இன்று (27) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பாராளுமன்ற கூட்டத்தொடரை முடிவுறுத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.  அதற்கமைய,  அது தொடர்பான வர்த்தமானி அச்சீட்டு பணிகளுக்காக அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது. பெப்ரவரி 8 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகும் என ஜனாதிபதி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவுக்கு கொண்டுவரப்படும் நிலையில், சபாநாயகர் தொடர்ந்தும் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டங்களில் கலந்துகொள்ளாது தமது பதவிகளை வகிப்பர்.

பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவுக்கு கொண்டுவரப்படுவதால், பாராளுமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்படுவதுடன், குற்றப்பிரேரணையைத் தவிர, சபையில் இடம்பெறும் அனைத்து நடவடிக்கைகளும் இரத்து செய்யப்படும்.

பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகும் வேளையில், நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ள சபை அமர்வின் நடவடிக்கைகளை தொடர்வதற்கு தேவையேற்படின், அவை மீண்டும் பட்டியலிடப்பட வேண்டும்.

பாராளுமன்றத்தின் நிலையியல் கட்டளைக்கு அமைய, உயர் அதிகாரிகள் தொடர்பான செயற்குழு, துறைசார் கண்காணிப்புக் குழுக்கள் ,பாராளுமன்றத்தின் சிறப்புக் குழுக்கள் தவிர்ந்த ஏனைய அனைத்தும் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகும் போது மீளவும் ஸ்தாபிக்கப்படல் வேண்டும்.

இதற்கிணங்க, பாராளுமன்ற விவகாரங்கள், நிலையியல் கட்டளைகள், உள்நாட்டலுவல்கள், நெறிமுறைகள், சிறப்புரிமைகள், சட்டமியற்றும் நிலைப்பாடு, அமைச்சுகளின் ஆலோசகர், அரசாங்கக் கணக்குகள்,
பொது முயற்சியாண்மை, பின்வரிசை உறுப்பினர்களுக்கான செயற்குழுக்கள் என்பனவும் மீண்டும் ஸ்தாபிக்கப்படல் வேண்டும்.