இலங்கைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை-
ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை எதிர்வரும் சில மாதங்களில் நீக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சுற்றுச்சூழல் தொடர்பான ஆணையாளர் இதனைத் தெரிவித்துள்ளார். மீன்பிடித்தல் தொடர்பான சர்வதேச சட்டங்கள் சரியாக பின்பற்றப்படாததன் காரணமாக, கடந்த வருடம் விதிக்கப்பட்டிருந்த இந்த தடை, இந்த மாதம் முதல் அமுலுக்கு வந்துள்ளது. இதனை நீக்கிக் கொள்வது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இதனடிப்படையில் சர்வதேச சட்டங்களை பாதுகாப்பது தொடர்பில் அவரால் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் எதிர்வரும் சில மாதங்களில் இந்த உறுதிமொழிகள் பின்பற்றப்படுகின்றனவா? என்று ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் செய்யும். அதனடிப்படையில் இந்த தடை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு-
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹ{கோ ஸ்வைர் இன்று யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். யாழில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்ததுடன், யாழ் ஊடக அமையப் பிரதிநிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றார். வடமாகாண முதலமைச்சரை சந்தித்த ஹ{கோ ஸ்வைர், வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்தும், புதிய அரசாங்கத்துடனான உறவு குறித்தும் கேட்டறிந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை ஊடகவியலாளர்களை சந்தித்த அவர், ஆட்சி மாற்றத்தின் பின்னராக ஊடகவியலாளர்களின் சுதந்திரம் உள்ளிட்ட விடயங்கள் குறித்த கருத்துக்களை கேட்டறிந்து கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க உதவி ராஜாங்க செயலர் இலங்கைக்கு விஜயம்-
அமெரிக்காவின் உதவி ராஜாங்கச் செயலாளர் நிஷா தேஸாய் பீஸ்வால் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். வெளிநாட்டு அமைச்சின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. அவர் தமது இலங்கை விஜயத்தின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பலரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில், இலங்கை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த அறிக்கை குறித்து அவரது விஜயத்தின் போது முக்கிய அவதானம் செலுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு-
இந்திய மற்றும் இலங்கை கடல் எல்லை பிரதேசங்களிலேயே அந்தந்த நாடுகளின் மீனவர்களை மீன்பிடியில் ஈடுபட செய்வதன் ஊடாகவே, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படுகின்ற மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் சட்டத்துறை நிலையியல் குழுவின் தலைவர் ஈ.எம்.சுதர்சன நாச்சியப்பன் இதனைத் தெரிவித்துள்ளார். எனினும் இந்த விடயம் குறித்து வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு செயலாளர்கள் பேச்சுவார்த்தை இறுதி தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அத்துடன் இரண்டு நாட்டு மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய ஒன்று. தொடர்சியாக இரண்டு நாட்டு மீனவர்களும் சந்திக்கின்ற பிரச்சினைகள் குறித்து குறைந்த பட்சம் வருடத்துக்கு ஒருமுறையேனும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமே தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியும் என கூறியுள்ளார்.
