பொதுநலவாய செயலாளர் கமலேஷ் ஷர்மாவின் யாழ்.ப்பாண விஜயம்-

Kamaleshபொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா வடபகுதிக்கான முதலாவது விஜயத்தை இன்றுமுற்பகல் மேற்கொண்டுள்ளார். வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் ஜி.ஏ சந்திரசிறியை சந்தித்து, வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் கமலேஷ் ஷர்மா கலந்துரையாடியுள்ளார். இதனையடுத்து இன்று மதியம் 1.30மணிக்கு ரில்கோ விருந்தினர் விடுதியில் சிவில் சமூகத்தினரை சந்தித்துள்ளதுடன் மாலை இந்தியன் வீட்டுத்திட்டம் குறித்து நேரில் சென்று பார்வையிடவும் ஏற்பாடாகியுள்ளது. இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு, பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா நேற்று பிற்பகல் இலங்கைக்கு வருகைதந்திருந்தார். 2013ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வதே, கமலேஷ் ஷர்மாவின் இலங்கை விஜயத்தின் நோக்கமென வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் சிலரை பொதுநலவாய செயலாளர் நாயகம், சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ் – கொழும்பு ரயிலுக்கு, வியாழன் வரை ஆசனப் பதிவு இல்லை-

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்கான ரயில்களின் ஆசனப் பதிவுகள் அனைத்தும் இன்று முதல் ஐந்து தினங்களுக்கு முற்பதிவு செய்யப்பட்டு பூர்த்தியாகியுள்ளதாகவும் இதனால், எதிர்வரும் வியாழக்கிழமை வரையில் ஆசனப் பதிவுகள் இடம்பெறாது எனவும் யாழ். புகையிரத நிலைய பிரதம அதிபர் என்.தவானந்தன் தெரிவித்துள்ளார். யாழிலிருந்து கொழும்பு செல்வதற்கான ரயில்களை முற்பதிவு செய்துகொள்வதற்காக கடந்த வாரம் அதிகளவான பொதுமக்கள் புகையிரத நிலையம் வருகை தந்தனர். இந்நிலையில், யாழ் – கொழும்பு சேவையில் ஈடுபடும் குளிரூட்டப்பட்ட கடுகதி, கடுகதி, யாழ்.தேவி, தபால் புகையிரதம் ஆகிய ரயில்களின் இருக்கைகள் முழுவதும் முற்பதிவு செய்யப்பட்டன. அத்துடன், யாழ் – கொழும்பு – மாத்தறை (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) செல்லும் ரயிலுக்கான இருக்கைகளும் முற்பதிவு செய்யப்பட்டு பூர்த்தியாகியுள்ளன. இதனால், இன்று முதல் தொடர்ந்து வரும் 5 நாட்களுக்கு, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்கான ரயில்களின் ஆசனப் பதிவுகள் அனைத்தும் முற்பதிவு செய்யப்பட்டுவிட்டன என அவர் மேலு; சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் செய்திகளை வாசிக்க….. Read more