கடற்படை முகாமுக்கு நிலங்களை சுவீகரிப்பதற்கு எதிர்ப்பு-

sdfdfdமுல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்களின் நிலங்களை கடற்படையினரின் தேவைக்காக கையகப்படுத்த அரசு எடுத்துள்ள முன்னெடுப்புக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அரசுக்கும் புலிகளுக்கும் இடையே இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பிரதேசம் வட்டுவாகல் பகுதியில் அவ்வகையில் 617 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பில் உயர் அரச அதிகாரிகள் பங்குபெற்ற கூட்டமொன்றும் அங்கு சனிக்கிழமை நடைபெற்றுள்ளது. அங்கு கடற்படையினருக்கான முகாம் ஒன்றை அமைப்பதற்காகவே நிலம் கையகப்படுத்தப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது மறைமுகமாக சிங்கள மக்களின் குடியேற்றத்துக்கு உதவும் நடவடிக்கை என, வட மாகாண சபையின் துணை அவைத் தலைவர் அண்டனி ஜெகநாதன் பிபிசிக்கு தெரிவித்துள்ளார். கடற்படையினருக்கு முகாம் அமைக்க 600 ஏக்கர் நிலம் தேவையில்லை என்றும், அந்தப் படைத்தளத்தை மையமாக வைத்து சிங்கள இராணுவத்தினரை குடியேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார். இநிநிலையில் பரம்பரை பரம்பரையாக தான் உட்பட அங்கு வாழ்ந்து வரும் மக்கள் தமது நிலங்களை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என்று சனிக்கிழமை நடைபெற்றக் கூட்டத்தில் தாங்கள் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

மயில் மாளிகை விவகாரம்: லியனகேவுக்கு அழைப்பு-

sadsdsdமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, 730 மில்லியன் ஷரூபாய் மதிப்புள்ள தனது பீகொக்(மயில்) மாளிகையை கொடுக்க முன்வந்தமை தொடர்பில் விசாரிப்பதற்காக, இலஞ்ச, ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு நாளை ஆஜராகுமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, கோடீஸ்வர வர்த்தகரும் இலங்கைத் தொழிலாளர் கட்சியின் தலைவருமான ஏ.எஸ்.பி லியனகே தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் தங்கி பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக, ராஜகிரியவிலுள்ள தனது பீகொக் மாளிகையை அவருக்கு வழங்க ஏ.எஸ்.பி லியனகே முன்வந்திருந்தார். எனினும், இறுதிநேரத்தில் மாளிகையை மஹிந்த ராஜபக்சவுக்கு கொடுக்கும் தனது முடிவை மாற்றிக் கொண்டதாக தெரிவித்த அவர், இது தொடர்பிலேயே தாம் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

பரணகம ஆணைக்குழு ஜனாதிபதியை சந்திப்பதற்கு கோரிக்கை-

maxwel paranagamaகாணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் பரணகம ஆணைக்குழு, ஜனாதிபதியுடனான சந்திப்புக்கான கோரிக்கையை முன் வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தலைவர் மெக்ஸ்வல் பரணகம இதனைத் தெரிவித்துள்ளார். அடுத்த மாதத்துடன் இந்த ஆணைக்குழுவின் அதிகாரக் காலம் நிறைவடையவுள்ளது.

எனினும் விசாரணைகளை நிறைவு செய்வதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுவதால், இதற்கான அதிகார கால நீடிப்பை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, இந்த சந்திப்புக்கான அனுமதி கோரப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த ஆணைக்குழு மீது நம்பிக்கையில்லை என்ற அடிப்படையில், அதனை கலைக்குமாறு பல்வேறு தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் வருகை உறுதியாகவில்லை-

al hussainஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹசைனின் இலங்கை விஜயத்துக்கான திகதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணையகத் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றனர்.

எதிர்வரும் பெப்ரவரி மாதத்துக்கு முன்னதாக அவர் இலங்கைக்கு விஜயம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த விஜயத்துக்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

அரசாங்கம் விடுத்த அழைப்பின் பேரில், கடந்த வருடம் ஜுன் மாதமே அவர் இலங்கைக்கு விஜயம் செய்வதாக இருந்தது. எனினும் பல்வேறு காரணங்களுக்காக இந்த விஜயம் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் பேரவையின் முதலாவது அறிக்கை-

tamil makkal avaiஅரசியல் தீர்வு சம்பந்தமாக கலந்தாலோசிக்கப்பட்ட தீர்மானங்களின் முதலாவது அறிக்கை எதிர்வரும் 30ம் திகதி வெளியிடப்படுமென, தமிழ் மக்கள் பேரவையின் உப குழுவின் உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று தமிழ் மக்கள் பேரவையின் உபகுழுவின் கன்னி அமர்வு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பமாகியது. இதன் பொருட்டு பிற்பகல் 3.30 அளவில் நல்லூர் ஆலயத்திலும் அதனைத் தொடர்நது யாழ். மரியன்னை பேராலயத்திலும் வழிபாட்டில் ஈடுபட்டனர்.

பின்னர் யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. சுமார் மூன்று மணித்தியாலயங்கள் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடல் இரவு 7.00 மணியளவில் நிறைவடைந்தது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு கூறினார்.

அத்துடன் தீர்வு திட்டங்களை முன்வைப்பதற்கான கலந்துரையாடல்களை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதுடன், 30ம் திகதி முதல் அறிக்கை ஊடகங்களுக்கும் பொது மக்களுக்கும் கையளிக்கப்படுமென்றும் அவர் கூறினார். தமிழ் மக்களின் பிரச்சினைகள் மற்றும் அரசியல் தீர்வு திட்டங்களை முன்வைப்பதற்கு பல்வேறு நிபுணத்துவம் வாய்ந்தவர்களுடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் 30ம் திகதி அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர், மார்ச் மாதம் இறுதி அறிக்கைகள் வெளியிடப்படும் எனவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசியல் யாப்பு மற்றும் தீர்வுத் திட்டங்கள் குறித்த கருத்துக்களை தமிழ் மக்கள் பேரவையினால் வெளியிடப்பட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறும், அதேவேளை, தமிழ் மக்கள் பேரவையினால், முகவரி ஒன்று வெளியிடப்படும் அந்த முகவரிக்கு கருத்துக்களை அனுப்பி வைக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதேவேளை, முஸ்லிம் பிரதிநிதிகள் உள்வாங்கப்படவில்லை. எதிர்காலத்தில் முஸ்லிம் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வீர்களா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளிக்கையில், முதலாவது அறிக்கையில் என்னென்ன விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்ற அறிக்கை வந்த பின்னர். 2 மாதங்கள் இருக்கின்றன. அதற்குள் யார் யாருடன் பேச வேண்டுமோ அவர்களுடன் எல்லாம் பேசப்படும் என்று குறிப்பிட்டார்.