மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு பகுதி மீனவர்களின் தோணிகள் இனந்தெரியாதவர்களினால் எரியூட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (23) மகிழடித்தீவு ஆற்றுப்பகுதியில் தரித்து நிற்கவைக்கப்பட்டிருந்த மூன்று மீனவர்களின் தோணிகளே இவ்வாறு எரியூட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முனைக்காடு வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த இராமக்குட்டி சிவஞானம், சீனிதம்பி சிவகுமார், சிவலிங்கம் சீனிதம்பி ஆகியோரின் மீன்பிடி தோணிகளே இவ்வாறு தீக்கரையாக்கப்பட்டுள்ளது.
தோணிகள் முற்றாக சேதமடைந்துள்ளன. இது தொடர்பில் தோணி உரிமையாளர்களினால் கொக்கட்டிச் சோலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் கொக்கட்டிச் சோலை பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறித்த பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினரும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.