Header image alt text

கட்டார் நாட்டின் அமீர் இலங்கை வருகை-

qatar mannarகட்டார் நாட்டின் அமீர், ஷெய்க் தமீம் பின் ஹமட் – அல்- தானிஇலங்கையை வந்தடைந்துள்ளார். சுமார் மூன்று மணித்தியாலங்கள் வரை மாத்திரமே இலங்கையில் தங்கியிருக்கும் இவர் மூன்று ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவாரென வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. விளையாட்டு, இளைஞர் விவகாரம் மற்றும் செய்தி பரிமாற்றம் ஆகியன தொடர்பிலேயே இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுமென தெரியவருகிறது. இலங்கையில் தங்கியிருக்கும் சில மணித்தியாலங்களில் கட்டார் அமீர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதுடன் அவரும் அவரது பிரதிநிதிகளும் அரசாங்க தரப்பினருடன் இருதரப்பு சந்திப்புக்களிலும் பங்குபற்றவுள்ளனர். கட்டார் நாட்டின் அமீர் வருகையை முன்னிட்டு கொழும்பு – கட்டுநாயக்க வீதியில் விசேட போக்குவரத்து திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.

19வது திருத்தம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு-

ranilஇலங்கை அரசியல் யாப்பில் திருத்தங்களை செய்யும் முகமாக 19வது அரசியல் யாப்புத் திருத்தச் சட்டமூல ஆவணம் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் இந்த 19வது அரசியல் யாப்புத் திருத்தச் சட்டமூல ஆவணம் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைக்கு உள்ள அதிகாரங்களை குறைத்தல், அமைச்சரவை- பாராளுமன்றுக்கு கூடிய அதிகாரம் அளித்தல், சுயாதீன ஆணைக்குழு அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்கள் 19வது அரசியல் யாப்புத் திருத்தத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை முடிவுக்கு கொண்டுவரும் புதிய அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு கடந்த 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட அமைச்சரவை கூட்டத்தின் போது அங்கிகாரம் கிடைத்திருந்தது. அமைச்சரவை அனுமதியளித்ததன் பின்னர் 19ஆம் திகதி விசேட வர்த்தமானியும் வெளியானது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்திய மீனவர்கள் விடுதலை-

fising (1)அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 21 ஆம் திகதி இரவு அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் குறித்த 21 பேரும் கைதுசெய்யப்பட்டு 22ஆம் திகதி யாழ். மாவட்ட நீரியல் வளத்திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டிருந்தனர். அன்றே ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு அவர்கள் ஏப்ரல் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். எனினும் இந்திய, இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும் என்ற நல்லெண்ண நோக்கத்தில் இன்றைய தினம் குறித்த 21 மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் லெனின்குமார் முன்னிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, கடந்த 21ஆம் திகதி மன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 33 இந்திய மீனவர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ரயிலில் மோதுண்ட யாழ். மாணவன் உயிரிழப்பு-

death (2)ரயிலில் மோதுண்டு படுகாயமடைந்த மாணவன் சிகிச்சை பலனின்றி நேற்று கொழும்பில் மரணமடைந்துள்ளார் கடந்த மாதம் 19ஆம் திகதி யாழ்ப்பாணம் பிறவுண் வீதி முதலாம் ஒழுங்கையிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையால் கடக்கும்போது ரயிலில் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட மாணவன் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்துள்ளார். யாழ். இந்துக் கல்லூரியில் உயர்தர வகுப்பு மாணவனான 19வயமதன கோப்பாயைச் சேர்ந்த குகப்பிரியன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை-

சிறைச்சாலைக்குள் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய அதிகாரிகளை பதவியிறக்கம் செய்ய சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரல் ரோஹண புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர்களுக்கு கொடுப்பனவு-

முன்னாள் பிரதமர்களுக்கு பல்வேறான கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. அதனடிப்படையில் அவர்களுக்கு உத்தியோகபூர்வ வாகனம், மாதாந்த கொடுப்பனவாக 25 ஆயிரம் ரூபாய் மற்றும் எரிபொருள் கொடுப்பனவும் வழங்கப்படும்.

