கொழும்பில் உள்ள பல ஹோட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசேட பிரிவு ஒன்றை அமைத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

புறக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கையொப்பதுடன் கடந்த இரண்டாம் திகதி கொழும்பில் உள்ள ஹோட்டல்கள் சிலவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தன. மீண்டும் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் போன்று மற்றுமொரு தாக்குதல் நடத்தப்படலாம் ஆகவே ஹோட்டல்களுக்கு வருகைதருவோர் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புலனாய்வு பிரிவின் உறுதிப்படுத்தல் இன்றி குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனவே, குறித்த கடிதம் தொடர்பிலும், கடிதத்தை அனுப்பியவர் தொடர்பிலும், ஏதேனும் இடையூறு விளைவிக்கும் நோக்கில் கடிதம் அனுப்பட்டதா என்பது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.