ஜனவரி 20 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் வௌிநாட்டுப் பயணம் மேற்கொள்ள முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு கோட்டை நீதவான் திலின கமகே இன்று அனுமதி வழங்கினார். இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் வௌிநாடு செல்ல சட்டமா அதிபர் அனுமதி வழங்கியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றுக்கு தெரியப்படுத்தியது.

மஹிந்த ராஜபக்ஸ, நாமல் ராஜபக்ஸ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 17 பேருக்கு கடந்த மே 12 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் வௌிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு மே 9 ஆம் திகதி அலரி மாளிகையில் ஒன்றுகூடிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட தரப்பினர் காலி முகத்திடலில் ஒன்றுகூடியிருந்த போராட்டக்காரர்கள் மீது  மிலேச்சத்தனமான முறையில் தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பிலேயே இந்த தடை பிறப்பிக்கப்பட்டிருந்தது.