கைது செய்யும் வயதெல்லை நீடிப்பு-

குற்றச் செயல்கள் தொடர்பில் கைது செய்யப்படும் வயது எல்லை 8 தொடக்கம் 12 வரை அதிகரிக்க சிறுவர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் சிறுவர் நீதிமன்றம், அரசாங்கத்திற்கு தற்போது யோசனை முன்வைத்துள்ளதாக அதன் தலைவர் நடாஷா பாலலேந்திர தெரிவித்துள்ளார். சர்வதேச சட்ட திட்டங்களுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசின் ஆட்சிக்காலத்தில் எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும் -ஜனாதிபதி

M,S,R in jaffna1M,S,R in jaffna2யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் இருப்பதை அறிந்திருப்பதாகவும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் புதிய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் தீர்வு காணப்படும் என்றும்.
தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே தமிழ் மக்கள் தமக்கு வாக்களித்திருக்கின்றார்கள் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த மக்களின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றான காணிப் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருக்கின்றார்.
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு இராணுவ அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் வளலாய் பகுதியில் உள்ள 424 ஏக்கர் பரப்புள்ள காணிகளை அவற்றின் உரிமையாளர்களான பொதுமக்களுககுக் கையளிக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கினார். Read more

வடக்கு, கிழக்கு மாவட்டங்களில் காணாமல்போனோரின் உறவினர்கள் போராட்டம்

mannar missing protestest2இலங்கையில் காணாமல்போனவர்கள் தொடர்பில் நடத்தப்பட்டு வருகின்ற உள்ளக விசாரணைகளில் நம்பிக்கை இல்லை என்றும் சர்வதேச தரத்திலான விசாரணையை வலியுறுத்தியும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடந்துள்ளன.
வடக்கே வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும், கிழக்கே திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலுமாக 8 மாவட்டங்களில் ஒரே நேரத்தில் மாவட்ட அரச செயலகங்களுக்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன.
காணாமல்போகச் செய்யப்பட்டவர்களின் உறவினர்களுக்கான நலன்புரி அமைப்புக்களும் தமிழ் சிவில் சமூக அமைப்புக்களும் இணைந்து இதற்கான அழைப்பை விடுத்திருந்தன.
காணாமல்போயுள்ளவர்களைக் கண்டுபிடிப்பதில் சர்வதேசத்தின் அர்ப்பணிப்புடனான ஈடுபாடு அவசியம் என்று வலியுறுத்தும் மகஜர் ஒன்றும் ஐநா மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்படுவதற்காக இந்த 8 மாவட்டங்களிலும் கையளிக்கப்பட்டிருக்கின்றன.

Read more

சிங்கப்பூரின் தேசத்தந்தை லி குவான் யூ காலமானார்-

lee kuangசிங்கப்பூரின் தேசத்தந்தை என்று போற்றப்படும் லி குவான் யூ காலமானதாக சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இறக்கும்போது அவருக்கு வயது 91. ஒரு காலத்தில் சின்னஞ்சிறு கடற்கரை நகரமாக பார்க்கப்பட்ட சிங்கப்பூரை, உலகின் முக்கிய செல்வந்த மையமாக மாற்றிக்காட்டியவர் லீ என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து சிங்கப்பூர் விடுதலை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த லீ குவான் யூ, பின்னர் மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்து வருவதற்கும் நடவடிக்கை எடுத்திருந்தார். சிங்கப்பூரின் முதல் பிரதமராக பதவியேற்ற லீ 31 ஆண்டுகள் பதவியில் இருந்தார். கடந்த பல வாரங்களாக நிமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் இன்று அதிகாலை, அமைதியான முறையில் அவரது உயிர் பிரிந்ததாக சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. இறுதிச் சடங்குகள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பிரதமர் அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவராக தினேஷை நியமிக்குமாறு கோரிக்கை-

dineshஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளமையால் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபாலடி சில்வா, எதிர்க்கட்சி தலைவராக தொடர்ந்து இருப்பதில் எவ்விதமான தார்மீகமும் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் தெரிவித்துள்ளன. ஆகையால், எதிர்க்கட்சி தலைவராக மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தனவை நியமிக்கவேண்டும் என்றும் கூட்டமைப்பின் பங்காளிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, பிவிதுரு ஹெல உறுமயவில் செயலாளர் உதயன் கம்பன்பில ஆகியோர் இணைந்து கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக நிறுத்துமாறு வலியுறுத்தும் கூட்டம் இரத்தினபுரியில் எதிர்வரும் 26ஆம் நடைபெறும் என்றும் பங்காளிகள் கட்சிகள் தெரிவித்துள்ளன.

