யாழ்ப்பாணத்தை அடைந்தது முதல் தபால் ரயில்-

yaal mail rain24 வருடங்களுக்கு பின்னர் முதலாவது தபால் ரயில் இன்றுகாலை 7.25 மணிக்கு யாழ்.புகையிரத நிலையத்தை அடைந்தது. முதலாவது தபால் ரயிலை வரவேற்கும் விதத்தில் வரவேற்பு நிகழ்வு மற்றும் தபால் ஊர்வலம் என்பவற்றை யாழ்.பிரதம தபால் நிலையத்தினர் நடத்தியிருந்தனர். கொழும்பிலிருந்து தபால் ரயிலில் வந்த தபால் பொதிகளை பொறுப்பேற்ற இலங்கை தபால்மா அதிபர் ரோஹண அபேவர்த்தன, அவற்றை தபால் பொதி சுமப்பவரிடம் கையளித்தார். இதனையடுத்து, பாரம்பரிய தபால் காவும் முறையான, வண்டிலில் தபால் கொண்டு செல்லும் முறையில் தபால் பொதி சுமப்பவர் யாழ்.புகையிரத நிலையத்தில் இருந்து தபால் பொதிகளை யாழ்.பிரதம தபால் நிலையத்திற்கு கொண்டு சென்றார். இனிவரும் காலங்களில் பாரம்பரிய முறையன்றி, வாகனத்திலேயே தபால் நிலையம் வரை தபால்கள் கொண்டுசெல்லப்படும் என தபால் மா அதிபர் ரோஹண அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இராமர் பாலத்தைப் பாதிக்காத வகையில் கடல் வழிப் பாதை-

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான புதிய கடல்வழிப் பாதையொன்றை அமைப்பது தொடர்பில் இந்தியா கவனம் செலுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்பரப்பில் மேற்கொள்ளப்படவிருந்த சேது சமுத்திரத் திட்டம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளமையே இதற்கு காரணமாகும். இதற்கமைய இராமர் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய கடல் வழிப் பாதையை அமைப்பதற்கு இந்தியா உத்தேசித்துள்ளது. இத்திட்டம் தொடர்பான பத்திரம் விரைவில் இந்திய மத்திய அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.

வாக்காளர் இடாப்பில் பெயர்களை இணைக்க 80ஆயிரம் மேன்முறையீடு-

2014ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளடக்கப்படாத சுமார் 80,000 பேரிடம் இருந்து மேன்முறையீடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. தற்போது மேன்முறையீடுகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். இந்த விசாரணைகளில் பங்கேற்காதவர்களின் மேன்முறையீடுகள் தொடர்பில் கருத்திற் கொள்ளப்போவதில்லை எனவும் தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டுகின்றது. எவருக்கேனும் விசாரணைகளில் பங்கேற்க முடியாத பட்சத்தில், முன் அறிவிப்பின் ஊடாக திகதியை மாற்றிக்கொள்ள அல்லது கடிதம்மூலம் அதிகாரத்தை வழங்கி ஒருவரை விசாரணைகளில் கலந்துகொள்ளச் செய்யமுடியும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2014ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியல் எதிர்வரும் 31ஆம் திகதி உறுதி செய்யப்படவுள்ளதுடன், அதனை கிராம உத்திகேத்தர் அலுவலகம், பிரதேச செயலர் அலுவலகம், உள்ளூராட்சி மன்றங்களில் காட்சிப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசு கவி சிவசுப்பிரமணியம் அவர்களது வழித்துணை கவிதை நூல் வெளியீடு-