அவுஸ்திரேலிய நீதிமன்ற தீர்ப்புக்கு சட்டத்தரணிகள் கண்டனம்-
அவுஸ்திரேலியாவில் இலங்கை அகதிகள் நடுக் கடலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை சட்ட ரீதியானதே என்று அவுஸ்திரேலிய மேல் நீதிமன்றம் வழங்கி இருந்து தீர்ப்புக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய அகதிகள் சட்டத்தரணிகள் இதனைத் தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் தமிழகத்தில் இருந்து அவுஸ்திரேலியா சென்ற 157 இலங்கை அகதிகள், ஒருமாத காலப்பகுதி வரையில் கடலில் கப்பல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டமை சட்ட முறையற்ற செயல் என்று தெரிவித்து, நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை அவுஸ்திரேலிய மேல் நீதிமன்றம் நேற்று ரத்து செய்திருந்தது. அவுஸ்திரேலிய நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் மூலம், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திட்டங்களுக்கும், அவுஸ்திரேலியாவின் உள்நாட்டு சட்டத்திட்டங்களுக்கும் இடையிலான இடைவெளியை மேலும் அதிகரித்திருப்பதாக, சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தமிழக அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டாமென தமிழக முதல்வர் கோரிக்கை-
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டாம் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக முதல்வரால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது 1983ம் ஆண்டு தொடக்கம் இலங்கையில் இருந்து 3 லட்சத்து 4 ஆயிரத்து 259 பேர் தமிழகத்துக்கு அகதிகளாக சென்றுள்ளனர். அவர்களில் 2 லட்சத்து 12 ஆயிரம் பேர் வரையில் நாடு திரும்பியுள்ளனர். தற்போது தமிழகத்தில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 55 இல்ஙகை அகதிகள் வசிப்பதுடன், 64 ஆயிரத்து 924 பேர் முகாம்களிலேயே தங்கியுள்ளனர். தற்போது இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் அகதிகளை இலக்கைக்கு அனுப்புவது குறித்து பேச்சுவார்த்தைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கையில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழல் ஏற்படுத்தப்படும் வரையில், தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டாம் என்று தமிழக முதல்வர் கோரியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
தேர்தல்கால பிரசார பொருட்கள் மீட்பு-
ஜனாதிபதி தேர்தலின் போது, விநியோகிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த, 75 ஆயிரம் திவிநெகும உறுதி பத்திரங்கள்; மற்றும் 65 ஆயிரம் பஞ்சாங்க நாட்காட்டிகள் என்பன அம்பாறை மாவட்ட செயலக களஞ்சியசாலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. அம்பாறை காவற்துறையினரால் இவை நேற்று மீட்கப்பட்டன. ஜே.வீ.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ஸ முன்வைத்த முறைப்பாட்டை அடுத்தே இந்த உறுதி பத்திரங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பில், அம்பாறை மாவட்ட செயலாளர் நீல் டி அல்விஸிடம் காவற்துறையினர் விசாரணை செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதன்படி, ஜனவரி 2ஆம் திகதி மாவட்ட செயலக சமூர்தி முகாமைத்துவத்திற்கு கிடைக்க பெற்ற இந்த ஆவணங்களை, ஜனாதிபதி தேர்தல் காரணமாக விநியோகிக்க வேண்டாம் தாம் ஆலோசனை வழங்கியதாக மாவட்ட செயலாளர் கூறியுள்ளார்.
குமார் குணரத்தினத்திடம் விளக்கம் கோரல்-
சுற்றுலா வீசா மூலம் நாட்டிற்கு வந்து, அரசியல் நடவடிக்கையில் ஈடுப்படுவது எவ்வாறு என, முன்னணி சோஷலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரத்னத்திடம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விளக்கம் கோரியுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு வருகை தருமாறு விடுக்கப்பட்டிருந்த அறிவித்தலுக்கு அமைய அவர் நேற்று அங்கு சென்றிருந்தார். இதன்போது இந்த விளக்கம் கோரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், விசாரணைக்காக மீண்டும் வருகைதருமாறு தமக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டதாக முன்னணி சோஷலிச கட்சியின் குமார் குணரத்னம் மேலும் கூறியுள்ளார்.
பாலித்த எம்.பி.க்கு விளக்கமறியல், ஜயசிங்க பண்டார எம்.பியாக நியமனம்-
ஐக்கிய தேசியக்கட்சியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெருமவின் விளக்கமறியல் பெப்ரவரி 2ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது. அவர், ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை முழதாளிடவைத்து துன்புறுத்தியதாக அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இது இவ்விதமிருக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்கு நியமிக்கப்பட்ட ஜயசிங்க பண்டார, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இலங்கை சோஷலிச ஜனநாயக குடியரசின் 43வது பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பிரதம நீதியரசராக இருக்க காணப்பட்ட அனைத்து தடைகளும் நீக்கப்பட்டுள்ளன. அதன்படி, அவர் மீண்டும் பிரதம நீதியரசராக செயற்படுவதாகவும் நாளை ஓய்வு பெறுவார் என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார். அதன்படி, புதிய பிரதம நீதியரசராக கே.ஸ்ரீபவன் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, ஷிராணி பண்டாரநாயக்க மீதான தடைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இன்று 28ம் திகதி தொடர்ந்தும் கடமையை பொறுப்பேற்கலாம் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அதனடிப்படையிலேயே அவர் இன்று நீதிமன்றம் சென்று கடமைகளை பொறுப்பேற்றதாகவும் அரசாங்க தகவல்கள் கூறுகின்றன.
