ஜனக பண்டார தென்னக்கோன் கைது-

janaka1999ம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் கைது செய்யப்பட்டுள்ளதாக, அவரது மகன் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினராலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பிரமித்த பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, எது எவ்வாறு இருப்பினும் இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரவின் கையொப்பம் இடப்பட்ட ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.1999ம் ஆண்டு டிசம்பர் 14ம் திகதி தம்புள்ளை பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதோடு மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். குறித்த விசாரணைகளுக்காக 2015-10-05 அன்று முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டது. எனினும் அவர் குற்றப்புலனாய்வுப் திணைக்களத்தில் ஆஜராகவில்லை, இந்நிலையில் கொழும்பிலுள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் வைத்து இன்று பிற்பகல் 3.30அளவில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சந்தேகநபர் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.