வட மாகாணசபை ததேகூ உறுப்பினர்கள் – முதலமைச்சர் சந்திப்பில் ‘இணக்கம்’

vigneswaranஇலங்கையில் வடக்கு மாகாணசபையின் ஆளும் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் இடையில் இன்று புதனன்று மாலை அவருடைய அலுவலகத்தில் நடைபெற்ற இரண்டாவது சந்திப்பில் சர்ச்சைக்குரியதாக இருந்த பல விடயங்களில் இணக்கம் காணப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

வினைத்திறன் மிக்க ஒரு சபையாக வடமாகாண சபையை செயற்படுத்துவது, தமிழ் மக்கள் பேரவையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இணைந்து கொண்டிருப்பது, அரசியல் தீர்வுக்கான விடயத்தில் வடமாகாண சபையின் பங்களிப்பு ஆகிய விடயங்கள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கின்றன.வினைத்திறன் மிக்க சபையாக வடமாகாண சபையை செயற்படுத்துவது தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருப்பதாக இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்களில் ஒருவரான சிவாஜிலிங்கம் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படுவது குறித்த விடயத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையில் இணைந்து செயற்படுவது முரணான நிலைப்பாடாகும் சுட்டிக்காட்டப்பட்டு உறுப்பினர்கள் சிலரால் விளக்கம் கோரப்பட்டிருந்தது. அதற்குரிய விளக்கத்தை முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தக் கூட்டத்தில் அளித்திருந்தார்.

‘தமிழ் மக்கள் பேரவையில் இணைத் தலைவராக செயற்படுவதற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது, அதன் ஏற்பாட்டாளர்கள் இந்தப் பேரவை அரசியல் கட்சியாக மாற்றமுறாது, எந்தவொரு அரசியல் கட்சிக்கும் எதிராகச் செற்படாது, தமிழ் மக்களின் உரிமை நலன்களுக்காகக் குரல் கொடுப்பதே பேரவையின் நோக்கம் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்ட பின்பே அதில் இணைந்து’ செயற்பட்டதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

அத்துடன், வடமாகாண சபைக்கான தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கொள்கைகளின் அடிப்படையில் அரசியல் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளையே தமிழ் மக்கள் பேரவையும் முன்னெடுக்கவுள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

அரசியல் தீர்வில் பங்களிப்பு செய்வது தொடர்பில் வடமாகாண சபையில் விவாதிக்கப்பட்டு, பிரேரணை ஒன்றின் ஊடாக உபகுழு ஒன்றை நியமித்து, அரசியல் தீர்வுக்குரிய ஆலோசனைகளை முன்வைப்பது என்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்ற போதிலும், முடிவில் உறுப்பினர்களிடையே சபையில் ஆராயப்பட்ட விடயங்களில் இணக்கப்பாடு ஏற்பட்டதாக சிவாஜிலிங்கம் கூறினார