நெடுந்தீவுக்கு முழுமையான மின்சார விநியோகம்-
யாழ். நெடுந்தீவுக்கு நாளைய தினம் முதன்முழுமையாக மின்சாரம் விநியோகிக்கப்படவுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சு தெரிவிக்கின்றது. 40 வீதமான மின்சாரமே இதுவரை நெடுந்தீவுக்கு விநியோகிக்கப்பட்டு வந்ததாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இதனடிப்படையில் நெடுந்தீவு கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய பகுதிகளை உள்ளடக்கும் வகையில், 1,082 குடும்பங்களுக்கான மின்சாரம் விநியோகிக்ப்படவுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
வவுனியாவில் குழந்தையைக் கடத்திய பெண் கைது-
வவுனியாவில் இரண்டு வயதுக் குழந்தையை கடத்தியதாக கூறப்படும் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வவுனியா நகரிலுள்ள அடகுக் கடையொன்றுக்கு அருகில் தாயுடன் இருந்த குழந்தையே, பெண்ணொருவரால் கடத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குழந்தையின் தந்தையது நண்பி எனத் தெரிவித்து, குறித்த பெண் குழந்தையை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர், சந்தேகநபரான பெண், குழந்தையின் தாயாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவரது கணவர் பெற்றுக்கொண்ட பணத்தை மீளக் கையளிக்கும்வரை குழந்தையை ஒப்படைக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாயார் பொலிஸில் செய்த முறைப்பாட்டிற்கமைய, சந்தேகநபரான பெண் கைதுசெய்யப்பட்டதுடன், குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது. குழந்தை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்செய்யப்படவுள்ளார்.

24 வருடங்களுக்கு பின்னர் யாழ்தேவி ரயில் இன்று யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் பளையில் இருந்து யாழ் வரையான ரயில் பாதை இன்று திறந்துவைக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து வடபகுதிக்கான ரயில் சேவை உத்தியோகபூர்வமாக யாழ்ப்பாணம் வரை ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதியின் முதலாவது அனுமதிசீட்டு கொள்வனவுடன் இன்று முற்பகல் 10 மணிக்கு பளையிலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி புறப்பட்ட ரயில் 11.15மணியளவில் யாழ்ப்பாணத்தை சென்றடைந்தது. இந்த பயணத்தின்போது கொடிகாமம் மற்றும் நாவற்குழி தொடரூந்து நிலையங்களின் பணிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஆரம்பித்து வைத்தார். ரயில் கட்டணமாக முதலாம் வகுப்புக்கு 1500 ரூபாவும், இரண்டாம் வகுப்புக்கு 800 ரூபாவும், மூன்றாம் வகுப்புக்கு 320 ரூபா அறவிடப்படவுள்ளது.
கொழும்பு வெள்ளவத்தை மெரைன் ட்ரைவ் வீதியில் இன்றுமுதல் விசேட போக்குவரத்துத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நெல்சன் வீதியிலிருந்து சார்லிமன்ட் வீதி வரையான மெரைன் ட்ரைவ் வீதி ஒருவழிப் பாதையாக செயற்படுத்தப்படுகின்றது. வார நாட்களில் காலை 7மணி தொடக்கம் காலை 9.30 வரை குறித்த வீதியில் கொழும்பை நோக்கி மாத்திரமே வாகனங்களை செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு பிற்பகல் நான்கு மணி தொடக்கம் மாலை 6.30 வரை வெள்ளவத்தையை நோக்கி மாத்திரம் குறித்த வீதியில் வாகனங்களை செலுத்த முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வீதிப் புனரமைப்பு காரணமாக இந்த விசேட திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கைமீதான நவநீதம்பிள்ளையின் யுத்தக்குற்ற விசாரணை ஜனவரியில் நிறைவடையும் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் நிகழ்ந்ததாக கூறப்படும் யுத்தக்குற்றம் மற்றும் காணாமல்போனோர் தொடர்பில், ஐ.நாவின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவினர், எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதி விசாரணைகளை நிறைவுசெய்து அறிக்கை தயாரிப்பரென ஐ.நா. மனித உரிமை அமைப்பு அறிவித்துள்ளது. அத்துடன் எதிர்வரும் மார்ச்சில் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமை கூட்டத் தொடரின்போது இவ்வறிக்கை கையளிக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் கடந்த வாரம் ஜெனீவாவில் ஒன்றுகூடி ஆராய்ந்தும் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.