சரத் பொன்சேகாவிடம் இருந்து பறிக்கப்பட்ட அனைத்து பதவிகள், பட்டங்களும் மீள அவருக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. இராணுவத்தில் அவர் வகித்த முப்படைகளின் பிரதானி, இராணுவ தளபதி போன்ற பதவிகள் மற்றும் அவர் வசமிருந்து ஜெனரல் உள்ளிட்ட பட்டங்கள் திருப்பி அளிக்கப்பட்டுள்ளன. தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியன இந்த தகவலை உறுதி செய்துள்ளன. ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத்தில் இருந்து விலகி ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிட்டதுடன் தேர்தல் தோல்வியின் பின் அவர் கைது செய்யப்பட்டார். வெள்ளைக் கொடி வழக்கு, ஹைகொப் வழக்கு போன்றவற்றில் ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டார். மேலும் அவரது பதவி, பட்டங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டன. இந்நிலையில் சரத் பொன்சேகா அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்த நிலையில் சரத் பொன்சேகா இழந்த அனைத்தும் இன்று மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் எதிர்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் கைச்சாத்தானதாக கூறப்படும் உடன்படிக்கை தொடர்பில் சமூகத்தில் கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்றன. ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்ததன் பின்னர் இந்த கருத்து வெளியிடப்பட்டது. எனினும். அது தொடர்பான ஆவணங்களில் எந்தவித உண்மையும் இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. காவல்துறை மா அதிபரிடம் முறையிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பான விசாரணைகளை தற்போது இறுதி செய்துள்ளதாக கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் றோஹன தெரிவித்துள்ளார். இதேவேளை. ஜனாதிபதி தேர்தல் தினத்தில் அலரி மாளிகையில் இடம்பெற்ற சூழ்ச்சி தொடர்பான விசாரணைகளும் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர, கடந்த காலங்களில் காவல்துறை திணைக்களத்தினுள் இடம்பெற்ற ஏதேட்சையான இடமாற்றங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னணி சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் இலங்கை திரும்பியதன் பின்னர் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து, வாக்குமூலம் கொடுப்பதற்கு அவர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு இன்று சென்றுள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தல் காலத்தில், முன்னணி சோசலிச கட்சியின் தலைவராக எனது செயற்பாடுகள் குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் என்னிடம் கேட்டார்கள். மேலும் தேர்தல் காலத்தில் இடம்பெற்ற தேர்தல் வன்முறை சம்பவங்களில் நான் சம்பந்தப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைக்கு நாளை திணைக்களத்துக்கு வருமாறும் தெரிவித்தனர். அது மட்டுமன்றி எனது குடியுரிமை பிரச்சினைகள் குறித்தும் விசாரணைகளை நடத்தினார்கள் என்றார். பன்னிப்பிட்டியவிலுள்ள முன்னணி சோசலிச கட்சியின் அலுவலகத்துக்கு குடிவரவு திணைக்கள அதிகாரிகள், குமார் குணரட்ணத்திடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக திங்களன்று சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அடுத்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் தனித்து போட்டியிடவுள்ளதாக ஜனநாயக கட்சியின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். அத்துடன், தேர்தலின் பின்னர் கூட்டணி அமைப்பது தொடர்பில் தீர்மானிக்கவுள்ளதாக அவர் ஊடகத்திடம் குறிப்பிட்டுள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் 