தேர்தல் தொடர்பான பெனர்கள், கட்டவுட்களை காட்சிபடுத்துதல் மற்றும் தனியாகவோ, வாகனங்கள் மூலமாகவோ பேரணியில் ஈடுபடுவது இன்று முதல் தடைசெய்யப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அருகாமையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வது தொடர்பான சட்டத்தின் விதிகளுக்கமைய இன்று முதல் பெனர்கள், கட்டவுட்களை காட்சிபடுத்துதல் மற்றும் தனியாகவோ, வாகனங்கள் மூலமாகவோ பேரணியில் ஈடுபடுவது தடைசெய்யப்படுவதாக அவர் கூறினார். மேலும் சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து ஒளிப்பதிவு செய்யப்பட்டு அதனை பரிசீலித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். அதேபோல் இன்று வாகன போக்குவரத்து கடமையை முன்னெடுக்க 500 க்கும் மேற்பட்ட பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஸ்ரீ ஜயவர்தன கோட்டை வீதியின் வெலிக்கடை சந்தியில் இருந்து ஆயூர்வேத சுற்றுவட்டம் வரையிலும் ஒரு மார்கத்தில் மாத்திரம் கொழும்பு நோக்கி பயணிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் கொழும்பில் இருந்து வெளிச்செல்லும் வாகனங்களுக்கு தடை விதித்துள்ளதாகவும், பழைய கொட்டாவ வீதி, வெலிக்கடை சந்தியல் இருந்து ஆயூர்வேத சுற்றுவட்டம் வரையான வீதியின் ஒரு மருங்கில் மாத்திரம் கொழும்புக்குள் வாகனங்கள் உட்பிரவேசிக்க முடியும் எனவும், உள்நுழைய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வீதிகள் வேட்பாளர்களுடன் வருகைதரும் ஆதரவாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு பணிகளுக்காக 1200 க்கும் அதிகமான பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் கூறியுள்ளார்.