ஏமனில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் ஏடன் மாகாண கவர்னரும், அவரது மெய்க்காவலர்கள் 6 பேரும் உயிரிழந்தனர்.

Yemenஏமன் நாட்டின், ஏடன் மாகாணத்தின் கவர்னர் ஜாபர் முகமதுசாத், தனது அலுவலகத்துக்கு காரில் சென்று கொண்டிருந்த போது, வெடிகுண்டுகள் நிரப்பிய காரை தற்கொலைப்படை தீவிரவாதி, கவர்னரின் பாதுகாப்பு வாகனம் மீது மோதியுள்ளனர். இதில் பலத்த சத்தத்துடன் குண்டுகள் வெடித்தன. இதில் அந்தப் பகுதியே அதிர்ந்தது. இந்த குண்டுவெடிப்பில் சிக்கி கவர்னர் ஜாபர் முகமது சாத்தும், அவரது மெய்க்காவலர்கள் 6 பேரும் உடல் சிதறி உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
ராணுவ ஜெனரலாக பணியாற்றிய ஜாபர் முகமது சாத் கடந்த அக்டோபர் மாதம் தான் அவர் கவர்னர் ஆனார். உயிரிழந்த கவர்னர் ஜாபர் முகமது சாத், ஏமன் அதிபர் மன்சூர் ஹாதியின் நெருங்கிய கூட்டாளி ஆவார்.ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அதிபர் மன்சூர் ஹாதி, சவுதி அரேபியாவுக்கு ஓட்டம் பிடித்தவர், கடந்த மாதம்தான் நாடு திரும்பினார். ஏடனின் அவர் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் கவர்னரும், அவரது மெய்க்காவலர்களும் கொல்லப்பட்டிருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்று உள்ளது. 
அரபு நாடான ஏமன் நாட்டில்,  ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இவர்கள் தலைநகர் சனா உள்பட நாட்டின் முக்கிய நகரங்கள் பலவற்றையும் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வைத்துள்ளனர். ஏடன் மாகாணமும், அவர்கள் வசம்தான் இருந்து வந்தது. பின்னர் அதிபர் ஆதரவு படைகளுடன் சவுதி அரேபியா தலைமையில் அரபு கூட்டுப்படைகள் இணைந்து தாக்குதல் நடத்தி ஏடனை மீட்டது என்பது குறிப்பிடத்தக்கது.