sangari

மேன்மை தங்கிய மைத்திரிபால சிறிசேன,

ஜனாதிபதி,

கொழும்பு.

அன்புடையீர்,

உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளின் பரிதாப நிலை

சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள நாட்டில் பல்வேறு சிறைகளில் இருக்கும் 250 இற்கும் மேற்பட்ட கைதிகள் சம்பந்தமாக சில உண்மைகளை தங்களுக்கு சமர்ப்பிக்க விரும்புகின்றேன். இப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களில் சிலரின் உடல்நிலை போன்ற பல பல்வேறு காரணங்களால் இம் முயற்சியில் வெற்றியடையாது போகலாம். ஆனால் நிச்சயமாக பெரும் பகுதியினர் தங்களுடைய இலக்கை அடைந்தே தீருவர்கள் என்பதில் சந்தேகமில்லை என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன்.
ஜனாதிபதி அவர்களே! இவர்கள் சார்பில் தங்களுடன் பேச்சு நடாத்த எனக்கு தகுதியில்லாமல் இருக்கலாம். ஆனால் நானொரு மனித நேயம் கொண்ட 82 வயதை பூர்த்தியாகிய மூத்த பிரஜை, 50 ஆண்டுகால முதுமை பெற்ற சட்டத்துறையிலிருந்து ஒதுங்கியிருந்தாலும் சட்டத்தரணியான 17 ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராகவும் 20 ஆண்டுகள் கிடைத்திருந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவம் சிலரின் திட்டமிட்ட சதியால் இழந்து எதுவித குற்றமும் புரியாத இந்த நாட்டின் பிரஜை என்றவகையில் தங்களுடன் கலந்துரையாட இத் தகுதிகள் போதுமானதென கருதுகின்றேன்.

பல ஆண்டுகளாக சிறைக்கைதிகளை அரசியல் கைதிகள் என்றே அரசியல்வாதிகள் கூறிவருகின்றனர். ஆனால் அதை மறுத்துரைத்த நீதியமைச்சர் இவர்கள் குற்றம் புரிந்தவர்கள் என்று வற்புறுத்தி வந்துள்ளார். ஏந்தக் குற்றத்திற்கும் ஒரு குறிப்பிட்ட கால சிறைத்தண்டனை வகுக்கப்பட்டிருக்கும் (தண்டப்பணம் நீங்கலாக) ஆனால் எக்குற்றத்திற்கும் 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிறைத்தண்டனை இருப்பதாக நாம் அறியவில்லை. ஆகவே 20 ஆண்டுகளுக்கு மேல் இவர்கள் சிறையில் இருந்திருப்பார்கள் என்றால் இவர்கள் கூடுதலான அதிக தண்டனையை அனுபவித்துவிட்டார்கள் என்றாகும்.
ஜனாதிபதி அவர்களே! நான் தங்களுடன் வாதாட வரவில்லை. இந்த துர்ப்பாக்கியவான்களுடைய சார்பில் இவர்களுக்கு கருணை காட்டுங்கள் என்றே மன்றாட்டமாக கேட்கின்றேன். அண்மையில் ஓர் பிராமண பெண்மணி குற்றமற்றவர் என நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. அப்படியானால் இதுவரை காலமும் அப்பெண்மணி அனுபவித்து வந்த சிறைத்தண்டனை நியாயமற்றதென கருத இடமுண்டு. பிராமணர்கள் எமது முன்னிலையில் உணவருந்தமாட்டார்கள் இதுபோன்ற இன்னும்பல சம்பிரதாயங்களால் கட்டுப்பட்டுள்ளவர்கள். என்னால் வழங்கப்படும் பின்வரும் ஆலோசனைக்கமைய இப்பிரச்சினைக்கு தீர்வு காண தாமதமின்றி செயற்படுவீர்கள் என நானும் எமது மக்களும் நன்றியுடையவர்களாக இருப்போம்.

01. அரசு சிறைகூடங்களில் உள்ள வசதிகள் நிறைந்த 250 பேரை அடைத்து வைக்கக்கூடிய ஒரு கட்டிடத்தை தெரிவு செய்யுங்கள்.
02. எல்லா கைதிகளையும் இந்த கட்டிடத்துக்கு மாற்றுங்கள். அவர்கள் எதுவித புரட்சியும், ஆர்ப்பாட்டமும் செய்ய மாட்டார்கள்.
03. இளைப்பாறிய, கடமையில் உள்ள சில ஆண், பெண் நீதிபதிகளை சேர்த்து சில குழுக்களை தயாரியுங்கள்.
04. இக்குழுக்கள் விசாரணை நடாத்தி தமது தீர்ப்பை கூறட்டும்.
05. பிரச்சனைக்குரிய நபர்களையும் சிறப்பாக விசாரித்து ஏற்கனவே சிறைவாசம் அனுபவிப்பதால் அதற்குரிய முறையில் கவனம் செலுத்தி விடுதலைக்கு சிபாரிசு செய்ய பணிக்கலாம்.

கடந்த காலத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் போராளிகள் சம்பந்தப்பட்ட விடயங்கள் உட்பட தாங்கள் வகிக்கும் பதவியை அதற்கு முன்பிருந்தோர் எவ்வாறு பிரயோசனப்படுத்தினர் என்பத நான் கூறத் தேவையில்லை. எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சில சந்தர்ப்பங்களிலும் மரண தண்டனையையே மன்னிப்புடன் கூடிய ஆயுள் தண்டனையாக மாற்றும் அதிகாரம் கொண்ட உங்களுக்கு இதற்கு மேல் நான் எவ்வாறான ஆலோசனைகளை வழங்க முடியும்.

நன்றி

தங்கள் உண்மையுள்ள

வீ. ஆனந்தசங்கரி,

செயலாளர் நாயகம்- த.வி.கூ