யாழ்ப்பாணத்தை அடைந்தது முதல் தபால் ரயில்-
24 வருடங்களுக்கு பின்னர் முதலாவது தபால் ரயில் இன்றுகாலை 7.25 மணிக்கு யாழ்.புகையிரத நிலையத்தை அடைந்தது. முதலாவது தபால் ரயிலை வரவேற்கும் விதத்தில் வரவேற்பு நிகழ்வு மற்றும் தபால் ஊர்வலம் என்பவற்றை யாழ்.பிரதம தபால் நிலையத்தினர் நடத்தியிருந்தனர். கொழும்பிலிருந்து தபால் ரயிலில் வந்த தபால் பொதிகளை பொறுப்பேற்ற இலங்கை தபால்மா அதிபர் ரோஹண அபேவர்த்தன, அவற்றை தபால் பொதி சுமப்பவரிடம் கையளித்தார். இதனையடுத்து, பாரம்பரிய தபால் காவும் முறையான, வண்டிலில் தபால் கொண்டு செல்லும் முறையில் தபால் பொதி சுமப்பவர் யாழ்.புகையிரத நிலையத்தில் இருந்து தபால் பொதிகளை யாழ்.பிரதம தபால் நிலையத்திற்கு கொண்டு சென்றார். இனிவரும் காலங்களில் பாரம்பரிய முறையன்றி, வாகனத்திலேயே தபால் நிலையம் வரை தபால்கள் கொண்டுசெல்லப்படும் என தபால் மா அதிபர் ரோஹண அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
இராமர் பாலத்தைப் பாதிக்காத வகையில் கடல் வழிப் பாதை-
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான புதிய கடல்வழிப் பாதையொன்றை அமைப்பது தொடர்பில் இந்தியா கவனம் செலுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்பரப்பில் மேற்கொள்ளப்படவிருந்த சேது சமுத்திரத் திட்டம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளமையே இதற்கு காரணமாகும். இதற்கமைய இராமர் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய கடல் வழிப் பாதையை அமைப்பதற்கு இந்தியா உத்தேசித்துள்ளது. இத்திட்டம் தொடர்பான பத்திரம் விரைவில் இந்திய மத்திய அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.
வாக்காளர் இடாப்பில் பெயர்களை இணைக்க 80ஆயிரம் மேன்முறையீடு-
2014ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளடக்கப்படாத சுமார் 80,000 பேரிடம் இருந்து மேன்முறையீடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. தற்போது மேன்முறையீடுகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். இந்த விசாரணைகளில் பங்கேற்காதவர்களின் மேன்முறையீடுகள் தொடர்பில் கருத்திற் கொள்ளப்போவதில்லை எனவும் தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டுகின்றது. எவருக்கேனும் விசாரணைகளில் பங்கேற்க முடியாத பட்சத்தில், முன் அறிவிப்பின் ஊடாக திகதியை மாற்றிக்கொள்ள அல்லது கடிதம்மூலம் அதிகாரத்தை வழங்கி ஒருவரை விசாரணைகளில் கலந்துகொள்ளச் செய்யமுடியும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2014ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியல் எதிர்வரும் 31ஆம் திகதி உறுதி செய்யப்படவுள்ளதுடன், அதனை கிராம உத்திகேத்தர் அலுவலகம், பிரதேச செயலர் அலுவலகம், உள்ளூராட்சி மன்றங்களில் காட்சிப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆசு கவி சிவசுப்பிரமணியம் அவர்களது வழித்துணை கவிதை நூல் வெளியீடு-




