Header image alt text

வீட்டுத் திட்டங்களை மீள் பரிசீலணை செய்யுமாறு இரா.சம்பந்தன் வலியுறுத்தல்-

sdsdsdsயாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் 65 ஆயிரம் வீட்டுத் திட்டங்களை மீள் பரிசீலணை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதிக்கு வலியுறுத்தி வருவதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பொது நிகழ்வுகளிலும் கலந்து கொண்டதன் பின்னர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். இதன்போது அவர் கூறியதாவது, யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டு வரும் 65 ஆயிரம் பொருத்து வீடுகள் எமது மக்களுக்க பொருத்தமாக இருக்குமென நினைக்கவில்லை. எமது மக்களின் பரம்பரையான நடவடிக்கைகளில் மாற்றத்தினைக் கொண்டு வருவதனை விரும்பவில்லை. அது மக்களின் கலாச்சாரத்துடன் பிண்ணிப் பிணைந்த விடயம். ஜனாதிபதி பிரேமதாஸவின் காலத்தில் பல வீடுகள் கட்டப்பட்டன. ஆனால், பொருத்து வீடுகள் கட்டப்படவில்லை, ஏன் யாழ்ப்பாணத்தில் பொருத்து வீடுகள் கட்டப்பட வேண்டும். ஒரு சாதாரண வீடு கட்டுவதை விட இரண்டு மடங்கு பணம் செலவிடப்பட வேண்டியுள்ளது. அமைச்சரவை கூட்டத்தின் போது, குறித்த 65 ஆயிரம் வீடுகள் குறித்து பரிசீலிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் என ஊடகங்களில் செய்திகளை பார்த்தோம். எமது கருத்துக்களை ஜனாதிபதிக்கு முன்வைத்து அந்த 65ஆயிரம் வீட்டுத் திட்டம் குறித்த மீள் பரிசீலணைக்குட்படுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.

ஜீ7 நாடுகளின் மாநாட்டில் விசேட விருந்தினராக ஜனாதிபதி பங்கேற்பு-

maithriஜப்பானில் நடைபெறவுள்ள ஜீ7 நாடுகளின் மாநாட்டின் விசேட விருந்தினராக கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன அடுத்த மாதம் ஜப்பான் செல்லவுள்ளார். ஜப்பானிய பிரதமர், சின்சோ அபேயின் அழைப்பின் பேரில் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 அங்கத்துவ நாடுகளும் இதில் பங்கேற்கின்றன. அதன் 47 வது வருடாந்த மாநாடு, எதிர்வரும் மே மாதம் 26ம் மற்றும் 27ம் திகதிகளில் ஜப்பானில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதில் கலந்து கொள்கின்ற நிலையில் அவர்களையும் சந்திப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

நிலக்கரி மின் நிலையத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்-

ertrtrtttதிருகோணமலை, மூதூர் கிழக்கு சம்பூரில் அமைய உள்ள நிலக்கரி மின் நிலையத் திட்டம் வேண்டாம் எனக் கோரி சம்பூர் மீள் குடியேற்ற கிராம மக்கள் இன்று காலை சம்பூர் அரசடி விநாயகர் கோயிலுக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக மட்ட பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புக்கள், மீனவர் சங்க பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிய மகஜர் ஒன்றை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கு.நாகேஸ்வரனிடம் கையளித்து அவருடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வடக்கில் வெடிகுண்டுகளை நீக்க அமெரிக்கா பயிற்சி-

minesஇலங்கை கடற்படையின் நீச்சல் குழுவினரும் ஐக்கிய அமெரிக்க கடற்படையின் வெடிபொருட்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை செயலிழக்கச் செய்யும் மொபைல் பிரிவும் இணைந்து பயிற்சி நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளது. கடற்படை நீச்சல்குழுவின் 22 பேர் இலங்கையை பிரிதிநிதித்துவப்படுத்தி இதில் பங்கேற்றுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. யுத்த காலத்தில் குளங்கள் மற்றும் ஏரி பகுதிகளில் விடுதலைப் புலிகளால் கைவிடப்பட்டு சென்று இதுவரை வெடிக்காதிருக்கும் குண்டுகள் மற்றும் ஏனைய யுத்த உபகரணங்களை நீக்குவதற்காக விஷேட பயிற்சியை வழங்குவது இப்பயிற்சியின் நோக்கமாகும். 10 நாட்கள் இடம்பெறும் இப்பயிற்சி வேலைத் திட்டத்திற்கு கொள்கை மற்றும் நடைமுறை செயற்பாடுகள் பல உள்ளடங்குவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களிடமிருந்து 146 விண்ணப்பங்கள்-

swissஇலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களிடமிருந்து 146 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான சுவிஸர்லாந்தின் அரச செயலகம் குறிப்பிட்டுள்ளது. கடந்த மூன்று மாதத்தில் மாத்திரமே இந்த விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக சுவிஸர்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 8315 புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் இதுவரையில் கிடைத்துள்ள புகலிடக் கோரிகை விண்ணப்பங்களில் 45 வீதத்தால் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான சுவிஸர்லாந்தின் அரச செயலகம் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

களுவாஞ்சிக்குடியில் கிராம உத்தியோகத்தர் கொலை-

murderமட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, சிவபுரம் பகுதியில் கிராம உத்தியோகத்தர் ஒருவர் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சிவபுரம் பகுதியிலிருந்து மற்றுமொருவருடன் மோட்டர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது பின்தொடர்ந்து வந்து இருவரால் கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த கிராம உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதுடன், அவருடன் மோட்டார் சைக்கிளில் பின்புறமாக அமர்ந்து பயணித்த மற்றைய நபர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒத்தாச்சி மடம் கிராம உத்தியோகத்தரே சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தை நேரில் கண்ட சிலரின் சாட்சியத்தின் அடிப்படையில் 22 மற்றும் 24 வயதான சிவபுரம் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சந்தேகநபர்களை களுவாஞ்சிக்குடி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

வவுனியா கோவில்குளம் றொக்கற் விளையாட்டுக் கழக புதுவருட விளையாட்டு விழா-(படங்கள் இணைப்பு)

IMG_5942வவுனியா கோவில்குளம் றொக்கற் விளையாட்டுக் கழகத்தின் 40 வருட பூர்த்தியையும், தமிழ் சிங்கள புது வருடப்பிறப்பை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட விளையாட்டு விழா கோவில்குளம் இந்துக்கல்லூரி மைதானத்தில் 14.04.2016 அன்று கழகத்தின் தலைவர் திரு க.பார்த்தீபன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா நகர சபையின் முன்னாள் நகர பிதாவும், வட மாகாண சபை உறுப்பினருமான திரு ஜி.ரி.லிங்கநாதன் அவர்களுடன், சிறப்பு அதிதிகளாக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் பொருளாளர் திரு கே.தனபாலசிங்கம், சமூக சேவையாளர் திரு சி.சரவணமுத்து ஆகியோருடன் கௌரவ அதிதிகளாக ஓய்வு பெற்ற அதிபரும், கோவில்குளம் சிவில் பாதுகாப்பு குழுவின் தலைவருமான திரு சி.வையாபுரிநாதன், கோவில்குளம் இந்துக் கல்லூரி பழையமாணவர் சங்கத் தலைவர் திரு எஸ்.ஜொயெல் நிரோசன், சமூக ஆர்வலர் திரு ர.சிவசுப்பிரமணியம், கழகத்தின் முன்னாள் தலைவர்களான திரு நீ.பாலசுப்பிரமணியம், திரு செ.தவச்செல்வன் ஆகியோருடன் பெருந்திரளான மக்களுடன், சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள் என பெருந்திரளானோர் கலந்து நிகழ்வுகளை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. Read more

