தொண்டைமானாறு தடுப்பணை புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பம்-

thondamanaruயாழ். தொண்டைமானாறு தடுப்பணையின் புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. உலக வங்கியின் 399 மில்லியன் ரூபா நிதியில் நிறைவேறவுள்ள இந்தப் புனரமைப்பு வேலைகளை சம்பிரதாயபூர்வமாக வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று (27.07.2016) தொடங்கி வைத்துள்ளார். தொண்டைமானாறு உவர் நீரேரியில் மழைநீரைச் சேமிக்கும் நோக்கிலும், கடல்நீர் ஏரிக்குள் வராமல் தடுக்கும் நோக்கிலும் ஏற்கனவே தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மடைக்கதவுகள் உருக்கினால் ஆனவை என்பதால் துருப்பிடித்து பழுதடைந்து காணப்படுகின்றன. தற்போது 300 மில்லியன் ரூபா செலவில் துருப்பிடிக்காத கறையில் உருக்கினாலான மடைக்கதவுகளைக் கொண்டதாகத் தடுப்பணை புனரமைக்கப்படவுள்ளது. தொண்டைமானாறு ஏரியில், தடுப்பணையின் மடைக்கதவுகளை மூடி மழைநீரைச் சேகரிக்கும்போது தாழ்வான வயல்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து கொள்கிறது. இதனைத் தடுக்கும் நோக்குடன் இரு இடங்களில் வெள்ளத்தடுப்பணைகளும் கட்டப்படவுள்ளன. சீமெந்துக் கட்டுமானப் பணிகள் மற்றும் வெள்ளத் தடுப்பணைகளுக்கென 99 மில்லியன் ரூபா செலவிடப்பட உள்ளது. வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இப்புனரமைப்பு வேலைகள் யாவும் 2வருடங்களில் முடிவடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறீதரன், ஈ.சரவணபவன் ஆகியோரும், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் க.சிவாஜிலிங்கம், க.தர்மலிங்கம், சி.அகிலதாஸ், மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் வே.பிறேமகுமார், பிரதி பணிப்பாளர் ந.சுதாகரன், பிரதிப் பிரதம செயலாளர் சோ.சண்முகானந்தன் ஆகியோருடன் திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாத யாத்திரைக்கு இடைக்காலத் தடை-

courtsஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நாளை பாத யாத்திரை மேற்கொள்ளவிருந்த நிலையில், இதற்கு இடைக்காலத் தடை விதித்து கண்டி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மஹிந்தானந்த அளுத்கமகே, திலும் அமுணுகம, கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் லோஹான் ரத்வத்த உள்ளிட்டவர்களுக்கே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், நாளை காலை கண்டியில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ள, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஊக்குவிப்பு வேலைத் திட்டத்தையும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் வைத்துக் கொள்ளுமாறு, லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் கபீர் கசீம் ஆகியோருக்கு நீதிமன்றம் தெரியப்படுத்தியுள்ளது. கண்டி தலைமையக பொலிஸ் பரிசோதகரின் கோரிக்கையை கருத்தில் கொண்டே இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, பாத யாத்திரை செல்வோர் மாவனெல்லை நகரைத் தவிர்த்து தமது நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, மாவனெல்ல நீதவான் என்.கே.மஹிந்த இன்று உத்தரவிட்டுள்ளார். மாவனெல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தா வண்ணம் மாற்று வீதிகளைப் பயன்படுத்தி தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதவான் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

சமுதாயம் திருந்த தண்டனைகள் அதிகரிக்கப்பட வேண்டும்-நீதிபதி இளஞ்செழியன்-

ilancheliyanசமுதாயத்தில் நடைபெற்றுவரும் குற்றச்செயல்கள் குறைவடைந்து, குறுகிய காலத்தில் சமுதாயம் திருந்த வேண்டுமாயின் தண்டனைகள் அதிகரிக்கப்பட வேண்டும் இவ்வாறு யாழ். நீதிபதி எம்.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். தற்போது மாணவர்கள் மீதான குற்றச்செயல்கள் குறித்து, சட்டரீதியான நீதிக்கொள்கை விடயங்களை அதிபர்களுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடலொன்று, நேற்று யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே நீதிபதி இளஞ்செழியன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் நடைபெறும் துஷ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புடைய ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதால், சம்பந்தப்பட்டவர்களின் நடத்தையில் மாற்றம் ஒருபொழுதும் ஏற்படாதென்றும், சமுதாயத்தை திருத்துவதற்கு தண்டனை ஒன்றே சிறந்த வழி என்றும் நீதிபதி இளஞ்செழியன் மேலும் குறிப்பிட்டுள்ளார். குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையானது, ஏனையோருக்கு குற்றச்செயல்கள் தொடர்பில் சிந்திப்பதற்கு கூட கால அவகாசம் வழங்காத வகையில் அமையவேண்டுமென அவர் மேலும் கூறியுள்ளார். ஒழுக்கங்களை கற்றுத்தரும் பாடசாலைகளில், மாணவர்கள் மீது இடம்பெறும் துஷ்பிரயோக சம்பவங்கள் குறித்து வேதனை தெரிவித்த நீதிபதி இளஞ்செழியன், பாடசாலையில் நடைபெறும் குற்றச்செயல்கள் குறித்து பொலிஸ் நிலையத்திற்கு உடனடியாக அறிவிக்கப்பட்டு, அதுகுறித்த விசாரணைகள் கிரமமான நடைபெற வேண்டுமென இதன்போது அதிபர்களை வலியுறுத்தியுள்ளார். மேலும் செய்திகளை வாசிக்க…. Read more