கடந்த 12.10.2014 அன்று மூளாய் ஊரைச் சேர்ந்த ஆசு கவி சிவசுப்பிரமணியம் அவர்களது வழித்துணை கவிதை நூல் வெளியீடு சுழிபுரம் விக்டோறியாக் கல்லூரி றிச்வே மண்டபத்தில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.பு.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் கலந்துகொண்டு வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் வாழ்த்துச் செய்தி வழங்கினார். அவர் அங்கு உரையாற்றுகையில், ஆசு கவி அவர்கள் அவர்களது தொடர்ச்சியான கவி இயற்றும் தன்மையினால் ஆசு கவி எனப் போற்றப்படுகின்றார். நான் அறிந்த காலம்முதலாக அமைதியான சுபாவம் தழிழிலும் சைவத்திலும் தளராத பற்றுக் கொண்ட ஒரு பற்றாளனாகவே கண்டு கொண்டேன். இவற்றுக்கும் அப்பால் ஒரு மனிதத்துவத்தின் மகத்துவத்தை பிறருக்கு எடுத்துக்காட்டுவதற்காக வாழ்ந்து வரும் ஓருவராகவே அடையாளப்படுத்த முடியும். மூளாய் வதிரன் புலோ சித்திவிநாயகர்மீது கொண்ட மட்டற்ற ஈடுபாட்டினால் அவ் ஆலய முன்றலில் சிறிது சிறிதாக எழூதப்பட்ட கவிகளின் தொகுப்பாக ஒரு தழிழ் வழிகாட்டியாக எமது இவ் உலக வாழ்கையின் தத்துவங்களை செல்கின்ற ஒரு ஏடாக எமது வரலாற்றை எடுத்து இயம்பும் ஒரு நூலாக இது வெளிவருவது வரவேற்த்தக்கது போற்றத் தக்கது. இவ்வாறான நூல் காலத்தின் தேவைக்குரிய ஒரு நூலாக கருதுகின்றேன். Read more
வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்போர் வட மாகாணத்துக்கு செல்லவேண்டுமாயின் அதற்கு பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அனுமதியை பெறவேண்டும் என இராணுவப்பேச்சாளரும் அமைச்சின் ஊடகமைய பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய இன்று தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் யாழ். விஜயத்தையொட்டி வெளிநாட்டவர்கள், வெளிநாட்டு கடவுச்சீட்டை கொண்டிருப்பவர்கள் வடபகுதி செல்லத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதில் எந்தவித உண்மைகளும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற நீண்ட கால யுத்தம் நிறைவுக்கு வந்தையடுத்து தற்போது வடக்கு பகுதியில் சுமூகமான நிலை ஏற்பட்டு வருகின்றது. வடக்கில் மட்டுமல்ல நாட்டின் பல பிரதேசங்களிலும் அபிவிருத்தி நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் மட்டுமன்றி வெளிநாட்டு நிறுவனங்கள். உலகலாவிய அமைப்புகள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் பல்வேறு உதவிகளை மேற்கொண்டிருந்தன. இனங்களுக்கிடையில், மதங்களுக்கிடையில் மீண்டும் பிரச்சினையை தோற்றுவிபதற்கு இடங்கொடுப்பதற்கான எந்தவொரு அவசியமும் எமக்கு இல்லை.
ஒளிமயமான நாளை என்ற தேசிய சபையினால் தயாரிக்கப்பட்ட 19வது அரசியலமைப்பு சீர்த்திருத்தம் நேற்று மக்கள் விமர்சனத்திற்காக வெளியிடப்பட்டது. இதன்போது, உரையாற்றிய அதன் இணைப்பாளர் அத்துரலியே ரத்தன தேரர், யாப்பு சீர்த்திருத்தப்படாமல் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவது ஏற்புடையதல்லவென குறிப்பிட்டுள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, அமைச்சர்களான, தினேஷ் குணவர்த்தன, வாசுவேத நாணயக்கார, திஸ்ஸ வித்தாரன, பாட்டளி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இது தவிர, எதிர்கட்சிகள் சார்பில், ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான கரு ஜயசூரிய, விஜேதாச ராஜபக்ச, சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை மட்டுப்படுத்தல் உள்ளிட்ட அரசியலமைப்பு சீர்த்திருத்தம் பலவற்றிற்கு 19ஆவது அரசியலமைப்பு சீர்த்திருத்தம் மூலம் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் ஒரே தினத்தில் நடத்தப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்படுமானால், ஜனாதிபதி பதவி ரத்து செய்யப்படும் என அதில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.