98,800க்கும் அதிகமான மக்கள் வாக்களித்து தனக்கு அங்கீகாரம் வழங்கியிருந்ததாக இதன்போது பொன்சேகா நினைவுகூர்ந்தார். அந்த சந்தர்ப்பத்தில் நாட்டில் ஆட்சியிலிருந்த ஊழல்மிகு அரசாங்கம் தனது வாக்குகளை திருடியதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் குற்றஞ்சாட்டினார். மக்கள் தற்போது தனக்கு வழங்கி வருகின்ற ஆதரவை அவதானிக்கையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் இரட்டிப்பான வாக்குகளை பெற்று வெற்றியீட்ட முடியும் என்ற நம்பிக்கை தனக்கிருப்பதாகவும் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணம், வலி தென்மேற்கு பிரதேசசபைக்கு உட்பட்ட காக்கைதீவு கல்லுண்டாய் வெளிகளில் யாழ் மாநகரசபையோ ஏனைய உள்ளுராட்சி சபைகளோ கழிவுகள் கொட்டுவதை உடனடியாக நிறுத்துமாறு வலி தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சி.மகேந்திரன் உத்தரவிட்டுள்ளார். 27.01.2015ஆம் திகதி செவ்வாய்கிழமை முதல் உடன் நடைமுறைப்படுத்துமாறும் இதனை மீறுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார். எமது நிர்வாக எல்லைக்குட்பட்ட காக்கைதீவு கல்லுண்டாய் வெளிப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை 22.01.2015ஆம் திகதிமுதல் எமது பிரதேச சபைக்குட்பட்ட கழிவுகளை கொட்டுவதற்கு யாழ் மாநகரசபை தடைவிதிக்கப்பட்டிருந்தமையால் ஏற்பட்ட குழப்பநிலையினை தீர்க்கும் முகமாக 26.01.2015ஆம் திகதி திங்கட்கிழமை கௌரவ மாகாண சபை உறுப்பினர் ப.கஜதீபன், வலிதென்மேற்கு பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சி.மகேந்திரன் மற்றும் சபையின் கௌரவ உறுப்பினர்கள் பொறுப்பான உத்தியோகத்தர்கள் உள்ளடங்கலான ஓர் குழு சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டது. 



மூத்த பொதுவுடமைவாதியும் புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் முன்னோடித் தோழருமான கே.ஏ .சுப்பிரமணியத்தின் 25ஆவது ஆண்டு நினைவும் தோழர் சி.கா.செந்திவேல் அவர்களால் எழுதப்பட்ட “தோழர் மணியம் நினைவுகள்” என்ற நூல் வெளியீடும் தேசிய கலை இலக்கியப் பேரவையின் யாழ்ப்பாண பணிமனையில் இடம்பெற்றுள்ளது.




சிரேஷ்ட ஊடகவியலாளர் தர்மசிறி பண்டார ஏக்கநாயக்க ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இதற்கான நியமனக் கடிதத்தைக் கையளித்துள்ளார். இப்பாகமுவ மத்திய கல்லூரியின் பழைய மாணவரான தர்மசிறி பண்டார ஏக்கநாயக்க, ஊடகத்துறையில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேற்பட்ட அனுபவமுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளராவார். ஊடகவியலாளர், செய்தி தயாரிப்பாளர் மற்றும் செய்தி வாசிப்பாளராக ஊடகத்துறையில் தமக்கென ஓரிடத்தைப் பிடித்திருந்த அவர், நியூஸ்பெஸ்ட் (சக்தி எவ்.எம்) ஊடகத்தின் செய்திப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். உள்நாட்டு, வெளிநாட்டு நிகழ்வுகளிலும் செய்தி சேகரிப்பில் அனுபவமுள்ள தர்மசிறி பண்டார ஏக்கநாயக்க, சர்வதேச மட்டத்திலான பயிற்சிகளையும் பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் குடிநீரில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக குற்றம்சுமத்தப்பட்ட சுன்னாகம் தனியார் மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்துமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிவான் சதீஸ்கரன் இந்த உத்தரவை பிறப்பித்ததாக வழக்குத் தொடுனர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார். குறித்த மின்னுற்பத்தி நிலையத்தின் கழிவு எண்ணெய் நிலத்துக்குள் துழையிட்டு