254 673கடந்த 12.10.2014 அன்று மூளாய் ஊரைச் சேர்ந்த ஆசு கவி சிவசுப்பிரமணியம் அவர்களது வழித்துணை கவிதை நூல் வெளியீடு சுழிபுரம் விக்டோறியாக் கல்லூரி றிச்வே மண்டபத்தில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.பு.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் கலந்துகொண்டு வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் வாழ்த்துச் செய்தி வழங்கினார். அவர் அங்கு உரையாற்றுகையில், ஆசு கவி அவர்கள் அவர்களது தொடர்ச்சியான கவி இயற்றும் தன்மையினால் ஆசு கவி எனப் போற்றப்படுகின்றார். நான் அறிந்த காலம்முதலாக அமைதியான சுபாவம் தழிழிலும் சைவத்திலும் தளராத பற்றுக் கொண்ட ஒரு பற்றாளனாகவே கண்டு கொண்டேன். இவற்றுக்கும் அப்பால் ஒரு மனிதத்துவத்தின் மகத்துவத்தை பிறருக்கு எடுத்துக்காட்டுவதற்காக வாழ்ந்து வரும் ஓருவராகவே அடையாளப்படுத்த முடியும். மூளாய் வதிரன் புலோ சித்திவிநாயகர்மீது கொண்ட மட்டற்ற ஈடுபாட்டினால் அவ் ஆலய முன்றலில் சிறிது சிறிதாக எழூதப்பட்ட கவிகளின் தொகுப்பாக ஒரு தழிழ் வழிகாட்டியாக எமது இவ் உலக வாழ்கையின் தத்துவங்களை செல்கின்ற ஒரு ஏடாக எமது வரலாற்றை எடுத்து இயம்பும் ஒரு நூலாக இது வெளிவருவது வரவேற்த்தக்கது போற்றத் தக்கது. இவ்வாறான நூல் காலத்தின் தேவைக்குரிய ஒரு நூலாக கருதுகின்றேன். இவ்வாறே யாழ்பாணத்தின் வரலாற்றை அன்று எடுத்தியம்பிய பரராஜசேகரம், செகராஜசேகரம் போன்ற நூல்களின் வாயிலாக அறியக்கூடியதாக உள்ளது. இது போன்றே அன்றைய கால கட்டத்தில் ஆறுமுகநாவலர் பெருமான் சைவத்துக்கும் தழிழுக்கும் ஆற்றிய மிகப்பெரிய தொண்டால் இன்று நாங்கள் எமது மதத்தின் பல பண்புகளை பார்க்கின்றோம். இவ்வாறே ஆசு கவிஅவர்கள் ஆற்றும் தொண்டும் காலத்தினால் போற்றப்பவேண்டியது. இந்த வகையில் இக் காலத்தின் நாவலர் என்று ஆசுகவியை போற்றுவது சிறந்த ஒன்றாகவே அமைந்து விடும். இவ்வாறான இவரது கவிதை எழுதும் பண்பு இவரது 18வது வயதில் இருந்தே ஆரம்பிக்கப்பட்ட ஒரு பண்பு என்பதனையும் நான் அறிந்தேன். இந்த வகையில் மிக நீண்ட காலம் இவரது எமுத்துப் பண்பு வளர்ந்த ஒன்றாக மட்டுமல்லாது இவருடனே கூடிப் பிறந்த ஒன்றாகவே கருதுகின்றேன். இதனாலேயே அறிஞர்கள் கூறுவார்கள் கவிஞர்கள் உருவாவதில்லை கவிஞர்கள் பிறக்கின்றார்கள் என்று. இவர்களது பெறுமதி மதிக்க முடியாத இவ் பணியினை பயனுறுதி வாய்ந்த வகையில் சமூகத்தில் உள்ளவர்கள் மற்றவேண்டும் என்பதற்கு மேலாக மனிதத்துவத்தினையும் அதன் மகத்துவத்தின் பண்பினையும் என்றும் போற்றக் கூடியவர்களாக மாற்றமுற வேண்டும் என்றார்.

வவுனியா கைத்தொழில் பேட்டை, பலாங்கொடை தேயிலை தொழிற்சாலை தீ விபத்து-

வவுனியா ஸ்ரீநகர் கைத்தொழில் பேட்டையிலுள்ள உருக்குவேலை கடையொன்றில் நேற்று பிற்பகல் தீபரவியுள்ளது. தீயினால் கடையிலிருந்து பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர். கடை ஊழியர்கள் மதிப போசனத்திற்காக வெளியில் சென்றிருந்தபோதே தீ பரவியுள்ளதுடன், பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீயினால் சேதமடைந்துள்ளன. மின்சார ஒழுக்கின் காரணமாகவே தீப்பற்றியுள்ளது என ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர். இதேவேளை, பலாங்கொடை வெலேகொட பகுதியிலுள்ள தேயிலை தொழிற்சாலை இன்று அதிகாலை பரவிய தீயினால் முற்றாக சேதமடைந்துள்ளது. இதனால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வடக்குக்கான தொடருந்து சேவை புதிய மைல்கல் – இந்தியா-