வவுனியா யுரேனஸ் இளைஞர் கழக புதுவருட விளையாட்டு விழா-(படங்கள் இணைப்பு)-

IMG_5832வவுனியா சமளங்குளம் யுரேனஸ் இளைஞர் கழகத்தின், தமிழ் சிங்கள புது வருடப்பிறப்பை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட விளையாட்டு விழா கழகத்தின் மைதானத்தில் கடந்த 13.04.2016 அன்று கழகத்தின் தலைவர் திரு க. சிம்சுபன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), மற்றும் சிறப்பு அதிதிகளாக தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர், கௌரவ உறுப்பினர்கள், கழகத்தின் கௌரவ உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன், சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள் என பெருந்திரளானோர் கலந்து நிகழ்வுகளை சிறப்பித்திருந்தனர். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளுடன், மாணவர்களை மகிழ்விக்கும் குதூகல விளையாட்டுகளும், மைதான நிகழ்வுகள் என பல நிகழ்வுகளும் ஒழுங்கமைக்கப்பட்டு முதன் முறையாக வவுனியா சமளங்குளத்தில் நடைபெற்றமை விசேட அம்சமாகும்.
Read more

வட்டு. இந்து வாலிபர் சங்கத்தினால் கிணறு அமைக்க சீமெந்து பைகள் அன்பளிப்பு-

D1புதுக்குடியிருப்பு உடையர்கட்டு தெற்கு மூங்கிலாற்றைச் சேர்ந்த கதிர்ச்செல்வன் கருணாநதி என்பவருக்கு கிணறு அமைப்பதற்காக இராண்டம் கட்டமாக 23520 ரூபா பெறுமதியான 28 சீமெந்து பைகள் வழங்கப்பட்டுள்ளன. யுத்தத்தின் காரணமாக தனது கணவனை இழந்து பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் இவர் கிணறு இன்றி பல சிரமங்களை எதிர்நோக்கி வந்த வேளையில் எமது சங்கத்திடம் கிணறு கட்டுவதற்கான பொருட்களை தந்துதவுமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க முதற் கட்டமாக 2015.12.07 அன்று 12 சீமெந்து பைகளும் இன்று தலா 840 ரூபா பெறுமதியான 28 சீமெந்து பைகளும் (23520ரூபா) வழங்கப்பட்டுள்ளன. இதற்கான நிதி அன்பளிப்பினை எமது புலம்பெயர் உறவுகளான ஆவுஸ்ரோலியாவைச் சேர்ந்த முரளிதரன் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த கனகனேந்திரன் ஆகியோர் வழங்கியுள்ளனர். எமது தாயக உறவுகளின் துயர் குறைப்பதற்காக எமது சங்கத்தின் ஊடாக உதவியினை வழங்கிய எமது புலம்பெயர் உறவுகளுக்கு சங்கத்தின் சார்பிலும் எமது உறவுகள் சார்பிலும் மனமார்ந்த நன்றிகள். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)

திருமதி. மங்கையகரசி அமிர்தலிங்கம் அவர்கட்கு சுழிபுரத்தில் அஞ்சலி-(படங்கள் இணைப்பு)

DSCN0280அண்மையில் இயற்கை எய்திய திருமதி. மங்கையக்கரசி அமிர்தலிங்கம் அவர்கட்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சுழிபுரம் பகுதியில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) சார்பில் தோழர் சின்னக்குமார் தலைமையில் இடம்பெற்றது.

இவ் நிகழ்வில் பலரும் கலந்து கொண்டு அமரர் அவர்களது திரு உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர். Read more

கணணித் தொகுதிகள் அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)

P1110931வலி மேற்கு சுழிபுரம் பகுதியில் தழிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) முழுமையான அனுசரணையுடன் இயங்கி வருகின்ற இலவச கல்வி மையத்திற்கு தழிழீழ விடுதலைக் கழகத்தின் ஜேர்மன் கிளையினர் மூன்று கணணித் தொகுதிகளை குறித்த அவ் அமைப்பின் உறுப்பினர் தோழர் சாமியார் (சபாரட்ணம். ஜெயகுமார்-ஜேர்மனி) குறித்த கல்வி நிலையத்தில் கற்பிக்கும் திரு.க.சண்முகநாதன்(இளைப்பாறிய மாவட்ட பதிவாளர்) மற்றும் தழிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முன்னாள் உறுப்பினர் தோழர்.சின்னகுமார் அவர்களிம் கையளித்தார். அண்மையில் குறித்த கல்வி நிறுவனத்திற்கு விஜயம் மேற்கொண்ட தழிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களிடம் குறித்த கல்வி நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் குறித்த இலவச நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி அபிவிருத்தியின் பொருட்டு இவ் கணணிகள் வழங்கி வைக்கப்பட்டன.
Read more

