இலங்கையில் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் வேறு நடவடிக்கைகள் குறித்து ஆராய வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹூஸைன் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் பேரவையின் 37 வது அமர்வு எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டு மார்ச் மாதம் 23 ஆம் திகதி வரையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இலங்கை தொடர்பான கருத்துக்களை முன்வைத்து உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மனித உரிமைகள் பேரவையின் வழிமுறைகளை நடைமுறைப்படுத்த, இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் காரியாலயத்துடன் இணைந்து செயற்பட்டமை தொடர்பில் தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், சில நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது நடைமுறைப்படுத்திய வியூகங்கள் போதுமானதாக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
அத்துடன் இதற்கு போதுமான அரசியல் ஆதரவு கிடைக்கப்பட இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.