இராவ்பகதூர் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் 117ம் ஆண்டு சிரார்த்த தின விழாவும், கண்ணகை முன்பள்ளிக்கான நிரந்தர கட்டிட திறப்பு விழாவும் புதுவருட தினமான 01.01.2017 திங்கட்கிழமை முற்பகல் 10.00மணியளவில் ஏழாலை அருள்மிகு கண்ணகை அம்பாள் தேவஸ்தான வடகரை வீதியில் இராவ்பகதூர் சி.வை தாமோதரம்பிள்ளை ஞாபகார்த்த சபையின் தலைவர் திரு. இ.பேரின்பநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், ச.கிருபானந்தன் (உதவிக்கல்விப் பணிப்பாளர் -முன்பள்ளி, வலிகாமம் கல்வி வலயம்), ச.சுதர்சன் (செயலாளர், வலிதெற்கு பிரதேசசபை) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். மேலும் கௌரவ விருந்தினர்களாக பொ.சந்திரவேல் (கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர், வலிதெற்கு பிரதேச காரியாலயம்), தி.பிரகாஜஸ் (முன்னாள் தவிசாளர், வலிதெற்கு பிரதேசசபை), திருமதி ம.தயாபாரன் (சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர்), திருமதி ஜே.வடிவாம்பிகை (உடுவில் கோட்ட முன்பள்ளி இணைப்பாளர்), திருமதி தே.புவனேஜ்வரன் (அதிபர் ஏழாலை சைவமகாஜன வித்தியாசாலை) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டு முன்பள்ளி சிறார்களின் பாண்ட் வாத்தியக் குழுவினரால் வரவேற்கப்பட்டு மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது.
இறைவணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெற்றதையடுத்து இராவ்பகதூர் சி.வை.தா ஞாபாக நிலையம் திறந்துவைக்கப்பட்டது. தொடர்ந்து வரவேற்புரை, தலைமையுரை, தொடக்கவுரை, விருந்தினர் உரைகள் இடம்பெற்று நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன. மேற்படி நிகழ்வில் பெருமளவிலான கிராம மக்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.