யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஸ்ரீ துர்க்கா சனசமூக நிலையத்தால் நடாத்தப்பட்ட ஸ்ரீ துர்க்கா முன்பள்ளி மழலைகளின் விளையாட்டு விழா நிகழ்வு (29.07.2018) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00மணியளவில் நிலைய முன்றலில் நடைபெற்றது.

ஸ்ரீ துர்க்கா சனசமூக நிலையத்தின் தலைவர் திரு. இராசரத்தினம் விஸ்ணுறஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். சிறப்பு விருந்தினர்களாக ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகரும் ஓவியக்கலைஞருமான திரு. செல்லத்துரை வரதராஜன், கிராம அலுவலர் திருபரநிரூபசிங்கம் பிரதீபன், புன்னாலைக்கட்டுவன் இந்து தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் திரு. த.ஸ்ரீமுரளி ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக கிராமப் பற்றாளர் (கனடா) திரு. திருமதி இரத்தினசிங்கம் பகீரதன் நந்தா, ஈவினை கற்பக விநாயகர் ஆலய செயலாளர் திரு. ஐயாத்துரை நித்தியானந்தம் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். ஆரம்ப நிகழ்வாக ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று விருந்தினர்கள் கௌரவித்து விழா அரங்கிற்கு அழைத்துவரப்பட்டனர்.

தொடர்ந்து இறைவணக்கம், மங்கல விளக்கேற்றல், கொடியேற்றல், ஒலிம்பிக் தீபமேற்றல், சத்தியப்பிரமாணம் என்பன இடம்பெற்று ஆசியுரையினை சிவஸ்ரீ ச.குகானந்த சர்மா குருக்கள் வழங்கினார். தொடர்ந்து சிறார்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது தலைமையுரை, சிறப்பு விருந்தினர் உரை, பிரதம விருந்தினர் உரைகளும் இடம்பெற்று தொடர்ந்து பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன. ஸ்ரீ துர்க்கா சனசமூக நிலைய செயலாளர் திரு. இ.கெங்காதரன் அவர்கள் நன்றியுரையினை வழங்க நிகழ்வுகள் இனிதே நிறைவுபெற்றன.

குறிப்பு:

புன்னாலைக்கட்டுவன் வடக்கு கிராம அபிவிருத்தி சங்கத் தலைவரும், புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஸ்ரீதுர்க்கா சனசமூக நிலைய செயலாளரும், சமூக ஆர்வலருமான இரத்தினசிங்கம் கெங்காதரன் அவர்களின் ஒழுங்கமைப்பின்கீழ் நடைபெற்ற இந்நிகழ்வின்போது,

க.பொ.த உயர்தர பரீட்சையில் வர்த்தகப் பிரிவில் விசேட சித்திபெற்று (3A) யாழ். மாவட்டத்தில் நான்காமிடத்தைப் பெற்ற புன்னாலைக்கட்டுவன் வடக்கைச் சேர்ந்த சின்னராஜா பானுசா என்ற மாணவிக்கு கனடாவில் வசிக்கும் சுந்தரலிங்கம் துவாரகா மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் கருணாகரன் சாம்பவி ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் ரூபா 65,000 பெறுமதியான மடிக்கனணி வழங்கிவைக்கப்பட்டது.

அத்துடன் விபத்து ஒன்றின்போது இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட ஈவினை கிழக்கைச் சேர்ந்த அருமைத்துரை சதீஸ் என்பவருக்கு ரூபா 35,000 பெறுமதியான மூன்று சக்கரம் கொண்ட சைக்கிள் இரத்தினசிங்கம் கெங்காதரன் அவர்களின் நிதியுதவியில் பிரதம விருந்தினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் கையளிக்கப்பட்டது.

மேலும் க.பொ.த உயர்தரத்தில் திறமைச் சிறத்திபெற்ற புனாலைக்கட்டுவன் திடற்புலத்தைச் சேர்ந்த ஆனந்தராசா பிரவீனன் என்ற மாணவனுக்கு கற்றல் செயற்பாட்டுக்கான மாத உதவியாக 5,000 ரூபாய் திரு. இ.கெங்காதரன் அவர்களின் ஏற்பாட்டின்கீழ் வழங்கிவைக்கப்பட்டது. இவ்வுதவி சுவிஸ் நாட்டில் இயங்கிவரும் புன்னாலைக்கட்டுவன் உதவும் கரங்கள் அமைப்பினால் வழங்கப்பட்டதோடு, ஒவ்வொரு மாதமும் அந்த மாணவனுக்கு இவ்வுதவியை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் புன்னாலைக்கட்டுவன் வடக்கைச் சேர்ந்த வறுமைக்கோட்டின்கீழ் வாழும் 06ம் ஆண்டில் கல்விபயிலும் அச்சுதன் அபிசன் என்ற மாணவருக்கு ஸ்ரீதுர்க்கா சனசமூக நிலையத்தின் சார்பில் திரு. கெங்காதரன் அவர்களால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது. தொடர்ந்தும் அவருக்கு கற்றல் செயற்பாட்டிற்கான உதவிகளை வழங்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வின் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கான பரிசுப் பொருட்கள் கனடாவைச் சேர்ந்த இரத்தினசிங்கம் பகீரதன், பகீரதன் நந்தா தம்பதிகளின் நிதிப்பங்களிப்பில் வழங்கப்பட்டது.

அத்துடன் ஈவினை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அலுவலக உபயோகத்திற்கென திரு. இ.கெங்காதரன் அவர்களின் நிதியுதவியின்கீழ் வழங்கப்பட்ட நாற்காலிகள் அப் பாடசாலையின் பழைய மாணவரும் நிகழ்வின் சிறப்பு விருந்தினருமான செல்லத்துரை வரதராஜன் அவர்களால் நிகழ்வின் கௌரவ விருந்தினரான ஐயாத்துரை நித்தியானந்தன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.