இராணுவத்தினரின் கௌரவம் பாதுகாக்கப்படும் – ஜனாதிபதி

maithriஇராணுவத்தினரின் கௌரவம் பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினரின் கௌரவத்ததையும் சுயமரியாதையையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
படையினரை பலவீனப்படுத்த அனுமதியளிக்கப்படமாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்த வீரர்களின் பாதுகாப்பை அரசாங்கம் உரிய முறையில் பாதுகாக்கும் என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணிகளில் இலங்கைப் படையினருக்கு கூடுதல் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ் கைதிகளை பிணையில் விடுவிக்க இலங்கை அரசு முடிவு

ranilஇந்த நடவடிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வாரம் முதல் தொடங்கும் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் மனோ கணேசன் கூறினார்.
பிரமதருடனான இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களான சுவாமிநாதன், திலக் மாரப்பன ஆகியோரும் காவல்துறை தலைவர் மற்றும் சட்டமா அதிபர் அலுவலக உயரதிகாரிகள் ஆகியோரும் பங்குபெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை என இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பிணை வழங்குவது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்பட்டதாக தேசியக் கலந்துரையாடல்களுக்கான அமைச்சர் மனோ கணேசன் கூறுகிறார்.
இந்தக் கூட்டத்தில் சட்டத்துக்கு உட்பட்டு, இயன்ற அளவில் தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் மீது போலிஸ் விசாரணைகள் முடிவின்றி நீண்டகாலமாக நடைபெற்று வருகின்றன என பாதிக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

அத்துமீறி மீன்பிடித்த 23 இந்திய மீனவர்கள் கைது

Fishஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 23 பேரை காங்கேசன்துறை கடற்படையினர் கைதுசெய்து ஒப்படைத்துள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை உதவிப்பணிப்பாளர் பாலசுப்பிரமணியம் ரமேஸ்கண்ணா இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இந்திய தமிழக பகுதியைச் சேர்ந்த 23 மீனவர்கள் 4 படகுகளில், அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் 2 படகுகளில் 13 மீனவர்களும், பருத்தித்துறை கடற்பரப்பில 2 படகுகளில் 10 மீனவர்களும்; அத்துமீறி மீன்பிடித்தபோது காங்கேசன்துறை கடற்படையினரால் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மீனவர்களிடம் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும், குறித்த மீனவர்களை ஊர்காவற்துறை மற்றும் பருத்தித்துறை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும், யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை உதவிப்பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை இலங்கை மீனவர்கள் 26 பேரை இந்திய கடற்பாதுகாப்பு அததிகாரிகள் கைது செய்துள்ளனர். இரண்டு படகுகளுடன் கைது செய்யப்பட்ட இந்த மீனவர்கள் இந்திய கடற்பாதுகாப்பு அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சவுதி அரேபியாவில்  பள்ளிவாசல் மீது தாக்குதல்

saudiசவுதி அரேபியாவில் ஒரு பள்ளிவாசல் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன
நாட்டின் தெற்கேயுள்ள நர்ஜான் நகரில் தற்கொலை குண்டுத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாகக் கூறும் அரச ஆதரவு தொலைக்காட்சியான அல் அரேபியா, அதில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறுகிறது.
இந்த ஆண்டு சவுதி அரேபியாவில் பல பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
அதற்கு ஐ எஸ் அமைப்பு தாங்களே பொறுப்பு என்றும் கூறியுள்ளது. அந்தத் தாக்குதல்கள் அனைத்தும், ஷியா சிறுபான்மை இனத்தவரை இலக்கு வைத்தே நடத்தப்பட்டன.
ஷியா முஸ்லிம்களின் ஒரு பிரிவான இஸ்மைலிகள் அதிகமாக இருக்கும் நர்ஜான் பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீதே இப்போது தாக்குதல் நடைபெற்றுள்ளது.

சித்தப்பாவை தாக்கி பணத்தை கொள்ளையிட்ட பெறாமகள்

Robberதனது தாயின் சகோதரியின் (சித்தியின்) கணவனை கூரிய ஆயுதத்தினால் தாக்கி அவரிடமிருந்த ஒரு இலட்சத்து 48 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட முயற்சித்த குற்றச்சாட்டில் பெண் ஒருவரை ஹட்டன் பொலிஸார் நேற்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.
சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் செய்துவரும் தனது சகோதரி அனுப்பிய பணத்தை சேமிப்பிலிருந்து எடுத்துக்கொண்டு ஹட்டன் நகரிற்குச் சென்றுகொண்டிருந்த போதே குறித்த நபர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு, அவரிடம் இருந்த பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது. உடலை முழுமையாக மறைக்கும் வகையிலான ஆடை ஒன்றை அணிந்துவந்த பெண்ணே பணத்தை கொள்ளையிட்டுச் சென்றதாக வெலிஓயா மேல்பிரிவைச் சேர்ந்த காயமடைந்த நபரின் மனைவி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து விரைவாக செயற்பட்ட பொலிஸார் சந்தேக நபரை மடக்கிப் பிடித்துள்ளதோடு கொள்ளையிட்ட பணத்தையும் அவரிடமிருந்து மீட்டுள்ளனர். அத்துடன் சம்பவத்தில் காயமடைந்த நபர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் 31 வயதுடைய பெண். காயமடைந்த நபரின் மனைவியின் சகோதரியுடைய மகள் எனவும். சந்தேக நபரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவுசெய்துகொண்டிருந்த வேளையில் பொலிஸ் நிலையத்தில் அமைதியின்மையை தோற்றுவித்ததோடு பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சந்தேகநபரான குறித்த பெண் மதுபோதைக்கு அடிமையானவர் என்றும் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
தான் அதிகளவான கடன்சுமைக்கு முகங்கொடுத்திருப்பதால் இந்த பணத்தை கொள்ளையிட திட்டமிட்டதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்திருக்கிறார். சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துவரும் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.