ஜப்பானில் அடுத்தடுத்து இரண்டு கடும் நிலநடுக்கங்கள்

japanஜப்பானின் குவாமோட்டோ நகருக்கு அருகே இரண்டு மிகக்கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
இதே பகுதியில் ஒரு நாள் முன்னரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

மிகவும் சக்தி வாய்ந்த 7.1 மற்றும் 7.4 அளவு கொண்ட இரண்டு நிலநடுக்கங்கள் அங்கு அடுத்தடுத்து ஏற்பட்டுள்ளன.தொடர்ச்சியான அதிர்வுகளும் உணரப்பட்டுள்ளன.

இதையடுத்து விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை பின்னர் விலக்கிக்கொள்ளப்பட்டது. ஒரு மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பக் கூடும் எனவும் முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.
கியூஷூ தீவின் கடற்கரைப் பகுதிகளில் உள்ளவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டனர்.

கடல் நீரில் கடுமையான சுழற்சி இருக்கும் எனவும் ஜப்பானிய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
பல இடங்களில் இடிபாடுகளில் மக்கள் சிக்கியுள்ளனர் என்றும் அவர்களை மீட்குமாறு கோரி தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வருவதாக ஜப்பானின் தேசிய ஒலிபரப்பு நிறுவனம் கூறுகிறது.

இப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ள பகுதிகளில் நேற்று ஏற்பட்ட அதிர்வுகளில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

விஜய் மல்லையாவின் கடவுச் சீட்டு முடக்கம்

vijay mallyaஇந்தியத் தொழிலதிபரும் நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான விஜய் மல்லையாவின் ராஜதந்திர கடவுச் சீட்டை முடக்குவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கிங்ஃபிஷர் நிறுவன உரிமையாளர் விஜய் மல்லையாவின் கடவுச் சீட்டு உடனடியாக நான்கு வாரங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அமலாக்கப் பிரிவின் ஆலோசனைக்கேற்ப அவரது ராஜதந்திர கடவுச் சீட்டை முடக்கும் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது எனவும் வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் ஊடகங்களுக்கு கூறினார்.

முடக்கப்பட்டுள்ள கடவுச் சீட்டை ஏன் கைப்பற்றக் கூடாது அல்லது ரத்து செய்யக் கூடாது என்பது தொடர்பில் அவரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது என்றும் ஒரு வாரத்துக்குள் அவரது பதில் கிடைக்கவில்லையென்றால், வெளியுறவு அமைச்சகம் அவரது கடவுச் சீட்டை ரத்துசெய்யும் நடவடிக்கையை எடுக்கும் எனவும் அதன் பேச்சாளர் கூறியுள்ளார்.

இந்தியாவின் பல வங்கிகளிடமிருந்து சுமார் 9,000 கோடி ரூபாயைக் கடனாக வாங்கியுள்ள மல்லைய்யாவுக்குச் சொந்தமான கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ், அந்தக் கடன்களை இதுவரை அடைக்கவில்லை. எனவே அந்தக் கடன்களை வசூல்செய்யும் நடவடிக்கையில் இறங்கிய வங்கிகள் அவர் மீது நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

இடைக்கால நடவடிக்கையாக அவர் சுமார் 4,000 கோடி ரூபாய்களை கட்ட முன்வந்ததை, வங்கிகள் நிராகரித்தன.

