sarvadesha visaaranai kuluvitkuஇலங்கைக்கு எதிரான சர்வதேச போர்க்குற்ற விசாரணைக் குழுவை நாட்டுக்குள் அனுமதிப்பதில்லை என்ற நிலைப்பாட்டை இலங்கை மீண்டும் இன்று ஐ.நா சபையில் உறுதிப்படுத்தியுள்ளது. ஐ,நா. மனித உரிமை கூட்டத் தொடர் இன்றைய 27ஆவது அமர்வில் உரையாற்றிய இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க இதனைக் கூறியுள்ளார். மேலும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பழிவாங்கப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை அவர் நிராகரித்துள்ளார். இலங்கை தொடர்ந்தும் சர்வதேசத்துடன் இணைந்திருக்கும். அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் கொண்டுவந்து நிறைவேற்றிய பிரேரணையை இலங்கை அரசாங்கம் ஏற்கனவே நிராகரித்துள்ளது. இலங்கையரசு போர் தொடர்பில் உள்நாட்டு விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது. நாளை சாட்சி பாதுகாப்பு பிரேரணையை பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளது. ஐ.நாவின் சர்வதேச விசாரணையானது, வரையறை மீறிய செயற்பாடு என்பது மட்டுமல்லாது இலங்கையின் உள்நாட்டு விசாரணையையும் மலினப்படுத்துகிறது என நிரந்தர பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு முதலமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சருக்கு வாகனங்கள் கையளிப்பு-

vaahanamவடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோருக்கான வாகனங்களை ஆளுநர் அலுவலத்தில் வைத்து வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி இன்று வழங்கியுள்ளார். வாகனங்களை, முதலமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோரின் செயலாளர்கள் பெற்றுக்கொண்டனர். வடமாகாண சபையால் கடந்த ஆண்டு வரவுசெலவு திட்டத்தில் 50 மில்லியன் ரூபா நிதி, முதலமைச்சர், அவைத்தலைவர் மற்றும் நான்கு அமைச்சர்களுக்கு வாகனங்கள் வாங்குவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனடிப்படையில், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, வர்த்தக வாணிப மீன்பிடி அமைச்சர் பாலசுப்பிரமணியம் டெனீஸ்வரன் ஆகியோருக்கு தலா 7 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, ஆளுநரால் கடந்த ஜூலை 5ஆம் திகதி வழங்கப்பட்டது. அத்துடன், முதலமைச்சருக்கு 5 மில்லியன் ரூபா பெறுமதியான கார் ஒன்றும் வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று முதலமைச்சருக்கு 10 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனம் ஒன்றும் சுகாதார அமைச்சருக்கு 7 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனமும் வழங்கப்பட்டுள்ளன.

யாழ் – கொழும்பு பேரூந்து தடம்புரண்டதில் ஒருவர் உயிரிழப்பு-

yaal colomboயாழில் இருந்து கொழும்பு சென்று கொண்டிருந்த தனியார் பேரூந்து புத்தூர் கொடிகாமம் வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து நேற்றிரவு தடம்புரண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கட்டுடை மேற்கு, மானிப்பாய்யை சேர்ந்த என்.சதீசன் (வயது 24) என்ற இளைஞனே பஸ்சுக்குள் நசியுண்டு உயிரிழந்துள்ளார். விபத்தில் பலர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் சாவகச்சேரி வைத்தியசாலை என்பனவற்றில்; அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பேருந்து ஆபத்தான வளைவொன்றில் திருப்புவதற்கு முற்பட்டவேளை வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதாக தெரிவிக்கபபட்டுள்ளது. இந்த வீதியால் யாழ் கொழும்பு பேரூந்துக்கள் பயணிப்பதில்லை எனவும், மேற்படி பேரூந்துக்கு வழித்தட அனுமதி இல்லாமையாலேயே இவ் வீதியால் பயணித்ததாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் கண்டி நெடுஞ்சாலையில் பொலிசார் பேரூந்தினை மறித்து வழித்தட அனுமதியினை பரிசோதிப்பார்கள் என்ற காரணத்தினாலேயே குறித்த வீதியால் பேரூந்து பயணித்து விபத்துக்கு உள்ளாகியதாகவும் கூறப்படுகின்றது.