வடக்கு மாகாணத்துக்கான தொடரூந்து பாதை அமைப்பு, இலங்கை இந்திய நாடுகளுக்கு இடையில் வரலாற்று மைல் கல் என்று இந்தியா தெரிவித்துள்ளது. இந்த தொடரூந்து பாதையின் மூலம் இலங்கை இந்திய நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை மேலும் ஸ்திரப்படுத்தும் என்று கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. இலங்கை,இந்தியாவின் நீண்டநாள் பங்காளி என்ற அடிப்படையி;ல் இலங்கையின் சமாதானம், நல்லெண்ணம் மற்றும் அபிவிருத்திக்கு இந்;தியா தமது உதவியை நீடிக்கும் என்றும் உயர்ஸ்தானிகரம் குறிப்பிட்;டுள்ளது இதேவேளை வடக்கு தொடரூந்து சேவையின் மற்றும் ஒருக்கட்டம் தலைமன்னார் வரையில் நீடிக்கப்படுவதன் மூலம் இந்திய இலங்கை கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்க ஏதுவாக அமையும் என்றும் உயர்ஸ்தானிகரம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது

வெள்ளவத்தை-யாழுக்கு ரூ.52.60 டிக்கெட் விநியோகம்-

யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவை நேற்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டது. எனினும், அந்த சேவையில் பயணிப்போருக்கான அனுமதி சீட்டு இன்னும் அச்சடிக்கப்படவில்லை. புகையிரதத்தில் நேற்று பயணித்தோருக்கு மாற்றுபாதை பயணத்துக்கான அனுமதி சீட்டே வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இன்றைக்கு 24வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்துக்கு விநிநோக்கிக்கப்பட்ட அனுமதி சீட்டுகளின் ஒரு தொகுதி வெள்ளவத்தை ரயில் நிலையத்தில் மட்டும் இருந்துள்ளது. யாழ்ப்பாணத்தை நோக்கி நேற்று பயணித்த பயணிகளுக்கு அந்த அனுமதி சீட்டுக்களே வழங்கப்பட்டுள்ளன. வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு மூன்றாம் வகுப்புக்கான கட்டணமாக இன்றைக்கு 24 வருடங்களுக்கு முன்னர் ரூ.52.60 அறவிடப்பட்டுள்ளது. இன்றைய கட்டண விபரங்களின் பிரகாரம் 320 ரூபாவாகும். இதேவேளை, கல்கிசை-யாழ்ப்பாணம் இருவழி நகர்சேர் கடுகதி புகையிரதத்தில் 78 பயணிகள் நேற்று பயணம் செய்ததாக ரயில்வே நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 நீதிபதியின்றி இயங்கும் நீதிமன்றம்-

வவுனியா மேல் நீதிமன்றத்தில் கடமையாற்றிய மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவர் ஓய்வுபெற்றுச் சென்றதன் பின்னர் அந்த இடத்திற்கு வேறு ஒருவர் நியமிக்கப்படாத காரணத்தினால் கடந்த ஒன்றரை மாதங்களாக முக்கியமான வழக்குகள் விசாரணை செய்யப்படாமல் பிற்போடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு எதிரான வழக்குகளும் குற்றவியல் வழக்குகளுமே மேல் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படுகின்றன. இவற்றில் குறிப்பாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான வழக்குகள் பெரும் எண்ணிக்கையில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீதிபதி இல்லாத காரணத்தினால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் தொடர்ச்சியாகப் பின்போடப்பட்டு வருவதாகவும் தாங்கள் நீதிமன்ற விசாரணைக்காக அலைய நேர்ந்துள்ளதாக சந்தேக நபர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். புதிய நீதிபதி ஒருவர் நியமிக்கப்படாத காரணத்தினால் வழக்கு விசாரணைகள் மட்டுமல்லாமல், மேல் நீதிமன்றத்தின் நிர்வாக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த வவுனியா சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் கந்தசாமி தயாபரன், இது குறித்து பிரதம நீதியரசரின் கவனத்திற்கும் ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.