ஈரானிலிருந்து இலங்கை பெற்றுக்கொள்ளும் எரிபொருட்களுக்குப் பதிலாக, இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலையை பண்டமாற்று ரீதியில் ஏற்றுமதி செய்வது தொடர்பில், அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பான யோசனையை, இலங்கைத் தேயிலைச் சபை முன்வைத்துள்ளது. ஈரானின் அணுசக்தி வேலைத்திட்டங்களுக்கு எதிராக, ஐக்கிய நாடுகளால் விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் காரணமாக, அந்நாட்டுடன் நிதிக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலையின் பெரும்பகுதியை, மத்திய கிழக்கு நாடுகளே இறக்குமதி செய்து வருகின்றன. இவ்வாறானதொரு நிலையில், ஈரான், இலங்கைத் தேயிலைக்கு, அதிக விலையைச் செலுத்துவதாக, இலங்கைத் தேயிலைச் சபையின் ஆணையாளர் ஜே.கே.எதிரிசிங்க தெரிவித்தார்.

இதனால், இலங்கை இறக்குமதி செய்யும் எரிபொருள் பெறுமதிக்கேற்ப, இலங்கைத் தேயிலையை ஈரானுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பில், அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இது, இன்னும் யோசனையாகவே மாத்திரம் உள்ள நிலையில், அந்த யோசனையை, இலங்கை மத்திய வங்கிக்கு அனுப்பி, அனுமதி கோரப்பட்டுள்ளதாக, இலங்கைத் தேயிலைச் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.