சர்வதேச விசாரணை கோரி மட்டக்களப்பில்; ஆர்ப்பாட்டம்-

140129160658_missing_people_commission_304x171_bbc_nocreditகாணாமல் போனவர்கள் தொடர்பாக உள்ளக விசாரணைகளை முறையாக முன்னெடுக்கவில்லை. எனவே இவ்விடயம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரி காணாமல் போனோரின் உறவினர்கள் இன்றுகாலை முதல் மட்டக்களப்பு நகரில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். மட்டக்களப்பு மணிக்கூட்டுக்கோபுரத்தின் முன்பாக அதிகமான பெண்கள் காணாமல் போனோரின் உறவினர்களின் புபை;படங்களுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருகின்றனர். உண்ணாவிரதம் இடம்பெற்ற பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்த மாவட்ட அரச அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் ஐ.நா சபை செயலாளர் நாயகத்திற்கு அனுப்புவதற்கான மகஜரை மாவட்ட லயன்ஸ் கழக தலைவர் கே.செல்வேந்திரன் கையளித்தார். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.கிரிதரன் காந்தி சேவா சங்க செயலாளர் எஸ்.கதிர் பாரதிதாசன் உட்பட பிரமுகர்கள் பலரும் சமுகமளித்திருந்தனர். உள்ளக விசாரணையில் தங்களுக்கு நம்பிக்கையில்லை. சர்வதேச விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காகவே ஐக்கிய நாடுகள் சபைக்கு மகஜர் அனுப்புவதாக செல்வேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்த்தனவுக்கு பிணை மறுப்பு-

sarana gunawardenaமுன்னாள் பிரதியமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சரண குணவர்தனவை எதிர்வரும் 30ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம், இன்று உத்தரவிட்டுள்ளது. அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிணை மனுவை நிராகரித்த அத்தனகல நீதவான் காவிந்தியா நாணயக்கார, சரண குணவர்தனவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். 90 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரும்பு மோசடி சம்பவங்கள் தொடர்பில் அவருக்கு எதிராக செய்யப்பட்டிருந்த முறைப்பாட்டையடுத்து, அவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சிலாபத்தைச் சேர்ந்த வர்த்தகரான மொஹமட் ரஷ்மி என்பவரால் மூன்று வருடங்களுக்கு முன்னர் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்துடன் முன்னாள் அமைச்சருடன் பேசப்பட்ட வர்த்தகம் தொடர்பிலான ஒலிநாடாவையும் அந்த வர்த்தகர், குற்றப்புலனாய்வு பிரிவில் ஒப்படைத்திருந்தார். அதனடிப்படையிலேயே அவர், கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்-

ajith pereraரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஒருவர் யுக்ரைய்ன் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களைப் பெற்றுக்கொடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. யுக்ரைய்ன் அரசாங்கத்தின் அறிவித்தலுக்கு அமைய அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ பெரரா குறிப்பிட்டுள்ளார் முன்னாள் ஜனாதிபதியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்கியமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விடயம் குறித்து யுக்ரெய்ன் அரசாங்கம் வெளிவிவகார அமைச்சருக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விசாரணைகள் நிறைவுபெற்றதும் முன்னாள் தூதுவர் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ள நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கை வருகை-

european unionஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் வழங்குவது தொடர்பான கலந்துரையாடல்களை நடாத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட பிரதிநிதிகள் குழு இன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளது. இக்குழுவினர் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடாத்தவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டை அடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தினால் 2010ஆம் ஆண்டு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன்படி, இலங்கையில் தயாரிக்கப்படுகின்ற 300 வகையான ஆடை உற்பத்திகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இராமேஸ்வர மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுப்பு-

fishingஇலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இராமேஸ்வர மீனவர்கள், இன்றுமுதல் காலவரையரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். நாளைய தினம் இலங்கை-இந்திய மீனவ சங்கங்களுக்கிடையில் சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில் இந்த மீனவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இது தொடர்பில் இன்றுகாலை இராமேசுவரத்தில் மீனவர்கள் சங்கங்களின் அவசர கூட்டம் நடைபெற்றது. இதில் மீனவர்கள் சங்க தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இருநாட்டு மீனவர்களுக்கிடையே சுமூகமாக பேச்சுவார்த்தை நடைபெற உடனே இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 54 பேரை விடுதலை செய்ய வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்யப்படும் வரை இராமேசுவரத்தில் மீனவர்கள் இன்றுமுதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி இராமேசுரவம் மீனவர்கள் இன்றுமுதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றுள்ளனர். இதனால் சுமார் 800க்கும் அதிகமான விசைப்படகுகள் கரைகளில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

