இலங்கை-இந்தியாவுக்கு இடையில் 4 ஒப்பந்தங்கள் கைச்சாத்து-
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 4 ஒப்பந்தங்கள் இன்று கைச்சாத்திடப்பட்டன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழுவினருக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகளை அடுத்தே இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. இராஜதந்திர மற்றும் அதிகாரிகள் பயணிக்கும்போது விசா இன்றி பயணிப்பதற்கான ஒப்பந்தம், சுங்க நடவடிக்கைகளின் போது இருநாடுகளுக்கும் இடையில் உதவி செய்துகொள்வதற்கான ஒப்பந்தம், இளைஞர் முன்னேற்றத்துக்கான ஒப்பந்தம் மற்றும் ரவிநாத் தாகூர் மன்றத்தை ருகுணு பல்கலைக்கழகத்தில் நிறுவுவதற்கான ஒப்பந்தம் ஆகியனவே இன்று கைச்சாத்திடப்பட்டன.
ஜெயக்குமாரி விடுதலை செய்யப்பட்டமைக்கு அமெரிக்கா வரவேற்பு-
தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்ட ஜெயக்குமாரி பாலேந்திரனின் விடுதலையை அமெரிக்கா வரவேற்றுள்ளது. இது தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களப் பேச்சாளர் ஜென் பஸ்கி நேற்று தெரிவித்துள்ளதாவது, தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த ஜெயக்குமாரியும் ஏனைய எட்டுபேரும் இந்த வாரத்தில் விடுதலை செய்யப்பட்டனர். ஜெயக்குமாரியின் வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதை நாம் விளங்கிக் கொண்டுள்ளோம். இலங்கையில் தடுப்பு காவலில் உள்ள ஏனையோரையும் சட்டரீதியில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை நாம் ஊக்குவிக்கின்றோம். மனித உரிமை மற்றும் அடிப்படை சுதந்திரத்தினை அனைத்து இலங்கையர்களும் பெறக்கூடிய வகையில் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்வதை தாம் பாராட்டுகின்றோம் என்று தெரிவித்துள்ளார். புலிகளின் முன்னாள் போராளி என்று கூறப்படும் கோபி என்பவருக்கு புகலிடம் வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜெயக்குமாரி பாலேந்திரன், 10ஆம் திகதி நிபந்தனைகளுடனான பிணையில் விடுவிக்கப்பட்டார். இதேவேளை, ஜெயக்குமாரியுடன் கைதுசெய்யப்பட்ட பத்மாவதி மகாலிங்கம் உள்ளிட்ட இன்னும் 8பேருக்கும், சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்கு அமைவாக கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கப்பட்டது.
விபூசிகாவை விடுவிப்பதில் சிக்கல் உள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவிப்பு-
பிணையில் விடுவிக்கப்பட்ட பாலேந்திரன் ஜெயக்குமாரியை நம்பி, அவரது மகள் விபூசிகாவை சிறுவர் இல்லத்திலிருந்து வெளியில் எடுப்பதால், எதிர்காலத்தில் சிறுமி பாதிக்கப்படலாம் என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக ஜெயக்குமாரி சார்பாக நேற்று நீதிமன்றத்தில் வாதாடிய சட்டத்தரணிகளில் ஒருவர் கூறினார். புலிகளின் முன்னாள் போராளி என்று கூறப்படும் கோபி என்பவருக்கு புகலிடம் வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை (10) பிணையில் விடுவிக்கப்பட்ட ஜெயக்குமாரி, இன்று கிளிநொச்சிக்கு செல்கிறார். இந்நிலையில், அவரது மகள் விபூசிகாவை மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தில் இருந்து விடுவித்து தாயாருடன் இணைப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் சட்டத்தரணிகள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்தர்கள், வியாழக்கிழமை (12) மாலை கூடி ஆராய்ந்தனர். ஜெயக்குமாரி விடுதலையாகவில்லை. பிணையில் மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் மீண்டும் கைது செய்யப்பட முடியும் என்ற நிலையுள்ளது. அவசரப்பட்டு சிறுமியை சிறுவர் இல்லத்திலிருந்து விடுவித்து, அந்தச் சிறுமியை நடுத்தெருவில் விடவேண்டிய நிலையொன்று உருவாகும். இதனால் அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்டு செயற்படவேண்டியுள்ளதாக அந்த சட்டத்தரணி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெற்றோலிய உப மையம் அமைக்க இந்தியா உதவும்-இந்தியப் பிரதமர்-