இலங்கைக்கு ஆதரவு வழங்குவதாக கியூபா தெரிவிப்பு-

Ilankaiku atharavu valanguvathaakaஇலங்கைக்கு சர்வதேச ரீதியாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் நிலையிலும், இலங்கையுடன் தொடர்ந்தும் செயல்பட தயார் என கியூபா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வந்துள்ள கியூபாவின் வெளி விவகார அமைச்சர் பெரோனா ரொட்ரிகஸ் இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கும் கியூபாவிற்கும் இடையில் நீண்டகால நட்புறவு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச மன்றங்களில் இலங்கைக்கு ஆதரவு வழங்குவதற்காகவும் கரீபியன் நாட்டில் இலங்கை மாணவர்களுக்கான உயர்கல்வி புலமை பரிசில் வழங்குவதற்காகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இதன்போது கியூபாவிற்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசுடனான பேச்சுவார்த்தைக்கு தயார்-கூட்டமைப்பு-

thamil thesiya koottamaippu indiaஇனப்பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் நிபந்தனைகளுடன் கூடிய பேச்சுவார்த்தைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயார் என கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தை சர்வதேசத்திற்கு காட்டும் வகையில் அமையக்கூடாது எனவும் ஒரு ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையாக காணப்படவேண்டும் எனவும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, அரசாங்கத்துடனான இருதரப்பு பேச்சுவார்த்தையானது சர்வதேச கண்காணிப்பாளர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற வேண்டும் எனவும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

சட்டத்தை செயல்படுத்துவதற்கு அஞ்சத் தேவையில்லை-தேர்தல் ஆணையாளர்-

சட்டத்தை செயல்படுத்துவதற்கு அச்சமடைய வேண்டியதில்லை என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார். ஊவா மாகாண சபை தேர்தல் தொடர்பில் பதுளை மற்றும் மொனராகலை பிரதேசங்களுக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட தேர்தல்கள் ஆணையாளர், இவ்வாறு கூறியுள்ளார். ஊவா மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்புபட்ட குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸார் அச்சப்படத் தேவையில்லை. குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவராக விஜித் மலலகொட நியமனம்-

மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவராக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விஜித் மலலகொட நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய இராச்சியத்தின் அபர்டீன் பல்கலைக்கழகத்தில் சட்ட முதுநிலை பட்டம் பெற்ற இவர், முன்னர் இலங்கை விமானப்படையின் நீதிபதி – சட்டத்தரணியாக செயற்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆறு புதிய தூதுவர்கள் நியமனக் கடிதம் கையளிப்பு-

புதிதாக நியமனம் பெற்ற ஆறு தூதுவர்கள் தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்றுகாலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளித்துள்ளனர். அதன்படி எஸ்தோனிய குடியரசின் தூதுவர் விலிஜர் லுபி, கொலம்பியாவின் தூதுவர் மோனிக்கா லன்ஸெட்டா முட்டிஸ், இஸ்ரேல் தூதுவர் டானியல் கார்மன், பல்கேரிய தூதுவர் பெட்கோ, கோலெவ் டோய்கொவ், வியட்நாம் தூதுவர் பன் கியோ தா எ மற்றும் லாவோஸ் தூதுவர் சௌதம் சகொன்னின்ஹொம் ஆகியோர் நியமனக் கடிதங்களை கையளித்துள்ளனர். வியட்நாம் தூதுவரைத் தவிர இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள ஏனைய தூதுவர்கள் புதுடில்லியில் நிலைகொண்டிருப்பர் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அகதிப் படகு ஆஸி நூதனசாலைக்கு கையளிப்பு-

ilankai akathi padakuஇலங்கை அகதிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்று அவுஸ்ரேலியவிலுள்ள மேற்கு நூதனச்சாலைக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஏப்ரல் 9ஆம் திகதி குறித்த படகு 66 இலங்கை அகதிகளை ஏற்றிக்கொண்டு அவுஸ்ரேலியா சென்றிருந்தது. இந்த படகை கைப்பற்றி அவுஸ்ரேலிய அரசாங்கம் தடுத்து வைத்திருந்தது. எனினும் அது மரத்திலான படகு என்பதால் அதனை பாதுகாப்பத்தில் சிக்கல் காணப்பட்டதால் அதனை தற்போது நூதனசாலைக்கு வழங்குவதற்கு அவுஸ்ரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அகதிகள் உணவு தவிர்ப்பு போராட்டம்-

தமிழகம் திருவண்ணாமலை விசேட முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் சிலர் சாகும்வரை உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. சுமார் 24 பேர் இவ்வாறு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். தங்களை தங்கள் குடும்பத்தினருடன் சேர்க்குமாறு வலியுறுத்தியே இவர்கள் இந்த போராட்டத்தை மேற்கொண்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.