Header image alt text

வீரமக்கள் தின மூன்றாம் நாள் நிகழ்வுகள்-

IMG_3175தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) வருடந்தோறும் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினம் கடந்த 13ம்திகதி முதல் நாளை 16ம் திகதி வரையான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம்திகதி முதல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம்திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பு பிரகடனப்படுத்தி வருடாந்தம் அனுஷ்டித்து வருகின்றது. வீரமக்கள் தினத்தின் 03ம் நாளான இன்றும் வவுனியா கோவில்குளம், புளொட் செயலதிபர் உமாமகேஸ்வரன் இல்லத்தில் மௌன அஞ்சலியும், மலராஞ்சலியும் செலுத்தப்பட்டது. வீரமக்கள் தின இறுதிநாளான நாளை செயலதிபர் உமாமகேஸ்வரன் இல்ல வளாகத்தில் மலராஞ்சலி மற்றும் மௌனஅஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன், அஞ்சலிக் கூட்டமும் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு-

missingகாணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகின்றது. ஜனாதிபதியுடன் நேற்று மாலை இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர், ஆவணங்களை தயாரிப்பதற்காக சிறிது காலம் ஆணைக்குழுவின் அலுவலகத்தை நடத்திச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். காணாமற்போனோர் தொடர்பிலான சாட்சி விசாரணைகளின் பின்னர், ஆணைக்குழு தமது இறுதி அறிக்கையை தயாரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காணாமற்போனோர் தொடர்பில் சுமார் 19,000 முறைப்பாடுகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளன. அவற்றுள் சுமார் 4000 முறைப்பாடுகள் போலியானவை என்பதால், நன்கு ஆராய்ந்த பின்னர் அந்த முறைப்பாடுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் கூறியுள்ளார்.

முன்னாள் போராளிகள் மருத்துவ பரிசோதனைக்கு அழைப்பு-

medical check upபுலிகள் இயக்கத்தில் போராளிகளாக இருந்து புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள், தங்களது வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு, ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ‘அண்மைக் காலமாக, புனர்வாழ்வு பெற்றுவந்த போராளிகள், மரணத்தை தழுவி வருகின்றனர். இது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் போராளிகளுக்கு வைத்திய பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் பலமடைந்து வருகின்றது. இவற்றை கருத்திற்கொண்டு, முன்னாள் பேராளிகளுக்கு வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே, வடக்கு – கிழக்கு உட்பட நாட்டின் எப்பகுதியில் இருக்கும் முன்னாள் பேராளிகளும், 0777735081, 0773169997 ஆகிய அலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு, இலவச வைத்திய பரிசொதனைக்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்’ என்று அவர் அறிவித்தல் விடுத்துள்ளார்.

ரஷ்யாவின் முன்னாள் தூதுவருக்கு பிடியாணை-

uthayanka weeratungaரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் இன்று கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்னவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பிடிவிறாந்தை இன்டர்போல் (சர்வதேச) பொலிஸாரின் ஊடாக பிறப்பிக்குமாறும் கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்னவிடம் கோரப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில், இலங்கை விமானப்படைக்கு மிக்விமானங்களை கொள்வனவு செய்யும்போது இடம்பெற்றதாகக் கூறப்படும், சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனினும், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமையை அடுத்தே, நிதிமோசடி விசாரணைப்பிரிவு மேற்கண்டவாறு கோரியுள்ளது. இந்த கோரிக்கையை, ஆராய்ந்து பார்த்து எதிர்வரும் 18ஆம் திகதியன்று கட்டளைப்பிறப்பிப்பதாக நீதவான் அறிவித்துள்ளார்.

யாழில் ஜே.வி.பி.யினர் துண்டுப்பிரசுர விநியோகம்-

jvp (2)‘மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அசாதாரண வரிச்சுமைக்கு எதிராகப் போராடுவோம்’ என்ற தலைப்பிடப்பட்ட துண்டுப் பிரசுரங்கள், இன்று யாழ். நகரப் பகுதிகளில், மக்கள் விடுதலை முன்னணியினரால் (ஜே.வி.பி) வநியோகிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள, ஜே.வி.பி கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க, இந்தத் துண்டுப் பிரசுர விநியோகத்தில் ஈடுபட்டிருந்தார். ‘மஹிந்த அரசைப் போன்று மைத்திரி – விக்கிரமசிங்க கூட்டரசும், வற் சுமையை மக்கள் மீது திணிக்கிறது’ எனக் குறிப்பிடப்பட்ட இந்தத் துண்டுப் பிரசுரங்களில், ‘மோசடி வற்’, ‘மக்களுக்கு வேண்டாம், மோசடிகாரர்களிடம் இருந்து பணத்தை அறவிடு’, ‘வயிற்றுப் பிழைப்புக்காக அறவிடும் வரியை உடனடியாக இரத்துச் செய்’, ‘அரசாங்கத்தின் வீண் விரயச் செலவுகளை நிறுத்து’, ‘மக்கள்மீது சுமத்தப்படும் வரியை உடனடியாக நீக்கு’ போன்ற வாசகங்கள், குறித்த துண்டுபிரசுரத்தில் பொறிக்கபட்டிருந்தன.