இந்தியா, மியான்மரில் தாக்குதல் நடத்த ஐஎஸ் திட்டம்

afghan_isisவங்கதேசத்தில் நன்றாக நிலைகொண்ட பிறகு இந்தியாவிலும் மியான்மரிலும் பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்த இஸ்லாமிய அரசு என்று கூறிக்கொள்ளும் குழு திட்டமிட்டுள்ளதாக அந்த அமைப்பின் வங்கதேச பிரிவின் தலைவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
 
இந்தியாவில் பெரும் தாக்குதலை நடத்துவோம் என ஐஎஸ் அமைப்பின் தலைவர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். அந்த அமைப்பின் பத்திரிகையான தபீக்கிற்கு அளித்த பேட்டியிலேயே இந்தத் தகவலை வங்கதேசப் பிரிவின் தலைவரான ஷாயிக் அபு – இப்ராஹிம் அல் – ஹனீஃப் தெரிவித்திருக்கிறார். Read more

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் வாழ்வாதாரத்துக்கான நிதி அன்பளிப்பு(படங்கள் இணைப்பு)

vadu hindu04வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் இன்று வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஊடாக கிளிநொச்சி  மாவட்டம் குமிழமுனை முழங்காவில் எனும் இடத்தை சேர்ந்த யுத்தத்தினால் பாதிக்கபட்ட சுயானாவுக்கு வாழ்வாதார நிதியாக 76500 ரூபா வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தில் வைத்து கையளிக்கபட்டது.

சுயானா கடந்த கால யுத்தத்தின் போது தனது இரு கால்களையும் ஒரு கையும் ஒரு கண்னையும் எறிகனை வீச்சின்போது இழந்துள்ளார். இரு பிள்ளைகளின் தாயானா இவர் கணவரால் கைவிடப்பட்டு தனது பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து வருகின்றார். Read more

இலங்கையில் மனித உரிமைகள் குறித்து அமெரிக்கா கவலை

gfdfஇலங்கையில் சில முன்னேற்றங்கள் இருந்தாலும், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சில கவலைகள் உள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக அறிக்கை கூறுகிறது.

அங்கு தொடர்ந்தும் சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் துன்புறுத்தப்படுகிறார்கள் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் எனக் கருதப்படுபவர்களும் துன்புறுத்தல்களை ஏதிர்கொள்ள நேரிடுகிறது எனவும்.
காரணங்கள் இன்றி ஆட்கள் தடுத்துவைக்கப்படுவது, பாலியல் பலாத்காரம், பாலியல் சார்ந்த வன்முறைகள் ஆகியவையும் இலங்கையில் கடந்த ஆண்டு இடம்பெற்றுள்ளன எனவும்.
சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் சரியான வழிமுறைகள் பின்பற்றப்படாத காரணத்தால், அங்கு நெரிசல் மிகுந்து காணப்படுவதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

உள்நாட்டில் இடம்பெயர்ந்த நிலையில் வாழ்பவர்களின் மனித உரிமைகள் புறந்தள்ளப்படுவது பிரச்சினைக்குரிய ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது எனக் கூறும் அந்த அறிக்கை, பெண்கள் மற்றும் சிறார்கள் மீதான பாலியல் வன்முறையும் கவலையளிக்கின்றன.
தொழிலாளர் உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள், சிறார் தொழிலாளர் ஆகிய பிரச்சினைகளும் அங்கு உள்ளன என அமெரிக்க அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் ஆண்டறிக்கை கூறுகிறது.

கடத்தப்பட்ட ‘சிபொக் பள்ளிச் சிறுமிகளின்’ புதிய காணொளி வெளியானது

chibok_girls_nigeriaநைஜீரியாவின் சிபொக் நகரிலிருந்து பெரும் எண்ணிக்கையான பள்ளிச் சிறுமிகள் கடத்திச்செல்லப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில், அந்தச் சிறுமிகளில் சிலரை காண்பிப்பதாகத் தோன்றும் காணொளிப் பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.

சிஎன்என் தொலைக்காட்சிக்கு கிடைத்துள்ள இந்தக் காணொளிப் பதிவில், முழுநீள இஸ்லாமிய உடையில் 15 சிறுமிகள் தங்களின் பெயர்களைக் கூறுகின்றனர்.
இந்தக் காணொளிப் பதிவை ஆராய்ந்துவருவதாகக் கூறியுள்ள நைஜீரிய அதிகாரிகள், ஆனாலும் அது உண்மையானது என்று நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

போக்கோ ஹராம் ஆயுதக்குழுவால் கடத்திச்செல்லப்பட்ட 200க்கும் அதிகமான பள்ளிச்சிறுமிகள் இன்னும் காணாமல்போன நிலையில் தான் உள்ளனர்.
இந்தப் புதிய காணொளி, தங்களின் பிள்ளைகள் இன்னும் உயிருடன் தான் இருக்கின்றார்கள் என்ற புதிய நம்பிக்கையை அவர்களின் பெற்றோருக்கு கொடுத்துள்ளது.

