கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டு தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதே பேரவையின் நோக்கம்-சித்தார்த்தன் எம்.பி-
எஸ் நிதர்ஷன்

sithadthanதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவோ அல்லது மாற்றுத் தலைமையை ஏற்படுத்துவதற்காகவோ தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்படவில்லை. தமிழ் மக்கள் பேரவையானது கூட்டமைப்பிற்குத் துணையாகவும் அதேநேரம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டமொன்றை முன்வைப்பதற்காகவுமே உருவாக்கப்பட்டிருப்பதாக புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் கூட்டமைப்பிற்குள் குழப்பம் என்று கூறுவது தவறு. ஆனால் கருத்து முரண்பாடுகள் இருக்கின்றன. இவை பேசித் தீர்க்கப்பட வேண்டும். குறிப்பாக முதலமைச்சர் விக்னேஸ்வரனும் கட்சியின் தலைவர் சம்பந்தனும் முரண்பாடுகளைத் தவிர்த்து ஒன்றாக இணைந்து கொள்வது காலத்தின் தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டு இரண்டாபது அமர்வும் நடைபெற்று முடிந்திருக்கின்றது. இதில் இணைந்;து கொண்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்கள் பேரவையானது பரந்துபட்ட அளவில் மக்கள் பங்குகொள்ளும் அமைப்பாகவே உருவாக்கப்பட்டிருக்கின்றது. இவ்வமைப்பானது மக்களின் அப்பிராயங்களைப் பெற்றுக்கொண்டு தீர்வை ஏற்படுத்துகின்ற நோக்கத்தின் அபப்படையிலேயே தற்போது உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த அமைப்பில் நாங்கள் மிகத் தெளிவான நிலைப்பாட்டிலேயே இணைந்துகொண்டிருக்கின்றோம்.

அதேநேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கின்ற அல்லது பலவீனப்படுத்துகின்ற நோக்கம் இருந்தால் நாங்கள் இணையமாட்டோம், தொடர்ந்து இருக்கவும் மாட்டோம் என்று ஏற்கனவே மிகத் தெளிவாக ஒரு விடயத்தையும் பேரவையினருக்கு நாங்கள் கூறியிருக்கின்றோம்.

அது மட்டுமல்லாமல் குறிப்பாக தீர்வுத் திட்ட வரைபுகள் முன்வைக்கப்பட்டு தீர்வு நோக்கி பயணிக்கும் வரைக்கும் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்துவதையோ அல்லது தலைமையை மாற்றுவதையோ நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதையும் மிகத் தெளிவாக கூறியிருக்கின்றோம்.

இந்த அமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்று அமைப்பு அல்ல. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக இயங்கத் தயராக இருக்கின்ற ஓர் அமைப்பாகவே செயற்படும். அது அரசியலில் அல்ல, தீர்வு விடயத்தில் என்றும் பேரவையினர் தெரிவித்திருக்கின்றனர். இதன் பின்னரே நாங்கள் பேரவையில் இணைந்து கொண்டிருக்கின்றோம்.

இந்நிலையில் தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆயினும் அத்தகைய சர்ச்சைகள் தொடர்பில் நாங்கள் தெளிவாகவே இருக்கின்றோம். ஏனெனில் நாங்கள் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்திருக்கின்றோம். இதற்கமைய பேரவையினர் முன்னெடுக்கின்ற செயற்பாடுகளுக்கு ஆதரவை வழங்கி அவர்களுடன் இணைந்து செயற்படவிருக்கின்றோம்.

அதேநேரம் தமிழ் மக்களின் கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் அங்கீகரித்து தமது முழுமையான ஆதரவை வழங்கியிருக்கின்றனர். கூட்டமைப்பைத்தான் மக்கள் அங்கீகரித்து அவர்களின் ஆதரவுடன் தான் அதிகாரம் பெற்ற கட்சியாக கூட்டமைப்பு விளங்குகிறது. ஆகவே கூட்டமைப்பிற்குள் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது. அவ்வாறு குழப்பம் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை.

தமிழ் மக்களுகு;கு பல சவால்கள் காத்திருக்கின்றன. குறிப்பாக அடுத்து வரும் மாதங்களில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசியல் கட்சிகள் பலவும் பல்வேறு யோசனைகளை முன்வைக்கவிருக்கின்றன. இவை தொடர்பில் நாங்கள் அனைவரும் மிகத் தெளிவாக செயற்படவேண்டும்.

குறிப்பாக கூட்டமைப்பு தீர்வு யோசனைகளை முன்வைக்கின்ற அதேவேளையில் தமிழ் மக்கள் பேரவையும் தமது தீர்வு யோசனைகளையும் முன்வைக்கும். இவையெல்லாம் மக்களின் வெளிப்பாடாக இருக்குமென்றே நினைக்கின்றேன். அதனைவிடுத்து கூட்டமைப்பிற்குள் குழப்பத்தை ஏற்படுத்தாது என்றும் நம்புகின்றேன்.

இதேவேளை கட்சியின் தலைவர் சம்பந்தனும் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஒன்றாக இணைந்து செயற்படுவது காலத்தின் கட்டாயம். இத்தகைய ஒற்றுமை தான் எமக்குப் பலம். இவ்வாறு அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்படுவது அவசியம். இதனை ஏற்படுத்த வேண்டிய தேவை அனைவருக்கும் உள்ளது என்றார். (நன்றி – தினக்குரல் 30 டிசம்பர் 2015)