கொத்தணிக் குண்டுகளை படையினர் பயன்படுத்த இல்லை-அமைச்சர் சரத் பொன்சேகா-

fonsekaபோரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்படமாட்டர் என்றும் போரின்போது படையினர் ஒருபோதும் கொத்தணிக் குண்டுகளைப் பயன்படுத்தவில்லை எனவும் அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். “இந்த விசாரணைகள் அனைத்தும் உள்ளுர் சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே இடம்பெறும். வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணைகளில் உள்ளடக்குவதற்கு, நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சட்டங்கள் இடமளிக்கவில்லை. இந்த விசாரணைகள் அனைத்துலக கவனத்தைப் பெற்றிருக்கும் நிலையில் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட வேண்டும். இதனால், வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனையை இந்த விசாரணைகளுக்குப் பெற்றுக் கொள்ளலாம் என்று ஜனாதிபதியும், பிரதமரும், கருதுகின்றனர். இந்த விசாரணைகளுக்கு வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளைப் பெறுவதற்கு, முன்னைய அரசாங்கம் கூட முடிவு செய்திருந்தது. அதேவேளை, போரின்போது படையினர் ஒருபோதும் கொத்தணிக் குண்டுகளைப் பயன்படுத்தவில்லை. இராணுவத்தின் அனுமதி மற்றும் கோரிக்கையின் பேரில் மட்டும் தான், விமானப்படை இத்தகைய குண்டுகளைப் பயன்படுத்தும். ஆனால் இராணுவம் கொத்தணிக் குண்டுகளைப் பயன்படுத்துமாறு விமானப்படையிடம் கோரிக்கை விடுக்கவில்லை. அதைவிட, கொத்தணிக் குண்டுகளைப் பயன்படுத்துவதற்கு சில சிறப்பான வசதிகள் தேவைப்படும். விமானப்படையிடம் அத்தகைய வசதிகள் இல்லை” என கூறியுள்ளார்.

மாணவன் மரணம் குறித்து மனித உரிமைக்குழுவில் முறைப்பாடு-

complaintயாழ்ப்பாணம் அராலி பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் சடலமாக மீட்க்கப்பட்ட மாணவனது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து மாணவனது உறவினர்களால் யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. 
கடந்த மே 24ஆம் திகதி அராலி கிழக்கு வாலையம்மன் கோவிலடியை சேர்ந்த 16 வயதுடைய ஜெயகாந்தன் டிஷாந்தன் எனும் மாணவன் அராலி தெற்கு மாவத்தை பகுதியில் உள்ள குடிநீர் கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இது தொடர்பாக விசாரனைகளை மேற்கொண்டிருந்த வட்டுக்கோட்டை பொலிஸார், மாணவனது குடும்பத்திற்கும் பிறிதொரு குடும்பத்திற்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்கம் காரணமாக மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்திருந்தனர். எனினும் மாணவன் தற்கொலை செய்து கொள்ளவில்லையெனவும், அவரது மரணத்தில் சந்தேகம் காணப்படுவதாக உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பாக யாழ் மாவட்ட மனிதவுரிமை ஆணையாளர் கருத்து தெரிவிக்கையில், உறவினர்களால் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தை விசாரணை செய்த வட்டுக்கோட்டை பொலிஸாரிடமிருந்து விசாரனை அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதுடன் சட்ட வைத்திய அதிகாரியிடமும், சம்பவம் தொடர்பான பரிசோதனை அறிக்கையை கோரியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற நீதிமன்ற விடயம் இலங்கையே தீர்மானிக்கவேண்டும்.அமெரிக்கா-

Tom-Malinowski-300x200 (1)போர்க்குற்றங்கள் தொடர்பான சிறப்பு நீதிமன்றத்தின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்தை தீர்மானிப்பது, இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்த விடயம் என்று, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள், மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி தெரிவித்துள்ளார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் நிஷா பிஸ்வாலுடன் இணைந்து இலங்கைக்கு மேற்கொண்ட பயணத்தின் முடிவில் நேற்றிரவு கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். போர்க்குற்றங்கள் தொடர்பான சிறப்பு நீதிமன்றத்தில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கும் விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த ரொம் மாலினோவ்ஸ்கி, “ஜெனிவா தீர்மானம் இலங்கையின் இறைமையை முழுமையாக மதிக்கிறது. சிறப்பு நீதிமன்றத்தின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்தை தீர்மானிப்பது, இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்த விடயம். தமது இறைமைக்குட்பட்ட வரையறைக்குள் இருந்து கொண்டே, பல்வேறு மட்டங்களில் அனைத்துலக பங்களிப்பைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று இலங்கை வாக்குறுதியைக் கொடுத்திருக்கிறது. Read more

பிரான்ஸின் நீஸ் நகர தாக்குதலில் 84 பேர் உயிரிழப்பு-(படங்கள் இணைப்பு)

asdsபிரான்ஸின் தென்பகுதி நகரான நீஸ் நகரில், பாஸ்டில் தினக் கொண்டாட்டங்களின் போது குழுமியிருந்த கூட்டத்தினரின் மீது லாரி ஒன்று தாறுமாறாக மோதித் தாக்குதல் நடத்தியதில் குழந்தைகள் உட்பட குறைந்தது 84 பேர் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பெர்னார்ட் கூறியுள்ளார். மேலும், 18 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர். பிரெஞ்சு அதிபர் பிரான்சுவா ஒல்லாந்து இந்தத் தாக்குதலை “பயங்கரவாதத் தாக்குதல்” என வர்ணித்துள்ளார். “ப்ரோமனேட் தேஸாங்கிலே” என்றழைக்கப்படும் நிகழ்வில் வாண வேடிக்கைகளுக்குப் பின்னர் இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. பிரான்ஸின் தேசிய தினமான பாஸ்டில் தினத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. லாரியின் டிரைவர் சுமார் 2 கிமீ தூரம் பெரும் கூட்டத்துக்குள் லாரியை ஓட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more