பிள்ளைகள் கடத்தப்பட்ட இரண்டாண்டு நிறைவை குறிப்பதற்காக, தலைநகர் அபுஜாவில் சில பெற்றோர்கள் இன்று பேரணி ஒன்றை நடத்துகின்றனர்.
போக்கோ ஹராமின் கட்டுப்பாட்டில் இருந்த கிராமங்களையும் நகரங்களையும் நைஜீரிய இராணுவத்தினர் மீளக் கைப்பற்றியுள்ளனர்.

அவர்களின் பிடியில் இருந்த நூற்றுக் கணக்கான பணயக் கைதிகளும் படையினரால் மீட்கப்பட்டிருந்தனர். ஆனால், சிபொக் சிறுமிகள் யாரும் இதுவரை மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

வடமாகாண சபையின் அரசியலமைப்பு யோசனைகள் மீதான விவாதம் ஒத்திவைப்பு

northern_provincial_council1புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக வடமாகாண சபையினால் கடந்தவாரம் முன்வைக்கப்பட்ட யோசனைகள் மீதான விவாதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபையினால் கடந்த வாரம் சமர்பிக்கப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்த வடமாகாண சபையின் யோசனைகள் முழுமை பெறாத காரணத்தினால் அதன் மீதான விவாதத்தை ஒத்தி வைப்பதாக அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் 49 வது விஷேட அமர்வு நேற்று காலை கைதடியில் உள்ள வடமாகாண சபை கட்டிடத்தில் ஆரம்பமானது.

தமிழ் மக்களுக்காக வடமாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வு மற்றும் அரசியல் யாப்புக்கான கொள்கை வரைவுத்திட்டம் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரனினால் கடந்த வியாழக்கிழமை வடமாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான வடமாகாண சபையின் யோசனைகள் மீதான விவாதம் எதிர்வரும் 22ம் திகதி இடம்பெறும் என்றும், அதன் பின்னர் எதிர்வரும் 30ம் திகதி அந்த யோசனைகள் அடங்கிய பிரதி எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான ஆர். சம்பந்தனிடம் கையளிக்கப்படும் என்று அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

சாவகச்சேரி தற்கொலை அங்கி மீட்பு சம்பவம்; வெளிநாட்டில் உள்ள இருவருக்கு பொலிஸ் வலை
 
rererffசாவகச்சேரி பிரதேசத்தில் அண்மையில் தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் இருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும்.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரின் கைத்தொலைபேசியை பரிசோதனைக்கு உட்படுத்திய போது குறித்த வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் இருவருடனும் தொடர்பு பேணப்பட்டிருந்தமை தெரிய வந்துள்ளது.

அதன்படி இவர்களுக்கிடையில் நேரடி தொடர்பு இருப்பதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

24 மணித்தியாலத்தில் 215 சாரதிகள் கைது

policeகுடிபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் 24 மணித்தியாலத்திற்குள் 215 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்.

கைது செய்யப்பட்டவர்களுள் அதிகமானவர்கள் மோட்டார் சைக்கிள் சாரதிகள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

அதன்படி மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் 119 பேர் நேற்றைய தினம் மாத்திரம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதவிர முச்சக்கர வண்டி சாரதிகள் 66 பேர், லொறி சாரதிகள் 07 பேர், கார் சாரதிகள் 09 பேர் மற்றும் வேன் சாரதிகள் 04 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

புத்தாண்டு காலத்தில் குடிபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் விசேட நடவடிக்கைளை கடந்த 10ம் திகதி பொலிஸார் ஆரம்பித்தனர்.