வித்தியாவின் கொலை வழக்குடன் தொடர்புடைய குற்றவாளிகள் ஏழு பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதையடுத்து, மரண தண்டனைக் கைதிகளின் எணணிக்கை அதிகரித்துள்ளது.
வித்தியா கொலை வழக்குடன் தொடர்புடை ஏழு குற்றவாளிகள் அடங்கலாக, இலங்கையில் 1159 மரண தண்டனைக் கைதிகள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மஹர, வெலிக்கட, குருவிட்ட, பதுளை, களுத்துறை மற்றும் தும்பர சிறைச்சாலைகளில் மரண தண்டனைக் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மேன்முறையீடு செய்து அதன் மூலமும் தண்டனை உறுதி செய்யப்பட்ட 333 கைதிகள் அடங்குகின்றனர். மேன்முறையீடு நிலுவையிலுள்ள 826 மரண தண்டனைக் கைதிகள் உள்ளனர். மரண தண்டனைக் கைதிகளில் 38 பெண் கைதிகளும் அடங்குகின்றனர். இவர்களில் மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட 5 கைதிகளும், மேன்முறையீடு செய்த 33 கைதிகளும் உள்ளனர்.
ஐக்கிய இராச்சியத்தின் பிரதிநிதியாக இலங்கையை ஆட்சி செய்த, ஆளுநர் சேர் ப்ரட்ரிக், 1802 இல் தூக்கு தண்டனையை இலங்கையில் அறிமுகப்படுத்தினார். அதே ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதி முதலாவது தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அறிய முடிகின்றது. பிரதமர் S.W.R.D. பண்டாரநாயக்கவினால் 1956 இல் மரண தண்டனை நீக்கப்பட்டாலும், அவர் கொலை செய்யப்பட்டதையடுத்து,
1959 இல் மரண தண்டனை மீண்டும் கொண்டுவரப்பட்டது. எனினும், தற்போது இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் இறுதியாக 1976ஆம் ஆண்டில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டதுடன், இறுதியாக தூக்கிலிடப்பட்டவரின் பெயர் சந்திரதாச என அறிய முடிகிறது.