திருகோணமலையில் பெற்றோலிய உப மையத்தை அமைப்பதற்கான உதவிகளை செய்வதற்கு இந்தியா தயார் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று அதிகாலை இலங்கை வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழுவினருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின்போதே இந்தியப் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதேவேளை ஜனாதிபதி செயலக முன்றலில் இடம்பெற்ற வரவேற்று வைபவத்தைத் தொடர்ந்து மேற்படி சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதேவேளை இன்று அதிகாலையில் இலங்கையை வந்தடைந்த இந்தியப் பிரதமரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வரவேற்றிருந்தார். தொடர்ந்து இந்திய பிரதமருக்கு, காலி முகத்திடலில் வைத்தும் 19 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டிருந்தது. அவருக்கு கடற்படையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து குதிரைப்படை சகிதம் ஜனாதிபதி செயலகத்துக்கு அவர் அழைத்துவரப்பட்டார். அங்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்.
பிரித்தானியா செல்ல முற்பட்ட இளைஞர்கள் கைது-
பிரித்தானியாவுக்கு செல்வதற்கு முற்பட்ட மூன்று தமிழ் இளைஞர்கள் நேற்றையதினம் )12.03.2015) வியாழக்கிழமை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போலியான வீசாவைக் கொண்டு அவர்கள் பிரித்தானியா செல்வதற்கு முற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட மூவரும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
வவுனியாவில் வழங்கப்பட்ட இந்திய வீட்டுத் திட்டத்தில் முறைகேடுகள் இருப்பதாக தெரிவித்தும் யுத்தத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு வீட்டுத் திட்டம் வழங்கக் கோரியும் ஆர்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு மகஜரும் கையளிக்கப்பட்டுள்ளது. நேற்று (11.03.2015)புதன்கிழமை காலை மீள்குடியேறியோர் நலன்பேணும் அமைப்பு மற்றும் வவுனியா பிரஜைகள் குழு ஆகியோரின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மைதானத்தில் ஒன்றுகூடிய வீட்டுத்திட்டம் இன்றி பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தமக்கு வீட்டுத்திட்டம் வழங்கக் கோரியும், வீட்டுத்திட்ட முறைகேடுகள் தொடர்பாக கவனம் செலுத்துமாறு கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து ஏ9 வீதி வழியாக ஊர்வலமாக சென்று மாவட்ட அரசாங்க அதிபர் எம்.கே.பந்துல ஹரிச்சந்திரவிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.
கடந்த 08.03.2015 அன்று வலி மேற்கு பிரதேச சபையில் மிகுந்த எழுச்சியுடன் சர்வதேச மகளிர் தினம். இடம்பெற்றது. குறித்த நிகழ்வானது வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது தலைமையில் காலை 10.00 மணியளவில் வலிமேற்கு பிரதேச சபை கலாசசர மண்பத்தில் வேள்ட் விசன் நிறுவன அனுசரணையுடன் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் விருந்தினர்களாக சங்கானை பிரதேசசெயலக உதவிப் பிரதேசசெயலர் திருமதி. கிருஸ்ணவதனா செந்தூரன், வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி திருமதி. றதினி காந்தநேசன், சங்கானைப் பிரதேச கோட்டக் கல்விப் பணிப்பாளர் செல்வி. சாந்தா மரியாம்பிள்ளை, நல்லூர் பிரதேச சபையின் உப தவிசாளர் திருமதி. கோமதி ரவிதாஸ், சமூகசேவகியும் சமாதான நீதவானுமாகிய திருமதி. சிவசுப்பிரமணியம் புனிதவதி, வலிமேற்கு பிரதேசத்தின் சிரேஸ்ட முன்பள்ளி ஆசிரியர் செல்வி. லீலாவதி மாரிமுத்து, பிரபல சட்டத்தரணியும் நொத்தரிசும் ஆகிய செல்வி. சாருஜா சிவநேசன் ஆகியோர் கலந்து சிறப்பித்துக் கொண்டனர்
சூடுவெந்தபுலவு கிராமத்தில் இந்தியன் வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவு தொடர்பான கூட்டத்தில் பிரதேச செயலாளர், கிராம சேவையாளரை அவதூறாக பேசியமை மற்றும் அரச ஊழியர்களை தாக்க முற்பட்டமை போன்றவற்றினை கண்டித்து , வவுனியா வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலக ஊழியர்கள் அடையாள பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபடுவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.



யாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளார் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்ட மகளிர் எழுச்சி வாரத்தின் ஏழாம் நாள் நிகழ்வான
பாடசாலை மாணவிகளை வலுவூட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் வலி மேற்கு பிரதேச சபை கலாச்சார மண்டபத்தில் நடை பெற்றது. இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் நிகழ்வுகளை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைததது நிகழ்வுகளில் மாணவர்களை ஊக்குவித்தார். பாரம்பரியமான போலம் போடுதல் மற்றும் பூமாலை கட்டுதல் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றன. இவ் நிகழ்வுகளின் போது பாடசாலை மாணவர்களும் கலந்து சிறப்பித்தமை இங்கு குறிப்பிடக்கூடிய ஒன்றாகும்.
கடந்த தேர்தலுக்குப் பின் இலங்கையில் ஜனநாயகம், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் நம்பகத்தன்மையை ஏற்படுத்த வரலாற்று வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளதென ஐ.நா சபை தெரிவித்துள்ளது. சர்வதேசத்தின் ஆதரவுடன் இலங்கை மக்கள் நன்மை அடையக்ககூடிய அளவு சந்தர்ப்பம் தற்போது அமைந்துள்ளதென ஐ.நா செயலாளர் நாயகத்தின் அரசியல் துறை பொறுப்பாளர் ஜெப்ரி பெல்ட்மென் தெரிவித்துள்ளார். ஐ.நா சபை தலைமையகத்தில் இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தனது இலங்கை விஜயம் குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கடந்த வாரமளவில் இலங்கைக்கு விஜயம் செய்த ஜெப்ரி பெல்ட்மென், இலங்கை ஜனாதிபதி, பிரதமர், வெளியுறவு அமைச்சர், தமிழ்க் கூட்டமைப்பு தலைவர்கள் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களையும் சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்திருந்தார். யுத்தக் குற்றம் குறித்து இலங்கையரசு சர்வதேச தரம்வாய்ந்த உள்நாட்டு விசாரணை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இலங்கையில் நல்லிணக்க ஒத்துழைப்பு குறித்து புதிய நம்பிக்கை பிறந்துள்ளதாக ஜெப்ரி பெல்ட்மென் நேற்றைய ஊடக சந்திப்பில கூறியுள்ளார். ஆனாலும் இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலை தொடர்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இராணுவ குறைப்பு, காணி மீள ஒப்படைப்பு போன்ற விடயங்களில் இலங்கையரசுக்கு ஆலோசனை வழங்கியதாக ஜெப்ரி பெல்ட்மென் கூறியுள்ளார். இலங்கையில் வடக்கு பிரச்சினை தீர்வுக்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு ஐ.நா சபை உதவத் தயார் என்றும் அது இலங்கை மக்களுக்கு நன்மையாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்வோம் என்று கூறியதற்கு இலங்கை பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளதாக இந்திய மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறினார். தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கசெல்லும்போது அடிக்கடி இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுகிறார்கள். இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ´எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்ல சட்டம் அனுமதி அளிக்கிறது´ என்று கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு, தமிழக அரசியல் கட்சி தலைவர்களும், மீனவர் அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், டெல்லியில் மக்களவை உறுப்பினர்கள் இந்த பிரச்சினையை நேற்று எழுப்பினர். அப்போது, மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து பேசும்போது, ´´தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும். இரு நாடுகளும் அடுத்தவரது மீனவர்களை சுட்டுக்கொல்வது உரிய தீர்வு அல்ல. கடந்த வாரம் இலங்கை சென்றிருந்த நான், அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தபோது, அவரது கருத்துக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தேன். அவர், தமிழக மீனவர்களையும், கேரளாவில் மீனவர்களை