வலிமேற்கு பிரதேச சபையில் உலக நீர் தினம் அனுஷ்டிப்பு-

vali westயாழ். வலிமேற்கு பிரதேச சபையின் கலாச்சரா மண்டபத்தில் உலக நீர் தினம் நேற்று (22.03.2015) ஞாயிற்றுக்கிழமை வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. நாகரஞசினி ஐங்கரன் அவர்களது தலைமையில் பெரும் எழுச்சியுடன் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபையின் விவசாயம், நீர்ப்பாசனம், கால்நடை அமைச்சின் அமைச்சர் கௌரவ. பொ.ஐங்கரநேசன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக யாழ் மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர் திரு.ச.ரவி மற்றும் யாழ்பல்கலைக் கழக இரசாயனவியல் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி .க.வேலாயுதமூர்த்தி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர், கௌரவ விருந்தினர்களாக வேள்ட் விசன் நிறுவன யாழ்மாவட்ட செயற்பாட்டு முகாமையாளர் திரு.ஜெயாட் அன்டனி மற்றும் வேள்ட் விசன் நிறுவன யாழ்மாவட்ட திட்ட முகாமையாளர் திரு.பிரான்சிஸ் அலெக்ஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். மதியம் 2.00 மணியளவில் நிகழ்வுகள் வலக்கம்பறை முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்று Read more

தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின்; மாபெரும் இரத்ததான முகாம்-

dfddTYNCவவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஓமந்தை இணைப்பாளர் திரு.திவாகரன் அவர்களின் ஒழுங்கமைப்பில் மாபெரும் இரத்ததான முகாம் நேற்று (21.03.2015) சனிக்கிழமை காலை 09.00மணி தொடக்கம் 12.30மணிவரை நடைபெற்றது. ஓமந்தை வாழ் இளைஞர்களின் பூரண ஒத்துழைப்பிலும் பொதுமக்கள், பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் பங்களிப்பிலும் வெற்றிகரமாக இவ் இரத்ததான முகாம் நடைபெற்றது. இவ் இரத்ததான நிகழ்விற்கு Read more

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்.பிகள் 26பேர் இன்று பதவிப்பிரமாணம்-

ministers 2015ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நடாளுமன்ற உறுப்பினர்கள் 26 பேர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். 11 அமைச்சரவை அமைச்சர்கள், 5 இராஜங்க அமைச்சர்கள் மற்றும் 10 பிரதி அமைச்சர்களே இன்றை தினம் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். இன்று புதிதாக பதவியேற்ற அமைச்சர்களின் பெயர் விவரங்கள்-

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள்
1. ஏ.எச்.எம்.பௌசி – அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்
2. எஸ்.பி.நாவின்ன – தொழிலாளர் அமைச்சர்
3. பியசேன கமகே – தொழில் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி அமைச்சர்
4. சரத் அமுனுகம – உயர்கல்வி மற்றும் ஆராய்சி அமைச்சர்
5. எஸ்.பி.திசாநாயக்க – கிராமிய விவகார அமைச்சர்
6. ஜனக பண்டார தென்னகோன் – மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்ற அபிவிருத்தி        அமைச்சர்
7. பீலிக்ஸ் பெரேரா – சிறப்புத் திட்ட அமைச்சர்
8. ரெஜினோல்ட் குரே – விமான சேவைகள் அமைச்சர்
9. மஹிந்த யாப்பாய அபேயவர்த்தன – நாடாளுமன்ற விவகார அமைச்சர்
10. விஜித் விஜயமுனி சொய்ஸா – நீர்ப்பாசன அமைச்சர்
11. மஹிந்த அமரவீர – மீன்பிடித்துறை அமைச்சர் Read more

ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளது-ஜனாதிபதி மைத்திரிபால-

presidentவலய நாடுகள் மாத்திரமன்றி, அனைத்து ஐரோப்பிய நாடுகளினதும் ஒத்துழைப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அந்த நாடுகள் புதிய அரசாங்கத்தின்மீது கொண்டுள்ள நம்பிக்கையை, நாட்டு மக்களின் அபிவிருத்திக்காக பயன்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கும் சர்வதேசத்திற்கு இடையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரிவினையை, புதிய அரசாங்கம் நிறைவு செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொலன்னறுவை வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய குருதி மத்திய நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்றையதினம் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு, உலக நாடுகள் சில, கடந்த காலங்களில் ஆதரவுகளை வழங்கி வந்ததாகவும் இந்த நிகழ்வின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நினைவுப்படுத்தியுள்ளார்.