செலுத்தப்படுவதால் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் குடிநீருக்கு பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்து உணவுத் தவிர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான லெப்டினன் யோசித்த ராஜபக்ஷ கடற்படையில் இருந்து இராஜினாமா செய்ய சமர்பித்த விலகல் கடிதத்தை கடற்படை தளபதி வைஸ் அட்மிரால் ஜயந்த பெரேரா நிராகரித்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமான்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் முடிந்த மறுநாள் அதாவது 9ம் திகதி யோசித்த ராஜபக்ஷ தனது விலகல் கடித்தை சமர்பித்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, யோசித்த ராஜபக்ஷ கடற்படையில் சேர்ந்த விதம், வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற விதம், கடமையில் இருந்தபோது அரசியல் செய்த விதம் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து விசாரணை நடத்துமாறு மக்கள் விடுதலை முன்னணி நேற்று பாதுகாப்பு செயலாளரிடம் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் கணக்கு விவரங்களை திரட்டுவதற்காக, அனைத்து நிதி நிறுவனங்களிலும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அனுமதியளித்துள்ளார்.
மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து நிலையத்தில் மௌனப் போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது இதன்படி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, திருக்கேதீஸ்வரம் புதைகுழி தொடர்பில் விசாரணை, காணாமல் போனவர்கள் தொடர்பில் பதிலளிக்குமாறு வலியுறுத்தி மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து நிலையத்தில் மௌனப் போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இன்றுகாலை 10.30 மணியளவில் மன்னார் பிரஜைகள் குழுவின் அலுவலகத்தில் இருந்து ஆரம்பித்த மௌனப் பேரணி மன்னார் பிரதான பேரூந்து நிலையத்தை வந்தடைந்தது. “வடக்கில் அதிகளவான இராணுவ குவிப்பு எதற்கு”, “சர்வதேசமே போர்க்குற்றத்தை விசாரணை செய்”, “நீண்டகால கைதிகளை உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தி விடுதலை செய்”, “எங்கள் பிள்ளைகள் எங்கே”, “காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விசாரணையினை விரைவுபடுத்து” போன்ற பல சுலோகங்களைத் தாங்கியவாறு மிக அமைதியான முறையில் போராட்டத்தை நடத்தினர். குறித்த மௌனப் போராட்டம் நண்பகல் 12.30க்கு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. புதிய அரசாங்கத்தின் கவனத்தை ஈர்;க்கும் வகையிலேயே இந்த பேரணி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த பேரணியில் காணாமல் போனோரின் நூற்றுக்கணக்கான உறவினர்கள் பங்கேற்றிருந்தனர்.
யாழ். வலி மேற்கு பிரதேசத்திற்கு உட்பட்ட சங்கானைப் பிரதேச இளைளுர்களின் ஒத்துழைப்புடன் பிரதீபனின் தயாரிப்பில் உருவாகிய தமிழ் பசங்க திரைப்படம் கடந்த 15.01.2015 அன்று மதியம் 2 மணியளவில் ஆனைக்கோட்டையில் லெஸ்லி திரையரங்கில் திரையிடப்பட்டது. இவ் நிகழ்வில வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் மங்கல விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்ததோடு பாராட்டு செய்தியையும் வழங்கினார். இவ் நிகழ்வின் போது யாழ் மாவட்ட பாராஞமன்ற உறுப்பினர் கௌரவ. ஈ.சரவணபவன் அவர்கள் முதற்பிரதியினை பெற்றுக் கொண்டார். இவ் நிகழ்வில் புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான திரு. பரஞ்சோதி, திரு. கஜதீபன், திரு. ஆணோல்ட், கலாநிதி. சர்வேஸ்வரன் முதலான பலரும் கலந்து சிறப்பித்ததுடன், படைப்பாளியும் இயக்குனருமான பிரதீபனுக்கு பாராட்டும் தெரிவித்துக் கொண்டனர்.