சுட்டுக்கொன்று கைதுசெய்யப்பட்ட இத்தாலி கப்பல் மாலுமிகளையும் ஒப்பிட்டு இருப்பது சரியல்ல என்றும் அவரிடம் கூறினேன். அதற்கு, தான் உண்மை நிலவரம் தெரியாமல் பேசி விட்டதாகவும், அப்படி பேசி இருக்கக்கூடாது என்றும் ரணில் விக்ரமசிங்க என்னிடம் வருத்தம் தெரிவித்தார். மேலும், ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு மாறுவது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். பணம் ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக, சிறப்பு திட்டம் ஒன்றை விரைவில் மத்திய அரசு உருவாக்கும். ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு மாறும்வரை, இந்தப் பிரச்சினை மனிதாபிமானத்துடன் அணுகப்பட வேண்டும்” என்றார்.
மத்திய வங்கி ஒப்பந்த பத்திர மோசடி குறித்து லஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த அமரவீர மற்றும் ஜகத் புஸ்பகுமார ஆகியோர் இணைந்து இந்த முறைப்பாட்டை இன்று செய்துள்ளனர். மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் தனது மருமகனின் நிறுவனத்திற்கு லாபமீட்டும் வகையில் மத்திய வங்கி கடன் தொடர்பில் ஒப்பந்த பத்திரம் கைச்சாத்திட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணை செய்ய ஜனாதிபதியின் பணிப்பின்பேரில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூவர் அடங்கிய விசாரணை குழுவொன்றை அமைத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
தலைமன்னாருக்கான பரீட்சார்த்த தொடரூந்து சேவை இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. மதவாச்சியில் இருந்து மடுவிற்கு வந்த தொடருந்து, அங்கிருந்து தலைமன்னாருக்கு பயணித்துள்ளது. சுமார் 26 வருடங்களுக்கு பின்னர் இவ்வாறு தீவு பகுதிக்கு தொடரூந்து சேவை இடம்பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பித்தக்கது. இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள இந்திய பிரதமர் எதிர்வரும் 14ஆம் திகதி மன்னார் மடுவிற்கான தொடரூந்து சேவையை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்க உள்ளார். அதனை முன்னிட்டே இன்று இவ்வாறு மடுவிற்கான பரீட்சாத்த தொடரூந்து சேவை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மூவர், பொலிஸ் அதிகாரிகள் மூவர், உதவி பொலிஸ் அதிகாரிகள் 21 பேர் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் எழுவர் அடங்களாக 34 பேருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது. சேவைகளின் தேவைகள் என்ற அடிப்படையிலேயே இந்த பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றப்பட்டுள்ளதாகவும் இதற்கு பொதுமக்கள் சமாதானம், கிறிஸ்தவ விவகார மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளரினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தலைமை அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
வவுனியா பண்டாரிகுளத்தில் அமைந்துள்ள ஜீனியஸ் பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா நேற்று (09.03.2015) திங்கட்கிழமை மாலை 02.00 மணியளவில் திருமதி. கலைவாணி மனோகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவசக்தி ஆனந்தன் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தாலும் தவிர்க்க முடியாத சில காரணங்களினால் அவர் சமூகமளிக்க முடியவில்லை. சிறப்பு விருந்தினர்களாக புளொட் முக்கியஸ்தரும். வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகரபிதாவுமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்), உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.கோ.தர்மபாலன் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக
வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் 2015ம் ஆண்டிற்குரிய சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் மகளிர் எழுச்சி வாரத்தின் 6ம்நாள் நிகழ்வுகள் வலி மேற்கு பிரதேச சபையின் கலாச்சர மண்டபத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வானது வலிமேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் தலைமையில் இம்பெற்றது. .இவ் தினத்தினுடைய கருப்பொருளாக பெண்கள் தொடர்பான நோய்களும் உளத்தாக்கங்களும் எனும் தலைப்பில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட சமூதாய மருத்துவத்துறைத் தலைவர் வைததிய கலாநிதி எ.சுரேந்திரகுமார், யாழ் பல்கலைக்கழக மருத்துவத்துறை விரிவுரையாளர் கலாநிதி அ.கண்ணதாசன் வலி மேற்கு பிரதேச பொதுச் சுகாதார பரிசகர்களான கிருபன் மற்றும் தபேசன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
புலிகளின் முன்னாள் போராளி என்று கூறப்படும் கோபி என்பவருக்கு புகலிடம் வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜெயக்குமாரி பாலேந்திரன், இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பிணை வழங்குமாறு கடந்த 6ஆம் திகதியன்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை மார்ச் 10ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் பிணை மனுத் தொடர்பில் சட்டமா அதிபரின் அறிக்கையை எழுத்துமூலம் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அந்த மனு மீதான சட்டமா அதிபரின் அறிக்கை பரிசீலனைக்கு உட்படுத்தியபோதே ஜெயகுமாரியை நீதவான் பிணையில் விடுவித்துள்ளார். பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட அவர், 362 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்பில் இருக்கின்ற இந்த சந்தேக நபருக்கு பிணை வழங்குவது பற்றிய அவரின் கருத்தை எழுத்து வடிவில் சமர்ப்பிக்குமாறு நீதவான், சட்டமா அதிபருக்கு கடந்த 6ஆம் திகதி பணித்திருந்தார். பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் கோபி என்கிற புலிகளின் புலனாய்வுப் பிரிவை சேர்ந்தவருக்கு புகலிடம் கொடுத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினால் ஜெயக்குமாரி கைதுசெய்யப்பட்டார். இந்நிலையில் புலிகள் இயக்கத்திற்கு புத்துயிரளிக்க முயற்சித்தமை மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினால் கைதாகி, தடுத்து வைக்கப்பட்டுள்ள 18 சந்தேகநபர்களில் 8 பேருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கைக்கு வலியுறுத்தவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகளின் ஆண்டு விழா நிகழ்வில் கலந்துகொள்ளும் பொருட்டு பிரிட்டனுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றையதினம் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தாம் இந்த விடயத்தில் ஊக்கப்படுத்தவுள்ளதாக டேவிட் கெமரூன் குறிப்பிட்டுள்ளார். 2013ஆம் ஆண்டு இலங்கை வந்திருந்த போது வடக்கில் தாம் சந்தித்த மக்களின் கஷ்டங்களை மறக்க முடியாத நிலையில் உள்ளதாகவும், அதில் மாற்றம் ஏற்படவேண்டும் என டேவிட் கெமரூன் சுட்டிக்காட்டியுள்ளார். இப் பேச்சுவார்த்தையையடுத்து இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு துறைகள் தொடர்பிலும் பல பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக தெரியவருகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கை மற்றும் திட்டமிடல் குழுவின் தலைவியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், அக்குழுவின் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்கிரமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார் என சுதந்திரக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் எஸ்.எம்.ஆரியசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சீர்த்திருத்தி புதிய திட்டமிடலின் கீழ் செயற்படுத்துவதற்காகவே இந்த கொள்கை மற்றும் திட்டமிடல் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் தேர்தல்களின்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் இக்குழு ஆராயும் என்றும் எஸ்.எம்.ஆரியசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.