இலங்கை வருவதற்கு திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா ஆர்வம்-

talai lamaஇலங்கைக்கு வருகை தந்து சிறீதலதா மாளிகை மற்றும் மஹா போதி ஆகியவற்றை தரிசிக்க வேண்டும் என்பதே தனது பிரார்த்தனை என, திபெத்திய ஆண்மீகத் தலைவர் தலாய்லாமா தெரிவித்துள்ளார். இந்திய – இலங்கை பௌத்த துறவிகளிடையே டெல்லியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதேவேளை தலாய்லாமாவை பௌத்த யாத்திரீகர் என்ற வகையில் இலங்கைக்குள் அனுமதிக்க வேண்டும் என இலங்கைக்கான அவுஸ்திரேலிய இராஜதந்திரி பந்துல ஜயசேகர குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் இங்கிருக்கும் காலத்தில் அரசியல் பேசக்கூடாது என்ற உறுதியான நிபந்தனையுடனேயே அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு நபருக்கும் அவரது மதத் தலங்களில் வழிபாடு செய்ய முடியும் எனச் சுட்டிக்காட்டிய பந்துல ஜயசேகர, இதன்படி தலாய்லாமாவுக்கும் பௌத்த துறவி என்ற அடிப்படையில் கண்டி மற்றும் அனுராதபுரத்திலுள்ள பௌத்த மதத் தலங்களை வழிபட முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பதவியுயர்வு-

sarath fonsekaமுன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, பீல்ட் மார்ஷல் தரத்துக்கு இன்று 22ஆம் திகதி பதவி உயர்த்தப்படவுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அமைச்சர்கள் மற்றும் முப்படை பிரதானிகள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர். இதன்போது முப்படையினரின் அணிவகுப்பு மரியாதை இடம்பெறவுள்ளதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜெனரல் சரத் பொன்சேகா, பீல்ட் மார்ஷல் தரத்துக்கு பதவியுயர்த்தப்படவுள்ளார். உலகில் இராணுவ அதிகாரி ஒருவரின் மிக உயர்ந்த பதவியாக பீல்ட் மார்ஷல் காணப்படுகின்றது. இந்தியா, பாகிஸ்தான் உட்பட சில நாடுகளில் மாத்திரமே இந்த பதவி காணப்படுவதுடன் இந்த பதவிக்கு தெரிவாகும் முதலாவது இலங்கையர் ஜெனரல் சரத் சரத்பொன்சேகா என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் உருவாக்கப்படும்-அமைச்சர் ராஜித-

rajithaஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அரசாங்கத்துடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதாக அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். களுத்துறையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது வரையும் எதிர்க்கட்சியாக இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று முதற் தடவையாக அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அமைச்சரவையிலும் இணைந்துகொள்ளவுள்ளனர், இதனூடாக தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் 54 பேர் கைது-

indian fishermen arrestஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 54 இந்திய மீனவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பதில் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார். காங்கேசன்துறை மற்றும் தலைமன்னார் ஆகிய கடற்பரப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை கடற்பரப்பில் ஐந்து படகுகளில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 21 மீனவர்களும், தலைமன்னார் கடற்பரப்பில் ஐந்து படகுகளில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 33 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பதில் இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் இன்று கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸாரின் இடமாற்றங்கள் இரத்து-

police ...பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றங்களை இன்றுமுதல் (22.03.2015) அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலாளர், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளடங்கிய குழு தீர்மானங்களை எடுக்கவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.

பஸ் விபத்தில் 20 பேர் காயம்-

accidentஅநுராதபுரம் – தந்திரிமலை பிரதான வீதியில் குப்பிடியாவ பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 20பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தந்திரிமலை நோக்கி யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸ_ம் அநுராதபுரத்திலிருந்து வந்த பஸ்ஸ_ம் நேருக்குநேர் மோதி இந்த விபத்து ஏற்ப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள், ஹெலாபத்துவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அதில் 19பேர் வரை மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வசாவிளான் மற்றும் வளலாய் மீள்குடியேற்றப் பகுதிகளுக்கு விஜயம்-

fffffffffயாழ். வசாவிளான் கிழக்கு ஒட்டகப்புலம் மற்றும் வளலாய் உள்ளிட்ட பகுதிகளின் காணிகளை மக்களின் மீள்குடியேற்றத்திற்கு விடுவதென்று அறிவிக்கப்பட்ட நிலையில் அப்பகுதிகளுக்குச் சென்ற மக்களை இராணுவத்தினர் அங்கு செல்வதற்கு விடவிலலை.. வசாவிளான், வளலாய் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை குடியேற்றுவதற்கான காணிகள் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்தே அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் நேற்றையதினம் அங்கு சென்றிருந்தனர். எனினும் மீள்குடியேற்றக் காணிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில் வசாவிளான் மற்றும் வளாலை பகுதிகளுக்கு நேற்று விஜயம் செய்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட பிரதிநிதிகள் நிலைமைகளைப் பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடியதோடு இப்பிரச்சினையை உடன் மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.